இலங்கை மீதான அமெரிக்காவின் பார்வையில் மாற்றமேற்படுகிறதா?

ஆக்கம்: இதயச்சந்திரன்

'செயற்பாட்டு மூலோபாயம்' என்கிற சொல்லாடல் , மேற்குலக புவிசார் அரசியல் நோக்கர்களால் தற்போது பரவலாகப் பயன்படுத்தப் படுவதனை அவதானிக்கலாம்.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா , ஆசிய-பசிபிக் பிராந்தியம் தொடர்பாக முன்வைத்த நீண்ட கால மூலோபாயத்திட்டம் குறித்து, தமது விமர்சனங்களையும் ,ஆலோசனைகளையும் தெரிவிக்கும் பல அரசறிவியலாளர்கள் , இந்த மூலோபாய திட்டத்திற்கான செயல்வடிவங்கள் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டுமென்பதில் முரண்பட்டுக் கொள்வதைக் காணலாம்.

ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் இருந்து விலகி, ஆசிய-பசிபிக் பிராந்தியம் நோக்கி நகரும் அமெரிக்கா, அவுஸ்திரேலியா சிங்கப்பூர் போன்ற நாடுகளில் தமது படைவலுவினை அதிகரிக்கும் அதேவேளை, ஏனைய தென்னாசிய மற்றும் கிழக்கு ஆசிய வளர்முக நாடுகளுடன் பொருளாதார ,இராஜரீக உறவுகளை அதிகரிக்கும் வகையில் செயற்பாட்டு மூலோபாயங்களை வகுக்க வேண்டுமென்பதே மேற்குலக அரசியல் நோக்கர்களின் விருப்பாக இருக்கிறது.

அதாவது அமெரிக்க அரசானது தனது வளங்களை ஆசியாவை நோக்கி நகர்த்த வேண்டுமென ஆலோசனை கூறுவதோடு , வெள்ளை மாளிகையிலுள்ள தேசிய பாதுகாப்புச் சபை ஊழியர்கள், முகாமைத்துவ மற்றும் பாதீட்டு அலுவலகத்துடன் இணைந்து ஆசியாவில் ஒரு மீள்சமநிலையை உருவாக்கும் முயற்சிற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் சில நடைமுறை சார்ந்த வியூகங்களையும் முன்வைக்கிறார்கள்.

இதில் படைத்துறை இராஜதந்திரம் என்பதானது, நட்புநாடுகளின் இராணுவத்தைப் பலப்படுத்தல், கூட்டுப் பயிற்சியில் ஈடுபடல் என்பதனை உள்வாங்கிக் கொண்ட வகையில் அமையும். அந்தவகையில்,இலங்கை படைத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்கும் இருதரப்பு உறவுநிலை ஊடாக இந்த இராஜதந்திரம் பிரயோகிக்கப்படுவதை நோக்கலாம்.

ஆசியாவில் மீள்சமநிலை ஒன்றினை உருவாக்கும் அமெரிக்காவின் மூலோபாயத் திட்டத்தில் , முன்னாள் இராஜாங்கச் செயலர் கிளரி கிளிண்டன் மற்றும் கிழக்கு ஆசிய -பசுபிக் பிராந்திய விவகாரங்களிற்கான உதவி இராஜாங்கச் செயலர் கேர்ட் கம்பெல் ஆகியோர் தமது இராஜதந்திர பங்களிப்பினை மிக காத்திரமாக வழங்கியிருந்தார்கள். இப்பணியை புதிய இராஜாங்கச் செயலாளர் ஜோன் கேரி தொடர்ந்து முன்னேடுப்பாரா என்பதனை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .

புதிதாக வந்தவர், இரண்டு முக்கிய முரண்பாடுகளை கையாளவேண்டிய சிக்கலுக்குள் தள்ளப்பட்டுள்ளார். முதலாவது, டியொயு [Diaoyu] தீவிற்கான ஜப்பான்-சீனா இடையிலான மோதல் நிலை. இரண்டாவதாக வடகொரியா மேற்கொள்ளவுள்ள அணுஆயுதச் சோதனைக்கு எதிர்வினையாக, கடந்த திங்களன்று [04-02-2013]தென்கொரியாவும் அமெரிக்காவும் இணைந்து கொரிய வளைகுடாவின் கிழக்குக் கரையில் நிகழ்த்திய 3 நாள் கடற்படை கூட்டுப் பயிற்சி.

