உருட்டுக்கட்டை அரசியலும் ,தமிழக காங்கிரசின் இறுதிக் கணங்களும்

ஆக்கம்: இதயச்சந்திரன்
தமிழகத்தில் மாணவர் போராட்டங்கள் விரிவடைந்து செல்லும் நிலையில், பொதுத் துறையில் உள்ள பல அமைப்புக்களும் ஆங்காங்கே போராட்டத்தில் குதித்துள்ளன. இப்போராட்டங்கள், ஈழ மக்களின் தேசிய இன விடுதலை போராட்டத்தின் சரியான கருத்தியலை ,அம்மக்கள் மத்தியில் கொண்டு சென்றுள்ளது என்பதனை மறுக்க முடியாது.

வாக்கு வங்கி அரசியலிற்கு அப்பால் நடாத்தப்படும் இந்த எழுச்சி, சிறிதளவு தணிந்து , மறுபடியும் எழக்கூடிய சாத்தியமும் உண்டு. ஆனாலும் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயம் என்னவென்றால், இங்கு பரந்துபட்ட அளவில் முன் வைக்கப்படும் அடிப்படைக் கோரிக்கைகளை புறம்தள்ளி, அதற்குக் குறைவானதொரு தீர்வினை எவரும் கூற முடியாததொரு நிலையை இந்தத் போராட்டங்கள் ஏற்படுத்தியுள்ளன.

அதாவது, மாணவர் போராட்டம் இடைநிறுத்தப்பட்டாலும், தமிழக மக்கள் மத்தியில், 'இதுதான் தீர்வு ' என்று ஆழமாகப் பதியப்பட்ட கருத்துருவத்தை அழித்து, புதிதாக ஒரு அரசியலை எந்தக் கட்சியும் ஈழ விவகாரத்தில் இனி அடையாளப்படுத்த முடியாது.

இங்கு ஏனைய கட்சிகளைவிட , தமிழக காங்கிரஸ் கட்சியினருக்கே இப் புதிய அரசியல் பரிமாணம் பெரும்தலைவலியாக இருக்கப்போகிறது.

தமிழக முதல்வர் அண்மையில் சட்டசபையில் கொண்டு வந்த தனி ஈழத் தீர்மானத்தை, இந்திய நடுவண் அரசின் வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் அவசரமாக நிராகரித்த விடயம், தமிழக காங்கிரசிற்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்துள்ளது.

தமிழகத்தில் காங்கிரசின் ஆதரவுத் தளம் , பூதக் கண்ணாடியை வைத்துத் தேடிப்பார்க்கும் அளவிற்கு புள்ளியாகிப் போனதால் சினம் கொண்ட மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி, விடுதலைப் புலிகள் மீது தாக்குதலை தொடுக்க ஆரம்பித்துள்ளார்.

இத்தனை ஆண்டு காலமாக, இராஜீவ் காந்தியின் படுகொலையை வைத்து, ஈழமக்களின் நியாயபூர்வமான விடுதலைப் போராட்டத்தை ,அரசியல் களத்தில் ஒளித்து வைத்திருந்த காங்கிரசாரின் மறைப்பு அரசியலை ,மாணவர் போராட்டம் அம்பலமாக்கி விட்டதே என்கிற அதிர்ச்சிதான் இந்தச் சாமிகளை புலி எதிர்ப்புக் கோசம் போடவைக்கிறது.

ஒரு சாமி, டெல்லியையும், மகிந்தரையும் காப்பாற்ற அமெரிக்காவிற்கு ஓடுகிறார். மற்றச் சாமி, தமது இருப்பிற்கு ஆபத்து வந்து விடுமெனக் கலக்கமடைந்து, ஈழத்தமிழருக்கு இந்திய காங்கிரஸ் ஆட்சி செய்ததை [?] பட்டியலிடுகிறார்.

போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 50,000 வீடுகள் கட்டித்தர, சீமானோ, தி.மு.க.வோ ,அ.தி.மு.க வோ அல்லது முண்டாசு கட்டிய வைக்கோவோ வரவில்லை என்றும், அதனை இந்திய அரசே கொடுத்தது என்று பெருமைப்படும் நாராயணசாமி, அரியாலையில் இந்திய அமைச்சர் அத்திவாரம் இட்டபின், எத்தனை வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டன என்கிற புள்ளிவிபரங்களையும் தமிழக மக்களுக்குச் சொல்லவேண்டும் .

