டில்லி வழியாக தெரியும் வெளிச்சங்களும் கொழும்பின் இக்கட்டு நிலையும்

ஆக்கம்: பீஷ்மர்
தீர்வை நோக்கிய பயணத்தில் தவிர்க்க முடியாதபடி ஏற்படும் பன்முக சிக்கற்பாடுகள் பற்றிய ஒரு குறிப்பு
  • பசில் ராஜபக்ஷவின் யாழ்ப்பாண விஜயமும் சில முடிவுகளும்.

  • தமிழ்த்தேசிய கூட்டணி- மன்மோகன் சந்திப்பு; அலைகளும் சுழிகளும்

  • மலையகத்தின் எதிர்ப்புகளும் முடக்கல்களும்

இலங்கையில் தமிழர் நிலைப்பட்ட பிரச்சினை வட்டத்தினுள் வட, கிழக்கை மையமாகக் கொண்டு இரண்டு முக்கிய முன்னெடுப்புக்கள் சென்ற வாரம் நிகழ்ந்துள்ளன. ஒன்று, ஜனாதிபதி ராஜபக்ஷவின் நிர்வாகத் துறைப் பொறுப்பாளராக இன்று மேற்கிளம்பியுள்ள பசில் ராஜபக்ஷ, யாழ்ப்பாணத்துக்கு 61 பேர் கொண்ட ஒரு குழுவுடன் (பத்திரிகை புகைப்படக்காரர்கள் உட்பட) சென்றமை. சில தீர்மானங்களுக்கு வந்தமை. இரண்டாவது டில்லியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.க்கள் குழுவொன்று கலைஞர் கருணாநிதியின் வழிநடத்தலின் பேரில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்தமை. இலங்கை மலையகத்தில் ஏற்பட்டுவரும் முக்கிய மாற்றம்பற்றி இறுதியில் நோக்குவோம்.

அரசியல் நீர்மட்டத்துக்கு மேலே இவை தெரிய குறிப்பாக கொழும்பில் நீர் மட்டத்துக்கு கீழ் வடக்கு, கிழக்குக்கு எதுவுமே கொடுக்கக் கூடாது என்ற நிலைப்பாடு வலுவடைந்துள்ளமையை காணலாம்.

நிபுணர்கள் குழுவின் 11 பேர் சமர்ப்பித்த ஆலோசனைகள் வடக்கு - கிழக்கு சம்பந்தமாக சில புதிய சோடனைகளை குறிப்பிட்டுள்ளது. அவைபற்றி ஆராய இதுவல்ல இடம். ஆனால், அந்த ஆலோசனை முழு நிபுணர் குழுவினதும் அல்ல அதற்கு மேல் அது சர்வகட்சியின் செயற்குழுவாலும் பின்னர் சர்வகட்சிகளாலும் ஆராயப்பட்டதன் பின்னரே ஜனாதிபதிக்கு செல்லும். அந்த இரண்டு மட்டங்களிலும் இந்த ஆலோசனைகளை எதிர்ப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால் அந்த மட்டங்களிலே விவாதிப்பதற்குகூட வரக்கூடாது என்பதன் அரசியலை புரிந்துகொள்வது சிரமமாகவுள்ளது.

இத்தகைய ஒரு கெடுபிடிச் சூழலிலேதான் திடீரென பசில் ராஜபக்ஷவின் குழு யாழ்ப்பாணம் சென்றது மாத்திரமல்லாமல், சில திடீர் முடிவுகளை எடுத்துள்ளதென்பதும் தெரியவருகின்றது. ஆனால், பசில் ராஜபக்ஷ குழுவும், ஏ-9 பாதை மூடப்பட்டிருக்க வேண்டும் என்ற அடிப்படையிலேயே செல்கின்றது. எனினும், யாழ்ப்பாணத்திலே கஷ்டங்கள் உள்ளன என்பதை இந்த விஜயம் மூலம் அரசாங்கம் ஒப்புக்கொள்ள வேண்டியுள்ளதென்றே கூறவேண்டும்.

ஏ-9 பாதை தொடர்ந்து மூடப்பட்டிருப்பதற்கான தேவை பற்றி பேசப்படவே இல்லை. பசில் ராஜபக்ஷ குழு, படையினர் தீர்மானங்களை எவ்வாறு ஏற்றிருக்கின்றது அல்லது எவ்வாறு ஏற்கவில்லை என்று தெரியவில்லை.