இந்நிலையில் அரசிறைக் கொள்கையில் [Fiscal Policy] சமநிலையை உருவாக்க முடியாமல் தடுமாறும் அமெரிக்கா, பாதுகாப்புத் துறைக்கான நிதி ஒதுக்கீட்டில் குறைப்பினை மேற்கொண்டவாறு எவ்வாறு ஆசிய-பசிபிக்கை நோக்கி தமது வளங்களைத் திருப்ப முடியும் என்கிற கேள்வி எழுகின்றது.

அதுமட்டுமல்லாது, கடன் எல்லையை [Debt Limit] 16.4 ட்ரில்லியன் டொலர்களாக அதிகரிக்காவிட்டால் பெரும் சமூக பொருளாதார நெருக்கடியை அமெரிக்கா எதிர் நோக்க வேண்டிவரும் என்கிற எச்சரிக்கை , அதன் ஆசியாவை நோக்கிய நகர்வுகளை முடக்கலாம் என்பது உண்மை.

1960 இலிருந்து 78 தடவைகள் நிரந்தரமாகவும், தற்காலிகமாகவும் தனது கடன் எல்லையை அமெரிக்கா நிர்ணயம் செய்தது. மருத்துவ உதவித் தொகை, இராணுவத்திற்கான ஊதியம், சமூக பாதுகாப்பு நிதி, தேசியக் கடனிற்கான வட்டித் தொகை , வரி மீளளிப்பு மற்றும் ஏனைய கொடுப்பனவுகள் என்பன இக்கடன் எல்லையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றன.

அமெரிக்கா தனது தேவையைப் பூர்த்தி செய்வதற்காக வாங்கும் கடன் எல்லையை தொடர்ச்சியாக உயர்த்தும் போது, ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் மீள்சமநிலை உருவாக்குவதற்குத் தேவையான மேலதிக நிதியை எங்கிருந்து பெறும் என்பதே அடுத்துவரும் முக்கிய கேள்வியாகும்.

அதேவேளை,சீனாவின் எல்லை தாண்டிய முதலீட்டு ஆதிக்கமும், கடல்வள உரிமத்திற்கான இறுக்கமான நிலைப்பாடும் , அமெரிக்க சார்பு நாடுகளுடன் நெருங்கிவரும் அதன் உறவுநிலையும், வாசிங்டனின் மீள்சமநிலை உருவாக்க மூலோபாயத் திட்டத்தில் சிக்கல்களை தோற்றுவிப்பதைக் காணலாம்.

தென்சீனக் கடற்பிராந்தியத்தில் ஏற்படும் முரண்நிலையில் ,சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டினை வெளிப்படையாக எடுக்க முடியாததொரு இக்கட்டான சூழலுக்குள் அமெரிக்க தள்ளப்பட்டுள்ளதையும் பார்க்கலாம்.

அடுத்ததாக, ஐரோப்பிய ஒன்றியம் போன்றதானதொரு பொருளாதார சமூகத்தினை, 10 நாடுகள் அடங்கிய ஆசியான் [ASEAN] கூட்டமைப்பு , 2015 அளவில் உருவாக்கிவிடும் என்பதையும் அமெரிக்கா உற்று நோக்குகிறது.

நீண்டகாலமாக சீனாவின் நண்பனாக இருக்கும் மியன்மார் [பர்மா] , ஆசியானின் தலைமைப் பொறுப்பினை ஏற்கவிருக்கிறது என்பதனை உணர்ந்து , அந்நாட்டின் உடனான உறவினைப் பலப்படுத்த ஒபாமா நேரடியாகக் களத்தில் இறங்கிய விவகாரமும் கவனிக்கத்தக்கது. ஆகஸ்ட் 2012 வரை மியன்மாரில் சீனா மேற்கொண்ட நேரடி முதலீடு 14.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருக்கும் அதேவேளை ,கடந்த அரையாண்டில் மட்டும் 3.5 பில்லியன் டொலர்களுக்கு இருதரப்பு வர்த்தகம் நடந்துள்ளது.

