உலக ஒழுங்கினை மாற்றியமைக்குமா தென்னாபிரிக்கா மாநாடு?

ஆக்கம்: இதயச்சந்திரன்
அமெரிக்கத்தீர்மானம் , தமிழக சட்ட சபைத்தீர்மானம் , மாணவர் போராட்டம் என்று பலவாறான முன்னெடுப்புகள் நிகழும் இவ்வேளையில், தென்னாபிரிக்கா டர்பனில் பிரிக்ஸ் [BRICS] கூட்டமைப்பின் ஐந்தாவது மாநாடு நடைபெற்றுள்ளது .

மாநாட்டிற்கும், இத் தீர்மானங்களுக்கும் என்ன உறவு என்கிற கேள்வி எழலாம்.

பிரிக்ஸ் கூட்டமைப்பின் உறுப்பு நாடுகளான பிரேசில்,ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென்னாபிரிக்கா என்பவற்றில், பிரேசிலைத் தவிர ஏனைய நான்கு நாடுகளும் ஏதோவொரு வகையில் நேரடித் தொடர்பாடல்களை இலங்கை விவகாரத்தில் கொண்டிருக்கின்றன.

இந்த நான்கு நாடுகளில் சீனாவும் ரஷ்யாவும், இலங்கை ஆட்சியாளர்களை நிபந்தனையின்றி ஆதரவளிக்கும் நாடுகளாகும். ஐ.நா.சபையில் இலங்கை மீது தீர்மானங்கள் கொண்டுவரும்போது, பகிரங்கமாக அதனை எதிர்க்கும் ,பாதுகாப்புச் சபையில் வீட்டோ அதிகாரம் கொண்ட இலங்கையின் நட்பு நாடுகள் இவை.

இந்தியாவைப் பொறுத்தவரை, 'இலங்கை தனது நட்பு நாடு' என்று ஒட்டிக்கொண்டாலும், அதனை உறுதி செய்ய, இருதரப்பு உறவில் விரிசல் ஏற்படாதவாறு அமெரிக்கத் தீர்மானங்களை வலுவிழக்கச் செய்யும் காரியத்தில் மிக நுட்பமாக செயற்படும்.

தமிழக சட்டசபையில், 'தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பு நிகழ்த்தப்பட வேண்டும்' என்கிற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட அதேவேளை, இலங்கையில் இருந்து ஏற்றுமதியாகும் ஆடைகளுக்கான வரி அறவீட்டில் தளர்வினை இந்தியா அறிவித்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இதன் மூலம், தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட 'பொருளாதாரத் தடை' என்பதனை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்கிற செய்தியையும் இதனூடாக வெளிப்படுத்தியுள்ளது.

தென்னாபிரிக்காவின் இலங்கை குறித்தான நிலைப்பாடும், ஏறத்தாள இந்தியாவின் அணுகுமுறையோடு இணைந்து செல்வதைக் காணலாம்.

இலங்கையில் முதலீடு செய்வதில் அதிகளவில் அக்கறைகொள்ளும் தென்னாபிரிக்காவானது, இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சியில் மூன்றாம் தரப்பாக மாறுவது போன்றதொரு தோற்றப்பாட்டினை உருவாக்க முயல்கிறது. அம்முயற்சியில் அமெரிக்கா மற்றும் இந்தியாவின் வகிபாகம் எந்தளவில் இருக்கிறது என்பதனை, பின்கதவு இராஜதந்திர அணுகுமுறைகளை அறிந்து கொள்வதன் ஊடாகவே புரிந்து கொள்ளலாம்.

அவர் எந்தக் கதவுகளின் வழியில் வந்தாலும் சென்றாலும், பொது மேடையில் அவர் எடுக்கும் நிலைப்பாடும், செயற்பாடுகளும் எல்லாவற்றையும் அம்பலமாக்கிவிடும்.

ஆனாலும் இலங்கை குறித்தான இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் இரட்டை வாசல் அணுகுமுறைகளை நாம் தெளிவாக கண்டுகொண்டாலும், தென்னாபிரிக்காவின் இரட்டைத் தன்மையைப் புரிந்து கொள்ள சில காலம் எடுக்கும்.

