புலம் பெயர் தமிழ் மக்களை நோக்கி நீளும் சிங்களப் பேரினவாதத்தின் நேசக்கரம்

ஆக்கம்: இதயச்சந்திரன்

புலம்பெயர் நாடுகளை நோக்கி மகிந்தரின் 'சூப்பர் சாண்டி' என்கிற பேரினவாதப் புயல் வீச ஆரம்பித்துள்ளது .

அமெரிக்காவின் வட-கிழக்குப் பகுதிகளை மோசமாகப் பாதிக்கும் இப்புயல் குறித்த செய்திகளை நாம் அறிந்து கொண்டிருக்கிறோம். ஆனாலும் மகிந்தரின் சூறாவளி ,அவரின் தூதுவர்களினால் காவி வரப்படுவதை புரிவது கடினமானதல்ல.

கடந்த வாரம் பிற்பகுதியில் , அனைத்துக் கட்சி இளம் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட புயலொன்று , இரண்டாவது தடைவையாக இலண்டனில் மையமிட்டது. வருகை தந்தவர்களுக்கிடையே பலத்த கருத்து மோதல். புலம் பெயர் மக்களால் முன்வைக்கப்படும் சர்வதேச சுயாதீன விசாரணை என்கிற முக்கிய விடயத்தினை, பதுளை மாவட்ட இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ நிராகரித்ததால் இம்முரண் நிலை தோன்றியது.

அரசிற்கு எதிராக போர்க்குற்றம் சுமத்துவதை தாம் அனுமதிக்கப்போவதில்லை என்பதில் மிகவும் உறுதியாகவிருந்தார் இந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற பிரதிநிதியும் அதனை ஆதரித்தார். இளையோராக இருக்கலாம் அல்லது முதியோராக இருக்கலாம் ,சிங்களத்தின் ஒட்டு மொத்தக் குரலும் இனஅழிப்பு நடந்தது என்கிற விடயத்தை மறுப்பதில் திடமாகத்தான் இருக்கின்றது.

ஆகவே இவர்களோடு பேசிப் பலனில்லை என்பதைப் புரிந்து கொண்டதால், புலம்பெயர் அமைப்புக்கள் எவையும் இம் மாபெரும் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.

கூட்டமைப்போடு பேசுவதை தவிர்க்கும் சிங்களம் , ஏன் புலம்பெயர் மக்களோடு பேச எத்தனிக்கின்றது என்பதைப் புரிந்துகொள்ள மாக்கியவல்லியின் தத்துவங்களும் தேவையில்லை. புலம் பெயர் மக்கள் முன்னெடுக்கும் செயற்பாடுகள்தான் மகிந்த கொம்பனிக்கு பெரும் சவாலாக இருக்கிறது.

ஒரு சில உதிரிகளை அழைத்து கே.பீ யோடு பேசவைத்து, அடிபணிவு அரசியல் தளம் ஒன்றினை புதிதாக உருவாக்கி விடலாம் என்பதுதான் கபில ஹென்தவிதாரனையை தலைவராகக் கொண்ட இலங்கை புலனாய்வுப் பிரிவின் வியூகம். விடுதலை உணர்வோடு அசையாமல் நிற்கும் மக்களின், போராட்ட உளவியல் தளத்தினை சிதைப்பதுதான் இவர்களின் நோக்கம். மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் ,இன அழிப்பு, சுயநிர்ணய உரிமை குறித்துப் பேசாமல் அபிவிருத்தி பற்றி பேசவைத்தால், சர்வதேசத் தலையிடியின் ஒரு பகுதி அகன்று விடுமென சிங்களம் எதிர்பார்க்கின்றது. 2009 மே மாதப் பேரழிவின் பின்னர், மகிந்த ஆட்சியாளர்கள் மூன்று விதமான காய்நகர்த்தல்களை மேற்கொள்வதைக் காணலாம். ஐ.நா.சபையானது நிபுணர் குழுவொன்றினை அமைக்கப்போகிறது என்பதைத் தெரிந்து கொண்டவுடன் , கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆலோசனைக் குழு என்கிற கண்துடைப்புக் குழுவொன்றினை சிங்களம் அவசரமாக உருவாக்கியது.

குற்றம்சாட்டப்பட்டவர் குழுவொன்றினை அமைத்த நிகழ்விற்கு , இன அழிப்பிற்குத் துணை நின்ற வல்லரசுகளும் கை தட்டி வரவேற்றன. இறைமையுள்ள நாட்டின் சனநாயகத்திற்கு இது பொருத்தமென்று உலக சனநாயகவாதிகளும் ஏற்றுக்கொண்டனர். ஆனால் இந்த நாடகத்தில் கலந்து கொள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச நெருக்கடிக்கான குழு என்பன மறுத்தன. இவர்கள் ஏன் கலந்துகொள்ள மறுத்தார்கள் என்பதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளவும் இந்த மகா வல்லரசுகள் விரும்பவில்லை.