இதில் அமெரிக்கா எதிர்கொள்ளும் சிக்கல் நிறைந்த இடம் சாங்காய் ஒத்துழைப்பு ஒன்றியமாகும். இவைதவிர ஆசியானும் இந்த ஒன்றியமுமே எதிர்கால ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பொருண்மிய- இராஜதந்திர உறவுநிலைகளை நிர்ணயம் செய்யும் பிரதான இயங்குதளங்களாக இருக்கப்போகிறது .

அடுத்ததாக,அமெரிக்க-சீன பனிப்போரின் பிறிதொரு மையக்களமாக , ஆசியாவின் வணிகக் கடல் பாதையின் தலைவாசலில் அமைந்துள்ள இந்துசமுத்திரப் பிராந்தியம் மாற்றமடைவதை குறிப்பிட்டாக வேண்டும் .

இப்பிராந்தியத்தில் சீனாவின் செயற்பாட்டு மூலோபாயத்தினை முடக்கும்வகையில், இரு பிரதான சக்திகளான அமெரிக்காவும் இந்தியாவும் தீவிரமாக இயங்குவதை காண்கிறோம். இருப்பினும் மியன்மார் ,இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ,மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளுக்கு மேற்குலகின் ஆளுமைக்கு உட்பட்ட சர்வதேச நிதி மையங்களான அனைத்துலக நாணய நிதியமும், உலக வங்கியும் ஆசிய அபிவிருத்தி வங்கியும் குறிப்பிடத்தக்க கடனுதவிகளை வழங்கினாலும்,சீனாவின் நிதி முதலீட்டு ஆதிக்கம் பாரியளவில் இருப்பதை கவனிக்க வேண்டும் .

குறிப்பாக இலங்கை தொடர்பான சீனாவின் பொருண்மிய உறவுநிலையை எடுத்துக் கொண்டால் அம்பாந்தோட்டையிலிருந்து கொழும்பு நகர்ப்புறம் வரை சீனா குவிக்கும் கடனடிப்படையிலான முதலீடுகள் சில நிஜங்களை வெளிப்படுத்துகிறது.

அண்மையில் கூடிய இலங்கையின் மந்திரி சபையானது, இரண்டு பாரிய உட்கட்டுமான அபிவிருத்தித் திட்டங்களுக்கு தனது அங்கீகாரத்தை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.அதில் ஒன்றான , 29.22 கிலோமீட்டர் நீளமான கொழும்பு மாநகர வெளிவட்ட நெடுஞ்சாலை நிர்மாணிப்பிற்கான திட்டத்தினை சீன நிறுவனமொன்றிக்கு [ Metallurgical Corporation of China Ltd] வழங்கியதோடு, அதற்கான 66.7 பில்லியன் ரூபாயை சீனாவின் எக்ஸிம் [EXIM] வங்கியிடமிருந்து பெற அனுமதியளித்தது. இப்பாரிய சீன நிறுவனமே, பப்புவா நியூ கினியா நாட்டில் நிக்கலையும் [Nickel] , ஆப்கானிஸ்தானில் செம்பையும் [Copper] அகழ்ந்து கொண்டிருக்கிறது.

அடுத்தது அனுராதபுரத்திற்கான நீர் வழங்கல் திட்டமாகும். அதற்கான 7.4 பில்லியன் ரூபா நிதியை ஜப்பானிய அரசிடமிருந்து இலங்கை பெறுகிறது. இத்திட்டம் உட்பட ஏனைய உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளுக்காக மொத்தமாக 53.8 பில்லியன் ரூபா கடனுதவியை ஜப்பானிடமிருந்து பெறுவதற்கு மந்திரிசபை அங்கீகாரம் அளித்துள்ளது.