இந்த நகர்வுகள் நெற்றிப் புருவங்களை ஆச்சரியத்துடன் உயர்த்த சென்னை வழியாக டில்லியில் நேற்றைக்கு முன்தினம் நடைபெற்ற சந்திப்பு தெரியவந்துள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி.க்கள் குழுவொன்று கலைஞர் கருணாநிதியின் சிபார்சின் பேரில் இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. பேராசிரியர் சு.ப.வீரபாண்டியனும் உடன் சென்றுள்ளார்.

அச் சந்திப்புப் பற்றி கருத்துத் தெரிவித்துள்ள திரு. சம்பந்தன், தாம் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு நிலைமைகளை விளக்கியதாகவும், வட,கிழக்கு இணைவு உடைவுநிலையில் இருப்பதை எடுத்துக் கூறியதாகவும் சொல்லியுள்ளார்.

வடக்கு, கிழக்கு இணைவினை தாங்கள் முற்றுமுழுதாக ஆதரிப்பதாக இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார். அது மாத்திரமல்லாமல், கலைஞரின் வேண்டுகோளுக்கிணங்கவே சந்திக்க இணங்கிக் கொண்டமையையும் அவர் தெரிவித்திருக்கிறார். தமிழ்க் கூட்டமைப்பின் இம் முயற்சி பாராட்டப்பட வேண்டியது.

உண்மையில் கடந்த சில நாட்களாக கலைஞர் காட்டும் ஆர்வம் சாதாரண இலங்கைத் தமிழ் மக்களுக்கு நிறைந்த ஊக்கத்தை தருகின்றது. ஆயினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிலையில் எல்லாம் சுமுகமாக `ஓடவேண்டியது' மிக முக்கியமாகும்.

தேசிய கூட்டமைப்பின் இளம் எம்.பி.க்கள் பலர் வெளிநாடுகளில் உள்ளமை தெரிந்ததே. எனவே அவர்கள் உடனடியாக வந்துவிட முடியாதென்பதும் உண்மையே. சென்ற எம்.பி.க்கள் ஏறத்தாழ சிரேஷ்ட நிலையினர் என்பதும் உண்மையே. அது மாத்திரம் அல்லாமல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இடம்பெறும் கட்சிகள் ஒவ்வொன்றினதும் பிரதிநிதிகள் இருந்துள்ளனர் என்பதும் உண்மையே. திரு சம்பந்தன் இத்தகைய சந்திப்புக்களில் மிக்க திறனுடன் நடந்துகொள்பவர் என்பதும் உண்மையே. கடந்த வாரம் தனது மீள் கன்னிப் பேச்சினால் பாராளுமன்றத்தின் கவனத்தையும், தமிழ் மக்களின் ஆர்வத்தையும் ஈர்த்துள்ள புதிய எம்.பி.சிறிகாந்தா அவர்களும் இத்தகைய சந்தர்ப்பங்களில் நன்கு பயன்படுத்தப்பட வேண்டியவர்.

என்ன காரணங்களுக்காக அவரைச் சேர்த்துக்கொள்ளவில்லை என்பது பற்றி சாதாரண ஈடுபாட்டாளர்களாகிய எமக்குத் தெரியாது. உண்மையில் ஏதாவதொரு தவிர்க்க முடியாத காரணத்தினாலேயே அவர் செல்லாதிருந்திருக்கலாம். ஆனால், பாராளுமன்ற குழுத் தலைவர் என்கிற முறையில் சம்பந்தனுக்கு பாரிய ஒரு பொறுப்புள்ளது. அதாவது அந்த 22 எம்.பி.க்களினதம் திறமைகளை சரிவரப் பயன்படுத்துவதாகும்.

அதற்கும் மேல் மிக மிக அவசியமானது கூட்டவை அணியினர் ஒன்றாக இயங்குகின்றனர் என்ற மனத்திருப்தி மக்களிடையே ஏற்படுத்தப்படுவதாகும். இந்த விடயத்தில் முதுநிலை அங்கத்தவர்களான சம்பந்தன் அவர்களுக்கும், மாவை சேனாதிராஜா அவர்களுக்கும் நிறைய பொறுப்புண்டு.

டில்லிக்கு சென்ற குழுவின் சு.ப.வீரபாண்டியன் அவர்கள் இடம்பெற்றிருப்பது முக்கியமானதொரு அரசியல் நிகழ்ச்சியாகும். சந்திப்புப் பற்றி வந்த புகைப்படங்களை பார்க்கும்போது சு.ப.வீ .அவர்கள் முக்கியப்பட்டு நிற்பதையும் காணலாம்.

