வாகரை மக்களின் உயிர்ப் போராட்டம்!

ஒரு புறம் தாக்குதல்கள் மறுபுறம் தடைகள்..... மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை, கதிரவெளிப் பிரதேசங்களில் தங்கியுள்ள ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் அரச படையினரின் தாக்குதல் சம்பவங்கள் மற்றும் இயற்கை அழிவுகளால் பெரும் பேராபத்தை எதிர்கொண்டுள்ள மனிதப் பேரழிவொன்றிற்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றனர். கடந்த நான்கு மாத காலத்திற்கும் மேலாக வாகரை, கதிரவெளிப் பிரதேசங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பிரதேசமாகவே காணப்படுகின்றது.

இப்பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடந்த நான்கு மாதங்களாக உணவுப் பொருட்கள், அடிப்படை வசதிகள் எதுவுமின்றி அரச படையினரால் மேற்கொள்ளப்படும் படைநகர்வுகள், எறிகணைத் தாக்குதல்கள், விமானக் குண்டுவீச்சு, ஊடுருவித் தாக்குதல் போன்ற பல்வேறு கொடிய நிகழ்வுகளால் தினமும் உயிருக்காகப் போராடிக் கொண்டிருக்கின்றனர்.

மூதூர் கிழக்கு பிரதேசத்தில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிகவும் மோசமான பாரிய படை நடவடிக்கைகளினால் 13 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 40 ஆயிரம் தமிழ் மக்கள் வாகரை, கதிரவெளிப் பிரதேசங்களுக்கு இடம்பெயர்ந்து வந்து பாடசாலைக் கட்டிடங்களிலும் பொது இடங்களிலும் மரநிழல்களுக்குள்ளும் கடந்த நான்கு மாதகாலத்தை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர்.

இவ்வாறு இடம்பெயர்ந்து, வந்த மக்களில் சுமார் 10 ஆயிரம் பேரளவில் வாகரையிலிருந்து இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களான வாழைச்சேனை, விநாயகபுரம், கிரான், மட்டக்களப்பு ஆகிய இடங்களிலுள்ள பொது இடங்கள் பாடசாலைக் கட்டிடங்கள் என்பவற்றில் அகதிகளாக தங்கியுள்ளனர்.

ஆரம்பத்தில் வாகரைப் பிரதேசத்தில் தங்கியிருந்த இடம்பெயர்ந்த மக்களை இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசங்களுக்குச் செல்வதற்கு அனுமதித்த படைத்தரப்பினர் பின்னர் இதனை முற்றாக தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து வாகரைப் பிரதேசத்திற்கான தரைவழியூடான போக்குவரத்து கடந்த மூன்று மாதகாலமாக துண்டிக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கும் முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஊடாக கொழும்பிலிருந்து அனுமதி பெறப்பட்ட நிலையில், வாகரைப் பிரதேச மக்களுக்கு லொறிகள் மூலம் எடுத்துச் செல்லப்பட்ட உணவுப் பொருட்கள் மாங்கேணி படைமுகாமில் வைத்து பல தடவைகள் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், திருப்பியனுப்பப்பட்டன.

கடந்த ஒரு மாதகாலத்திற்கு முன்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்து சபை நடவடிக்கைகளை குழப்பியதையடுத்து வாகரைக்கு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுமென உறுதியளிக்கப்பட்டது.

எனினும், மறுநாள் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் ஊடாக வாகரைக்கு எடுத்துச் செல்லப்பட்ட உணவுப் பொருட்கள் மாங்கேணி படை முகாமில் வைத்து திருப்பியனுப்பப்பட்டன.

உணவுப் பொருட்களுடன் திருப்பியனுப்பப்பட்ட லொறிகள் மாங்கேணி படைமுகாமிற்கு மிக அருகில் வைத்து ஆயுதபாணிகளால் தடுத்து நிறுத்தப்பட்டு அங்குள்ள பாடசாலைக் கட்டிடமொன்றில் அகதிகளாக தங்கியிருந்த மக்களை பலாத்காரமாக அழைத்துச் சென்று அவர்கள் மூலமாக உணவுப்பொருட்கள் அபகரித்துச் செல்லப்பட்டன.

இந்தச் சம்பவம் அரச ஊடகங்கள் மூலம் திரிவுபடுத்தப்பட்டு வாகரைப் பிரதேசத்திற்கு லொறிகளில் எடுத்துச் செல்லப்பட்ட உணவுப் பொருட்கள் பொது மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டதாகப் பிரசாரம் செய்யப்பட்டமையும் கவனிக்கத்தக்கது.