இதேவேளை மன்னார் கடலில் இந்தியாவை எண்ணெய் தோண்ட விட்டுள்ள இலங்கை அரசு, மறுபுறமாக சீனாவுடனும் ஜப்பானுடனும் பெருமளவில் முதலீட்டு ஒப்பந்தங்களைச் செய்தாலும், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா மேற்கொள்ளவுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கை [ FTA] தன்னை பாதிக்குமா என்று ஏங்குவதை உணரக்கூடியதாவிருக்ககிறது . இந்த வர்த்தக உடன்பாடு குறித்தான விவகாரத்தை பிறிதொரு கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

இவைதவிர ஐ.நா.மனித உரிமைப்பேரவையில் அமெரிக்கா கொண்டுவர உத்தேசித்துள்ள தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தாலும், ஏனைய வெளிநாட்டு நேரடி முதலீட்டுக்கு [Foreign Direct Investment] இதனால் பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் இலங்கை அரசு கவலை கொள்வதாக அண்மையில் ஊடக அமைச்சர் கெகலிய ரம்புக்வெல குறிப்பிட்டது கவனிக்கத்தக்கது .

ஏனெனில் 12 கைத்தொழில் பேட்டைகளையும் , 8 சுதந்திர வர்த்தக வலயங்களையும் கொண்டிருக்கும் இலங்கை , மேலதிகமாக அம்பாந்தோட்டையிலுள்ள சூரியவேவாவில் இன்னுமொரு சுதந்திர வர்த்தக வலயத்தை நிர்மாணிக்க உத்தேசித்துள்ள நிலையில்,அரசிற்கு வெளிநாட்டு நேரடி முதலீடு அவசியமானது.

என்னதான் ஏகாதிபத்திய எதிர்ப்புக் கோசங்களை அரசின் இனவாத முகங்கள் முன்வைத்தாலும், ஐ.நா .தீர்மானங்கள் இத்தகைய வர்த்தக வலய விரிவாக்கத்திற்கு தடைக்கல்லாக அமைந்து விடுமோ என்கிற அச்சம் அரசிடம் இருப்பதை ரம்புக்வெலவின் கூற்று உணர்த்துகிறது.

அதுமட்டுமல்லாது, இவ்வருட இறுதியில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் உச்சி மாநாட்டிற்கு எதிர்ப்பலைகள் கிளம்பாதவாறு ,காய்களை நகர்த்த வேண்டுமாயின் சில விட்டுக் கொடுப்புக்களை செய்ய வேண்டி வரும் என்பதையும் சிங்களம் புரிந்து கொள்கிறது.

தலைகள் வராவிட்டாலும், எப்படியாவது மாநாட்டை நடாத்தி முடிக்க வேண்டும் என்பதிலேயே இலங்கை அரசு குறியாக இருக்கிறது.

இருப்பினும் செயற்பாட்டு மூலோபாயம் என்பதனை துல்லியமாகப் பிரயோகிப்பதில் அனுபவமிக்க மேற்குலகத்தினர், இலங்கையை மென் அழுத்தங்கள் ஊடாகவே அணுக முற்படுவார்கள் என்று நம்பலாம்.

ஏனெனில்,ஆசியாவில் ஏற்பட்டுள்ள புதிய சூழலும், மியன்மாரில் உருவாகியுள்ள மாற்றங்கள் தரும் படிப்பினைகளும், இலங்கை விவகாரத்திலும் அத்தகைய போக்கினை மேற்கொள்ளவே அமெரிக்காவை நிர்ப்பந்திக்கும்.

இருப்பினும், அமெரிக்காவின் மென் அழுத்தங்கள், சில களநிலை மாற்றங்களிற்கான கால அவகாசத்தை எதிர்பார்த்து நின்றாலும், இந்தியாவின் போக்கில் சில கடுமையான அழுத்தங்கள் சேர்ந்து வரக்கூடிய வாய்ப்புக்கள் தென்படுகின்றன .

Please Click here to login / register to post your comments.