இவைதவிர ,விடுதலைபுலிகளை இந்திய அரசு [காங்கிரஸ் அரசு] ஒருபோதும் மன்னிக்காது ..மறக்காது என்று இராஜீவ் படுகொலை விவகாரத்தை வைத்து பழைய பல்லவி பாடும் இணை அமைச்சர், திருச்சி.வேலுச்சாமி எழுதிய 'ராஜீவ் படுகொலை: தூக்குக்கயிற்றில் நிஜம்' நூலைப் படிக்கவில்லை போல் தெரிகிறது.

சுப்பிரமணிய சுவாமியுடன் நெருங்கி உறவாடிய வேலுச்சாமியின் சாட்சியங்களை ஆராய்வதற்கும், அதன் ஊடாக தீர்ப்புக்கள் திருத்தப்படுவதற்கும் இவர்கள் விரும்பவில்லை.

2009 இல் ஈழத்தில் நிகழ்ந்த பேரவலமும், இனப்படுகொலையும் , ஈழ ஆதரவு குறித்தான தமிழக மக்களின் உணர்வுகளை வேறொரு தெளிவான தளத்திற்கு எட்டுச் சென்றுள்ளது. கதர்ச் சட்டைக்காரர்கள் உருட்டுக் கட்டைகள் ஏந்திச் சன்னதம் ஆடியும் மாணவர் போராட்டம் ஒடுக்கப்படவில்லை.

மாநிலக் கட்சிகளின் ஆதரவினை வைத்து ஆட்சியமைக்கும் அகில இந்தியக் கட்சிகளுக்கு, தமிழகத்தின் 40 லோக்சபா நாற்காலிகளும் அவசியமானதுதான்.

அதேவேளை, மாநிலத்தில் மாறிமாறி ஆட்சிக்கு வரும், அ.தி.மு.க அல்லது தி.மு.க.வுடன் இணையாமல் 5 ஆசனங்களைக் கூட காங்கிரசால் பெறமுடியாது.

மாணவர் போராட்டமும் ,அவர்கள் முன் வைக்கும் கோரிக்கைகளும், இந்திய காங்கிரஸ் ஆட்சியாளர்கள் மீது சுமத்தப்படும் இன அழிப்பு ஆதரவுக் குற்றச் சாட்டுக்களும், தமிழக காங்கிரஸ் பக்கம் இக்கட்சிகளை நெருங்கவிடாமல் தடுக்கிறது.

கடந்த சட்டசபைத் தேர்தலில் பாரிய தோல்வியைச் சந்தித்த தமிழக காங்கிரசினருக்கு ,அடுத்த வருடம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் இதை விட மோசமான முடிவுகளைத் தந்துவிடுமோ என்கிற பயம் வாட்டுகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலில் செந்தமிழன் சீமான் கொடுத்த அதிர்ச்சி வைத்தியத்திலிருந்து தமிழக காங்கிரஸ் இன்னமும் மீளவில்லைபோல் தெரிகிறது.

புலிகள் மீதுள்ள வன்மமும், சிங்களத்தின் மீதுள்ள காரியக் காதலுமே போதும் தமிழக காங்கிரசின் அழிவிற்கு.

அதேவேளை, தொடரும் மாணவர் போராட்டம், தமிழக அரசியல் கட்சிகளுக்கும் சில சிக்கல்களை உருவாக்கியுள்ளது.

இருப்பினும் இதனை முடிவிற்கு கொண்டுவரும் முயற்சியில் இக் கட்சிகள் ஈடுபடுவதுபோல் தெரியவில்லை. அமெரிக்கத் தீர்மானம் மாணவர்களால் நிராகரிக்கப்பட்ட விவகாரத்தை முன்வைத்து, சில கட்சிசாரா ஈழ ஆதரவு அமைப்புக்கள், நடை பெறும் போராட்டத்தை திசை திருப்ப அல்லது மழுங்கடிக்க முனைவதாகவும் செய்திகள் வருகின்றன.

மாணவர்களை அவர்கள் வழியில் பயணிக்க விடுவதே சரியான பார்வையாகும். 'அவர்களை வலுவூட்டுகிறோம்' என்கிற பேர்வழிகள் ,தோல்வியடைந்த இணக்கப்பாட்டு அரசியல் போக்குகளை ஒரு கணம் மீட்டிப்பார்ப்பது பொருத்தமானது.

Please Click here to login / register to post your comments.