இனக்குழும பிரச்சினைத் தீர்வு புதிய பாணி

ஆக்கம்: பீஷ்மர்
தேசிய பாதுகாப்பு விடயங்கள் பற்றிப் பேசுவதற்கான புதிய உத்தியோகத்தரான ஹுலுகெல்ல என்பவர் ஜனாதிபதி இன்னும் இரண்டு வருடங்களுக்குள் இனக்குழுமப் பிரச்சினைக்கான ஒரு நல்ல தீர்வினை கொண்டு வந்து விடுவாரென தெரிவித்ததாக அரச ஊடகங்கள் சில கூறுகின்றன.

இனக்குழும பிரச்சினைக்கான தீர்வினை அரசாங்கமே முன்வைக்க வேண்டும்- இந்தக் கட்டத்தில் அது அரசாங்கத்தின் பணி என்பது தென்னாசிய, சர்வதேசிய நிலைப்பாடாகும்.

கடந்த மாதம் இந்த நிலைப்பாடு மிக வன்மையாகவே பேசப்பட்டு வந்தது. ஜனாதிபதியும் தனக்கு சற்று அவகாசம் வேண்டுமென்றும் இந்த விடயங்களிலே தனது நிர்வாகம் புதிதாக பலவற்றை செய்யப்பார்க்கிறது என்கின்ற முறையிலே பதில்களை கூறி வந்துள்ளார்.

ஆனால், இத்தகைய பிராந்திய, சர்வதேச கரிசனையும் ஜனாதிபதியின் பதிலுமென பந்து அங்குமிங்குமாக அடிக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் வட, கிழக்கின் அடிப்படைப் பிரச்சினைகளான கிழக்கில் நடக்கும் படைத்தாக்குதல்களும் யாழ்ப்பாண தீபகற்பத்துக்குள் நடைபெறுகின்ற படைநிலை கெடுபிடியும் இப்பொழுது ஏறத்தாழ மறக்கப்பட்டது என்பதிலும் பார்க்க கவனத்தில் எடுக்கப்படாத ஒரு காரியமாகி விட்டது.

அண்மையில் ஒரு நண்பர் யாழ்ப்பாணத்திலிருந்து தொலைபேசியில் பேசும்போது சொன்னார், இப்பொழுதுள்ள வேகத்திலே போனால் யாழ்ப்பாணத்தில் 18- 35 வயதுப் பிரிவினர் (ஆண்கள்) ஏழத்தாழ மாதாமாதம் 150 பேர் இறந்து கொண்டிருக்கிறார்கள். இதுவரையில் கிட்டத்தட்ட 500 பேர் வரையில் முடிக்கப்பட்டுவிட்டார்கள் என்றும் இன்னொருமட்டத்திலும் ஆட்கள் உயிரிழக்கின்றனர் என்றும் கூறினார். சுருக்கமாகச் சொன்னால் யாழ்ப்பாணத்தின் நிலை மிக மிக பயங்கரமாகவே உள்ளது.

ஆனால், கடந்த ஒரு வார காலத்துக்குள் சில நிகழ்ச்சி நடவடிக்கைகள் நடந்திருக்கின்றன என்று தெரிகின்றது. சென்ற வாரம் மீன்பிடி விடயத்திலிருந்த கெடுபிடி தளர்த்தப்பட்டிருப்பதாகக் கேள்வி. இலங்கை வானொலியின் தமிழ் சேவை யாழ்ப்பாணத்து பொருள் விலை நிலையில் பெரும் தளர்வு ஏற்பட்டிருப்பதாகக் கூறி சின்ன மீனின் விலை 880 ரூபாவிலிருந்து 400 ரூபாவுக்கு வந்துவிட்டதென மிகுந்த சந்தோஷத்துடன் கூறுகின்றது.

சிங்கள ஊடகங்களிலோ யாழ்ப்பாணத்துக்கு நிறைய சாமான்கள் எடுத்துச் செல்லப்பட்டு அங்கு அவை இருப்பில் வைக்கப்பட்டுள்ளன என்றும் கூறப்படுகின்றது. இத்தகைய விடயங்கள் பற்றிய அரசியல் கவனம் இப்பொழுது இல்லை.

ஆனால், நம்மிற்பலர் அரசியல் ஆர்வம் உள்ளவர்களாக இருக்கிறோம் என்கிற நினைப்பில் இப்பொழுது நிபுணர்குழுச் சிபாரிசுகள் பற்றி பேசித் திருப்திப்பட்டுக் கொள்கிறோம். ஆனால், சற்று நிதானமாக யோசிக்கும்பொழுது நிலைமை மேலெழுந்த வாரியாக தெரிவதுபோல் அல்லாமல் மிக மோசமாகவே செல்கின்றனவோ என்ற பயம் ஏற்படுகின்றது.