பிரிக்ஸ் இல் உள்ள ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் தென்னாபிரிக்காவின் மொத்த உள்ளூர் உற்பத்தி [GDP] 390 பில்லியன் அமெரிக்க டொலர்களே.

ஆனால் சீனாவின் கடந்த வருட மொத்த உள்ளூர் உற்பத்தி 8.25 ட்ரில்லியன் டொலர்கள் .அத்தோடு இந்தியாவின் ஜி.டி.பி 1.95 ட்ரில்லியன் ஆகவும், பிரேசிலின் ஜி.டி.பி 2.48 ஆகவும், ரஷ்யாவின் ஜி.டி.பி 1.953 ட்ரில்லியன் ஆகவும் இருக்கிறது.

இந்நிலையில் இக்கூட்டமைப்பின் ஊடாக, பொருளாதார அபிவிருத்திக்கான வெளிநாட்டு நேரடி முதலீடுகளை அதிகளவில் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருப்பதாக தென்னாபிரிக்கா கருதுகிறது.

அதேவேளை, தென்னாபிரிக்க வாசலின் ஊடாக கனிம வளம் நிறைந்த ஏனைய ஆபிரிக்க ஒன்றிய நாடுகளில் புகுந்து கொள்ளலாம் எனவும், மேற்குலக முதலீட்டு ஆதிக்கப்போட்டியை அங்கு எதிர்கொள்ளச் சரியான வாய்ப்பு இதுவென்றும் மற்ற பிரிக்ஸ் நாடுகள் கருதுகின்றன.

2010 இல் பிரிக் அமைப்பில் இணைந்து கொண்ட தென்னாபிரிக்கா , கைத்தொழில் அபிவிருத்தி திட்டங்களிற்கான நேரடி முதலீடுகளைப் பெறுவதற்கு பல சிக்கல்களை எதிர் நோக்கியிருந்தது. அதனை மாநாட்டுக்கு வருகை தந்த 1000 இற்கு மேற்பட்ட வர்த்தகர்கள் மத்தியில் உரையாற்றிய தென்னாபிரிக்க அதிபர் ஜெகோப் சூமா குறிப்பிட்டிருந்தார்.

பிரிக்ஸ் அபிவிருத்தி வங்கி ஒன்றினை உருவாக்குவதன் ஊடாக, பிரிக்ஸ் நாடுகளில் முதலீடு செய்வதற்குத் தடைக்கற்களாகவிருக்கும் நிதி, சில்லறை வணிகத் துறை, மற்றும் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பவை குறித்து பொருத்தமான வரையறைகளை உருவாக்கலாம் என்பதுதான் சுமாவின் எதிர்பார்ப்பு.

ஆபிரிக்கக் கண்டத்தின் தலைவாசலாகவும், அதன் பொருண்மிய -இராஜதந்திர தலைமை நாடாகவும் தென்னாபிரிக்கா இருக்கிறது என்பதனை வலியுறுத்தும் வகையிலேயே அந்நாட்டின் முக்கியஸ்தர்களின் உரைகள் அமைந்திருந்தன.

இருப்பினும் திட்டமிடப்பட்ட 'பிரிக்ஸ்' அபிவிருத்தி வங்கியானது எத்தகைய நடைமுறைகளைக் கொண்டிருக்கும் என்பது குறித்தான முடிவுகள் இன்னமும் எட்டப்படவில்லை. ஆசிய அபிவிருத்தி வங்கி அல்லது அனைத்துலக நாணய நிதியத்தைப் [IMF] போன்றதொரு நிர்வாக முறைமையினை இது கொண்டிருக்குமா? என்பதனை சீனா தீர்மானிக்கும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே அனைத்துலக நாணய நிதியத்திற்கு மாற்றாக , ஆசிய நாணய நிதியம் [AMF] ஒன்றினை ஆரம்பிக்க, சீனா முன்பு முயற்சி செய்த விவகாரத்தை நினைவில் கொள்ள வேண்டும். ஆனாலும் மேற்குலகோடு நெருக்கமான இராஜதந்திர- பொருண்மிய உறவுகள் கொண்ட ஜப்பான், தென்கொரியா மற்றும் இந்தோனேசியா என்பன அதிலிருந்து நழுவிக் கொண்டதால் , சீனாவின் அம்முயற்சி கைகூடவில்லை.