திராவிட இயக்க நிலையில் பேராசிரியர் சு.ப.வீ இன்று மிக முக்கியமானவர். அவருடைய அனுசரணை வலுவுடையதாகும். ஆனால், அதேவேளையில் இலங்கைத் தமிழர்களுடைய உரிமைப் போராட்டத்துக்கான தமிழக ஆதரவு ஒரு குறிப்பிட்ட பக்கச்சார்பு இல்லாமலிருக்க வேண்டியது அவசியமாகிறது. வை.கோவுடனான உறவு அதற்கு முன்னர் எம்.ஜி.ஆர்.உடனான உறவுகள் சென்ற வாரம் வரை அணுகுமுறைகளை சிக்கற்படுத்தியதை அறிவோம். எனவே, இந்த விடயங்களில் மிகுந்த நிதானத்துடன் நடந்துகொள்வது அவசியமாகிறது. சென்னையிலுள்ள இலங்கை தூதரகத்தின் பொறுப்பாளர் சில சந்திப்புகளை ஏற்படுத்தி வருகின்றமையும் தெரியாமலிருக்க முடியாது. துரதிர்ஷ்டவசமாக சென்னை நிலையில் நீருள் சுழியாக இன்னுமொரு ஓட்டமும் உள்ளது.

தமிழகத்துக்கு திருமலை, மன்னார் அகதிகள் செல்ல விடுதலைப் புலிகள் காரணமாகவே பலர் வருகின்றனர் என்கிற கூற்றினை சற்று உரக்கவே எடுத்துக்கூறும் ஒரு போர்க்குழு உள்ளது. எனவே தான் திரு சம்பந்தன் அவர்களது பொறுப்பு மிகப் பாரியதாகிறது. அதேவேளையில், அவர் திறமையின் மீதுள்ள நம்பிக்கை இனந்தெரியாததொரு ஆறுதலையும் தருகின்றது.

மலையகத்தில் ஏற்பட்டுவரும் மாற்றம் முக்கியமானது. பெருந்தோட்ட தொழிலாளர் சம்பள உயர்ச்சி சம்பந்தமாக வளர்ந்துவந்த தேசிய ஒருமைப்பாட்டு நிலை ஏறத்தாழ உடைக்கப்பட்ட நிலையிலேயே இன்றுள்ளது. இவ்விடயத்தில் ஜே.வி.பி.யின் முன்னிலைப்பாடும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்த ஆதரவும் மிக முக்கியமானது. திரு சோதிலிங்கம் `தினக்குரல்'ல் சென்ற ஞாயிறு எழுதிய கட்டுரையில் இந்த எழுச்சியை மலையக தமிழரின் தேசிய எழுச்சியென்று குறிப்பிட்டிருப்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். ஆனால், அந்தப் போராட்டம் மிகுந்த சாதுரியமான முறையில் தொழிற்சங்க வட்டத்துக்குள் வைத்தே இப்பொழுது தோற்கடிக்கப்பட்டு விட்டது. ஆனால், மலையகத்தின் ஒருமைப்பாடு என்பது தொழிற்சங்க வட்டத்துக்குள் வைத்திருக்கப்பட முடியாதென்பது உணரப்பட வேண்டியது அவசியம். உண்மையில் மலையக தொழிற்சங்கங்கள் சில மலையகத் தமிழர்களின் இலங்கை நிலைப்பட்ட முக்கியத்துவத்தை தொழிற்சங்க வட்டத்துக்குள்ளேயே வைத்துக்கொண்டு தொழிற்சங்கங்கள் மூலமாக தங்கள் அரசியலை செய்கின்றனர். அரசியல் வழியாக தொழிற்சங்கங்களுக்கு வருதல் என்ற நிலைமையை மாற்றி தொழிற்சங்கங்கள் வழியாக அரசியல் பலத்தை ஏற்படுத்தவும் தக்கவைப்பதும் நடைபெறுகின்றன.

காலஞ்சென்ற திரு தொண்டமானிடத்து இந்த இரு துருவங்களையும் சமநிலையில் வைத்துப் பேணும் தூரதிருஷ்டியும் ஆளுமைப்பலமும் இருந்தது. இப்பொழுது அது இருப்பதாகக் கூறமுடியாது. மலையகம் தனது தனித்துவத்தையும், அதேவேளையில் அதன் இலங்கை நிலைப்பட்ட முக்கியத்துவத்தையும் உணர்ந்து பேணத்தக்க ஓர் அரசியல் அங்கு வளரவேண்டியது அவசியம். சென்றவாரம் ஏற்பட்ட திசைதிருப்பங்கள் இந்த தேவையை மிக அழுத்தமாக வற்புறுத்துகின்றன. இந்த விடயம் தனியே ஆராயப்பட வேண்டியதொன்றாகும்.

Please Click here to login / register to post your comments.