ஒரு நல்ல உதாரணம் இப்பொழுது நாட்டின் முன் வைக்கப்பட்டுள்ள நிபுணர் குழு அறிக்கைகளை எவ்வாறு நோக்குவது என்பதாகும்.

எம்மில்பலர் அந்த சிபாரிசுகள் பற்றி குறிப்பாக 11 பேருடைய சிபாரிசு பற்றிய விமர்சனங்களிலே ஈடுபட்டுள்ளோம். ஆனால், ஜனாதிபதியின் அலுவலக மட்டத்தில் சில (நிச்சயமாக அதிகம் வற்புறுத்தப்படாத) படிநிலைகள் உள்ளன. அந்த படிநிலை பின்வருமாறு;

1. நிபுணர் குழு

2. (அதற்கு மேல்) சர்வகட்சி மாநாடு

3. சர்வகட்சி மாநாடு ஏகமனதான ஒரு தீர்வுக்கு வருவது

4. அந்த ஏகமனதான தீர்வு ஜனாதிபதிக்கு செல்வது

5. (இதற்கு மேல்) சில தெளிவின்மைகள் உள்ளன

6. பாராளுமன்றத்தில் இவை எப்படி பார்க்கப்படும்- இந்த மட்டத்தில் உதவிக்காகவா யு.என்.பி.- சுதந்திரக் கட்சி கூட்டு.

மேலும், 5 இற்கும் 6 இற்கும் இடையில் மிகப் பெரிய சிக்கலொன்று உள்ளது. இந்த மட்டத்திலேதான் சிங்களத்துவ அபிப்பிராயங்கள் முக்கியம் பெறும். அது பிக்கு பெரமுன முதல் தேசபக்தர் ஒன்றுகூடல் வரை நீண்டதாக இருக்கும். அந்தக் கட்டத்திலே ஜனாதிபதி என்ன செய்வார். இதுவும் தெளிவில்லாத நிலையாகும்.

பெரும்பான்மை நிபுணர்கள் குழுவினால் சிபாரிசு செயற்பட்டவற்றின் நிறைகுறைகள் பற்றிய ஆராய்ச்சிகளில் இறங்குவதன் முன்னர் இப்பொழுது தோன்றியுள்ள புதிய அரசியல் சூழ்நிலையை மனங்கொள்ளல் வேண்டும். மிக முக்கியமான விடயம் என்னவென்றால் ஜே.வி.பி. சர்வகட்சி மாநாட்டிலிருந்து விலகிவிட்டதாகத் தெரிவிக்கின்றது. அதாவது நிபுணத்துவ குழுவின் அறிக்கைகளை ஆராய அது தயாராகவில்லை.

அப்படியானால், சர்வகட்சி மாநாட்டுக்கு என்ன நடைபெறும். ஏற்கனவே நாடறிந்த தமிழ் வெகுஜனக் கட்சிகள் எவையும் அங்கில்லை. மனோ கணேசன் கூட விலகிவிட்டார்.

இதுதான் நிலைமை என்றால், அடுத்து என்ன வருமென்று நாங்கள் யோசிக்கலாம். ஜே.வி.பி. யின் இந்த நடவடிக்கை ஜனாதிபதி அலுவலகத்தின் உதவிச் சக்தியாக சிலர் கேட்கிறார்கள். இந்த வினா கூட தேவையில்லாதது. ஏனெனில், இதன் மூலம் தென்னாசிய, சர்வதேசிய சமூகத்துக்கு ஜனாதிபதி தனது சிரமங்களை எடுத்துக் கூறுவதற்கான பெரிய வாய்ப்புக் கிட்டிவிட்டது என்றே சொல்ல வேண்டும். நிபுணர் குழுவின் மற்றைய 3 அறிக்கைகளும் ஜே.வி.பி. யின் நடவடிக்கைகளும் ஜனாதிபதிக்கு சார்பாகவே அமைந்துள்ளன என்று கூறுவதற்கு வாய்ப்புகள் நிறையவுள்ளன. ஏனெனில், இவற்றைக் காட்டி எல்லாப் பிரிவினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு தீர்வுக்கு வருவதில் தனக்குள்ள கஷ்டங்களை சர்வதேசிய தென்னாசிய நாடுகளுக்கு சொல்வது மாத்திரமல்லாமல் தமிழர் உரிமைப் போராட்டத்தின் கோரிக்கைகளும் குறைந்தபட்ச நிலைக்கு கொண்டு வரப்பட வேண்டிய தேவையும் உள்ளதென்று எடுத்துக் கூறுவதற்கான ஒரு வாய்ப்பு இப்பொழுது ஏற்படுகின்றது. இத்தகைய ஒரு நிலைவரம் மேலுமொரு சுவாரஸ்யமான நிலைமைக்கு தமிழ் மக்களை தள்ளும். அவர்கள் பேச்சுவார்த்தை மேசைக்கு வருவது மாத்திரமல்லாமல் அந்தப் பேச்சுவார்த்தை மேசையில் கேட்பவை ஜே.வி.பி., ஹெல உறுமய மறுக்க முடியாதளவுக்கு இருக்க வேண்டும் என்று கூட வரலாம். நிச்சயமாக ஒன்றினைக் கூறலாம். சர்வதேச நிலையில் ஜனாதிபதியின் நிலை நியாயப்படுத்தப்படலாம். அதற்கான குரல்கள் சில இப்பொழுது கிளம்பியுள்ளன. ஜனவரியில் நடைபெறவுள்ள இலங்கைக்கு உதவும் மாநாட்டில் ஜனாதிபதியின் 10 ஆண்டுத் திட்டம் உதவிக்கென ஆராயப்படவுள்ளதாம். இலங்கையில் எந்தவொரு நிறைவேற்று அதிகார ஜனாதிபதியும் "எனக்கு 6 வருடங்கள் போதும்" என்று சொன்னதும் இல்லை. சொல்லப்போவதுமில்லை.