தனது யுவான் நாணயத்தை, இருதரப்பு வர்த்தக நிதிப் பரிமாற்றத்தில் பயன்படுத்துவதன் ஊடாக , சர்வதேச நாணயச் சந்தையில் அமெரிக்க டொலரின் வகிபாகத்தைக் குறைப்பதற்கு , இந்த ஆசிய நாணய நிதியத்தை பயன்படுத்த சீனா முயல்கிறதா என்கிற சந்தேகம் அன்று பல மட்டங்களில் எழுந்தது.

உலக வணிகத்தின் முக்கிய நாணயமாக அமெரிக்க டொலர் இருக்கும்வரை அனைத்துலக நாணய நிதியத்திலோ அல்லது உலக வங்கியிலோ தனது ஆளுமையைச் செலுத்த முடியாது என்பதை புரிந்து கொள்வதால், மாற்று வழிமுறைகளைத் தேட ஆரம்பித்துள்ளது சீனா.

ஆகவே உலக சனத்தொகையில் 40 சதவீதத்தையும் , சர்வதேச மொத்த உள்ளூர் உற்பத்தியில் 25 சதவீதத்தையும் கொண்டிருக்கும் பிரிக்ஸ் நாடுகளின் கூட்டமைப்பின் ஊடாக, புதிய நிதியியல் கட்டமைப்புகளை உருவாக்குவதே தனது எதிர்கால நலனிற்கு உகந்தது என சீனா எண்ணுவது போல் தெரிகிறது.

அதேவேளை தான்சானியாவிற்கு விஜயம் மேற்கொண்ட சீனாவின் புதிய அதிபர் சி ஜின்பிங் , அங்கு தெரிவித்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியன.

2012 இல் 200 பில்லியன் டொலர்களாகவிருந்த சீன-ஆபிரிக்க இருதரப்பு வர்த்தகம் 2015 இல் 500 பில்லியனாக அதிகரிக்க வேண்டுமெனக் கூறியுள்ளார்.அதேவேளை சீனாவின் நேரடி முதலீடு 15 பில்லியனை எட்டியுள்ளதாக மகிழ்வடைகிறார்.

இவைதவிர, 'பிரிக்ஸ்' கூட்டமைப்பினூடாக , அபிவிருத்தி வங்கி ஒன்றினை உருவாக்குவதோடு , மேற்குலக கடன் மதிப்பீட்டு முகவரமைப்புகளுக்கு [Credit Rating Agency] மாற்றீடாக 'பிரிக்ஸ்' இற்கான முகவர் அமைப்பொன்றினை நிறுவ வேண்டும் என்கிற முன்மொழிவையும் சீனா மேற்கொள்கிறது.

இந்த 'பிரிக்ஸ்' அபிவிருத்தி வங்கியின் உருவாக்கத்தில் இந்தியாவும் பிரேசிலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. மேற்குலக ஆதிக்கத்திற்கு உட்பட்ட உலக வங்கி மற்றும் அனைத்துகல நாணய நிதியம் என்பவற்றிக்கு மாற்றாக தோற்றம் பெறும் இவ்வங்கி, 50 பில்லியன் டொலர்களை முதலாக கொண்டு ஆரம்பமாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ஆனாலும் ஐரோப்பாவில் ஏற்பட்டுள்ள கடன் நெருக்கடி [Debt Crisis]யினால் பிரேசில், சீனா மற்றும் இந்தியாவில் குறைவடையும் பொருளாதார வளர்ச்சியானது, 'பிரிக்ஸ்' இன் அடுத்தகட்ட மூலோபாய திட்டங்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதனை மறுக்க முடியாது.

இந்தக் கூட்டிலுள்ள இன்னுமொரு முக்கியமான நாடான ரஷ்யா, எதனை எதிர்பார்க்கிறது என்பது குறித்துப் பார்க்க வேண்டும்.