கடந்த நான்கு மாதகாலப்பகுதியில் வாகரைப் பிரதேசத்திற்கு ஐந்து தடவைகள் மாத்திரமே குறிப்பிட்டளவு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாகரையிலுள்ள ஒரேயொரு வைத்தியசாலை எந்தவொரு அடிப்படை வசதிகளுமின்றி இயங்கிவருகிறது. ஆளணி பற்றாக்குறை, மருந்துப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு இவ்வாறான நிலையில், தினமும் படையினரின் தாக்குதல் சம்பவங்களால் உயிராபத்தை எதிர்கொள்ளும் மக்களுக்கு உரிய சிகிச்சையளிக்க முடியாத நிலையிலுள்ளது.

உள்ளூர் மற்றும் சர்வதேச தொண்டர் நிறுவனங்கள் வாகரைப் பிரதேசத்தில் மனிதப் பேரழிவை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு தேவையான சேவைகளை வழங்குவதற்குத் தயாராக இருந்த போதும் தொடர்ந்தும் அரச படையினரால் அதற்கான அனுமதி மறுக்கப்பட்டேயுள்ளது.

கொழும்பிள்ள பாதுகாப்பு அமைச்சின் உத்தரவின்படியே வாகரைப் பிரதேசத்திற்கான தரைவழித் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்வதற்கான தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

நாடு பூராவுமுள்ள ஏனைய பாடசாலைகளில் கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைகள் தற்போது நடைபெறுகின்ற நிலையில் மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த மற்றும் வாகரைப் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்ற முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

வாகரைப் பிரதேசத்திலுள்ள மாணவர்களையும் கல்விப் பொதுத் தராதர பரீட்சையில் உள்ளீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மட்டக்களப்பு கல்வித் திணைக்களம் கல்வியமைச்சின் உயரதிகாரிகளுடன் தொடர்புகொண்டு முன்னெடுத்த போதும் பரீட்சைத் தாள்களை எடுத்துச் செல்வதற்கு படைத்தரப்பினர் அனுமதி மறுத்துள்ளனர்.

கடந்த நான்கு மாதகாலப்பகுதியில் வாகரைப்பிரதேசத்தில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட விமானக்குண்டுவீச்சு, எறிகணைத் தாக்குதல்களால் 150 இற்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டும் 250 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துமுள்ளனர்.

கடந்தவாரம் நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த பொதுமக்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 இற்கு மேற்பட்டோர் உடல் சிதறி உயிரிழந்ததுடன் 40 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த சுமார் 30 பேர் இரு நாட்களின் பின்னரே ஐ.சி.ஆர்.சி. ஊடாக கடல் வழியாக எடுத்து வரப்பட்டு மட்டக்களப்பு, வாழைச்சேனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறான தாக்குதல்களின் போது சிறு குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களே தப்பியோட முடியாத நிலையில் அவலச் சாவை எதிர்கொள்கின்றனர்.

இருந்த எல்லாவற்றையும் இடப்பெயர்வினால் இழந்து பட்டினியின் விளிம்பில் பாடசாலைக் கட்டிடங்களிலும் மரநிழல்களுக்கு மத்தியிலும் வாழும் அப்பாவி மக்களை இலக்கு வைத்து நடாத்தப்படும் இவ்வாறான தாக்குதல் சம்பவங்கள் ஒவ்வொன்றும் இன அழித்தொழிப்பின் உச்சத்தையே வெளிக்காட்டி நிற்கிறது.

தற்போது, மழைகாலமென்பதால் வாகரைப் பிரதேசத்திலுள்ள மக்கள் இன்றும் மிக மோசமான மனித அவலத்தையே எதிர்கொண்டுள்ளனர்.

இதெல்லாவற்றுக்குமப்பால் கடந்த வெள்ளிக்கிழமை வாகரையிலிருந்து கடல் வழியாக படகுகள் மூலம் வாழைச்சேனை பிரதேசத்திற்கு இடம்பெயர்ந்தவர்களின் படகு ஒன்று கவிழ்ந்ததில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 20 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

மூதூர் கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து வாகரைப் பிரதேசத்தில் கடந்த நான்கு மாதங்களாக எறிகணைத் தாக்குதல்களுக்கும் விமானக் குண்டுவீச்சுகளுக்கும் அஞ்சி, பசிபட்டினியுடன் அவல வாழ்க்கையை எதிர்கொண்ட அப்பாவித் தமிழர்களை கடல் பலியெடுத்துள்ளது.

மூதூர் பிரதேசத்தின் 13 கிராமங்களிலிருந்தும் இடம்பெயர்ந்தவர்களும் வாகரைப் பிரதேசத்தை சொந்த இடமாகக் கொண்ட மக்களும் அரச படையினரின் பட்டினிச் சாவு என்ற புதிய யுத்த தந்திரோபாயத்திற்குள் சிக்குண்டு அழிந்து கொண்டிருக்கும் மனித அவலத்தை சர்வதேச சமூகம் இன்னும் எத்தனை காலம் பார்த்துக் கொண்டிருக்கப் போகிறது.

Please Click here to login / register to post your comments.