கலாநிதி அன்ரன் பாலசிங்கத்தின் மறைவு சிங்கள ஊடகங்களில் சனிக்கிழமை வரை முக்கிய இடத்தைப்பெறவில்லை. ஞாயிறு பத்திரிகைகள் நிச்சயமாக விரிவாக ஆராயும்.

சிங்கள பொதுமக்கள் நிலையில் ஒரு நிம்மதி உணர்வும் காணப்படுகிறது என்கின்ற உண்மையை மறைக்காது மனங்கொள்ளல் அவசியமாகிறது.

திம்பு முதல் ஜெனீவா- 1 வரை பாலசிங்கத்தின் முன்வைப்புகளுக்கும் எடுத்துக்கூறல்களுக்கும் எதிராக தூக்கியெறிந்து பேச முடியவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. கலாநிதி பாலசிங்கம் தமிழர் மனக்குறைகளை அட்டவணைப்படுத்தியது மாத்திரமல்லாமல் அவற்றை சொல்லிய தோறணையும் முக்கியமானது. பேச்சுவார்த்தை மேசைக்கும் அறைக்கும் வெளியே பயங்கரவாதம் எனும் கோஷத்தை உச்சப்பயனுடன் பயன்படுத்தினாலும் பேச்சுவார்த்தை மேசை நிலையில் அந்த கோஷம் எழுப்பப்படுவதுமில்லை. கலாநிதி பாலசிங்கம் தமிழர் பிரச்சினைகளை எடுத்துக் கூறிய முறையில் அவ்வாறு கூறுவதற்கே இடமில்லாது போய்விடுவதுண்டாம். பாலசிங்கம் அவர்களின் பலம் இதுதான்.

இலங்கையிலிருந்து பத்திரிகையாளராகவும் கலாநிதி பட்ட ஆராய்ச்சி மாணவராகவும் இங்கிலாந்து சென்ற பாலசிங்கம், இலங்கைத் தமிழர் உரிமைக்கான புலமை நிலைப்பட்ட முன்னெடுப்புகளை தொடங்கினார். விடுதலைப் புலிகளும் பாலசிங்கமும் ஒருவரை ஒருவர் தேடி நின்றனர் என்று கூடச் சொல்லலாம். இந்த இணைவு திரு. பாலசிங்கத்தை தமிழர் உரிமைப் போராட்டத்தின் ஒரு பிரிக்க முடியாத அங்கம் ஆக்கிற்று. பாலசிங்கத்தின் தர்ம ஆவேசத்துக்கு ஒரு முக்கிய இடமிருந்தது. பேச்சுவார்த்தைகள் பற்றிய அவரது ஆங்கில எழுத்துகள் மிக முக்கியமானவை- ஆழமான வரலாற்று ஆவணங்கள் தமிழர் உரிமைப் போராட்டத்தின் நியாயம் பயங்கரவாதம் என்ற எதிர்ப் பிரசாரத்துக்கும் அப்பாலே உலகம் முழுவதிலும் நிலை நிறுத்தப்படும். அந்த நாள் பாலசிங்கத்தின் நினைவுக்கான நிறைவு நாளாக அமையும். அதனையே அவரது ஆத்மாவும் வேண்டி நிற்கும்.

Please Click here to login / register to post your comments.