ரஷ்ய அதிபர் விளாமிடிர் புட்டினைப் பொறுத்தவரை , 'பிரிக்ஸ்' இற்கான பொதுவான வெளியுறவுக் கொள்கையினை உருவாக்கும் வகையில், முழுமையான மூலோபாய உடன்பாட்டு பொறிமுறை ஒன்று நிறுவப்பட வேண்டுமென எதிர்ப்பார்க்கின்றார்.

ஐரோப்பாவின் கைத்தொழில் வளர்ச்சி தேக்கமடைந்துள்ள நிலையில், சீன-ரஷ்ய பொருளாதார உறவு மேம்பட வேண்டுமென விரும்பும் ரஷ்யா , சைபீரியாவில் இருந்து சீனாவிற்கான எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி அதிகரிக்குமென நம்புகிறது. அதற்கான உரையாடல்கள், இம்மாநாட்டில் நடை பெற்றிருப்பதை அறியக்கூடியதாவிருக்கிறது.

சீன அதிபர் ஜின்பிங் , ரஷ்ய அதிபரைச் சந்தித்தவேளை, புதிய உடன்பாடொன்று எட்டப்பட்டதாக கூறப்படுகிறது. அதாவது ரஷ்யா ஏற்றுமதி செய்யும் எண்ணெய்க்கு, முன்பணம் செலுத்த சீனா விரும்புவதோடு, அதற்கு பிரதியீடாக , கடலடி எண்ணெய் அகழ்வு பணியில் இரு நாடுகளும் இணைந்து செயற்படும் என்பதுதான் அந்த உடன்பாடு.

அதேவேளை , ரஷ்யாவின் மிகப்பெரிய எண்ணெய் நிறுவனமான காஸ்ப்ரோம் [GASPROM], வருடமொன்றிக்கு 30 பில்லியன் கன மீட்டர் எரிவாயுவை ,ESPO குழாய்கள் மூலம் சைபீரியாவிலிருந்து சீனாவிற்கு அனுப்பும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளது . ரஷ்யாவிற்கு அதன் வெளிநாட்டு நாணயக் கையிருப்பை அதிகரிக்க , இந்த எரிவாயு வழங்கல் ஒப்பந்தம் உதவினாலும், சீனாவிற்குக்கூட இதில் ஒரு நன்மை உண்டு.

தென்சீனக் கடல் பிராந்தியத்தையும், இந்து மகா சமுத்திரத்தையும் இணைக்கும் மலாக்கா நிரிணை மற்றும் மத்திய கிழக்கிலுள்ள ஹோர்முஸ் நீரிணை போன்ற கொந்தளிப்புமிக்க அமைவிடங்களை தவிர்க்க, இக் குழாய் வழங்கல் உதவுமென சீனா கருதுகிறது.

ஆகவே இம்மாநாட்டில் தோற்றம்பெறும் மாற்றங்களும் ,மூலோபாயக் கூட்டுக்களும் , பொருண்மிய இணைவுகளும், ஓருலகக் கோட்பாட்டில் சிதைவினை ஏற்படுத்தி, வளர்ச்சியுறும் நாடுகளின் கூட்டான மாற்றுத் தளமொன்றினை உருவாக்கிவிடுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

புவிசார் அரசியலில் இருதுருவ நிலை ஏற்படுவது, இலங்கையில் எத்தகைய மாறுதல்களைக் கொண்டு வரும் என்பது குறித்து அவதானித்தால், சிலவேளைகளில் அமெரிக்கத் தீர்மானங்கள் தீவிரப் போக்குடையதாக மாறலாம் அல்லது ஆட்சி மாற்றத்தோடு நீர்த்தும் போகலாம்.

எவ்வாறாயினும் இலங்கை விவகாரத்தில், இரு முனைகளிலும் உறவினைப் பேணும் இந்தியாவின் நிலைப்பாடும் , அத்தோடு இலங்கையில் சீனா பிரயோகிக்கும் ஆதிக்க நகர்வுகளும், பாரிய பங்கினை வகிக்குமென எதிர்பார்க்கலாம்.

Please Click here to login / register to post your comments.