ஒரு இறைமையுள்ள பூர்வீக தேசிய இனம் [Native Nation] அழிக்கப்படுவதற்கு துணை நின்ற வல்லரசாளர்கள், சர்வதேச விசாரணையை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்புவது பொருத்தமற்ற எதிர்பார்ப்பு. ஆனாலும் அதற்கான பரப்புரையை சர்வதேச மக்களிடம் கொண்டு செல்வதை நிறுத்த முடியாது. அடுத்ததாக, நிரந்தரமான அரசியல் தீர்வொன்று காணப்பட வேண்டுமென்கிற அழுத்தம் வரலாம் என்பதைப் புரிந்து கொண்டு, அதனை இலங்கைக்குள் முடக்கும் வகையில், நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை அமைத்தது சிங்களம்.

அதனுள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை இழுத்து, தீர்வு காணாமல் காலத்தை நீடிக்கும் நாடகத்தை நிறைவேற்றலாமென திட்டம் போட்டது. கூட்டமைப்போடு ஒரு வருட காலமாக பேசும் போது, இதுகுறித்தான சர்வ தேச அழுத்தம் குறைந்தாலும் , தனது நிஜமான நோக்கத்தை நிறைவேற்ற , தற்போது தெரிவுக் குழு பல்லவியை மறுபடியும் பாட ஆரம்பித்துள்ளது. அதேவேளை இந்தியாவால் கொண்டுவரப்பட்ட 13 வது திருத்தச் சட்டத்தை நீக்குவோமென பசிலும், கோத்தாவும் தீவிரமாக முன் வைத்ததும், அரசியல் தீர்வு விவகாரத்தில் பெரும் திருப்பங்கள் நிகழ்வதைக் காண்கிறோம். பிரதம நீதியரசி சிராணி பண்டாரநாயக்காவை அகற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் மிகவும் கஷ்டப்பட்டு ஆதரவு திரட்டும் ஆளும் கட்சியினர், 13 வது திருத்தச் சட்டத்தை நீக்குவதற்கு இது போல் அதிகம் உழைக்க வேண்டிய அவசியமில்லை. சிலவேளை, மகிந்த அரசு இச்சட்டத்தை அகற்றினாலும், இந்தியா அதற்காக தனது ராஜதந்திர உறவினை இலங்கையோடு முறித்துக் கொள்ளப் போவதுமில்லை.

அதில் கூறப்பட்ட சரத்துக்கள் எல்லாவற்றையும் இணைத்து, 13+ ஐயும் சேர்த்து, மிகவும் காத்திரமான வகையில் 19 வது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவேனென மகிந்தர் கூறப் போகிறார். சிங்களத்தின் இத்தகைய நரித் தந்திரத்தை சுமந்திரன் போன்ற சட்டவாளர்கள் நியாயப்படுத்த முனையக்கூடாது. இதில் மகிந்த சகோதரயாக்களின் மூன்றாவது காய்நகர்த்தலே இந்த கே.பீயை முன்னிறுத்தலும் இளம் நா.உ. க்களின் இலண்டன் பயணங்களும். ஐ.நா.பேரவை மற்றும் மனித உரிமைச் சங்கங்களின் ஊடாக புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மேற்கொள்ளும் நகர்வுகள் யாவும் பலத்த தாக்கத்தினை தமது அரசிற்கு வழங்குவதால் ,இதனை முறியடிக்க வேண்டிய பாரிய திட்டங்களை வகுக்க வேண்டிய நெருக்கடிக்குள் சிங்களம் தள்ளப்படுகிறது. இவைதவிர, தாயக, தமிழக, மற்றும் புலம்பெயர் மக்களை இணைத்து பிரித்தானிய தமிழர் பேரவை நடாத்தும் சர்வதேச சுயாதீன விசாரணைக்கான மாநாடும் பெரும் சிக்கலை சிங்களத்திற்கு உருவாக்கப்போகிறது. ஆகவே வருகிற மார்ச்சில் நடைபெறவிருக்கும் ஐ.நா.மனித உரிமைப்பேரவையின் கூட்டத்தொடருக்கு முன்பாக , தாயக தமிழ் அரசியல் தளத்தையும், புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாட்டையும் வலு இழக்கச் செய்ய வேண்டுமென சிங்களம் முனைப்போடு செயல்படுவதை காணலாம்.

'தோற்கடிக்கப்பட்டுவிட்டீர்கள்' என்கிற மனநிலையை தமிழ் மக்கள் மீது திணிக்க சகல வழிகளிலும் சிங்களத்தின் புலனாய்வுத் துறை இரவு பகலாக கண்விழித்து செயலாற்றுகிறது. இதனையும் தாண்டி, உளவுரண் குலையாமல், தலைவனின் ஒரே இலட்சிய வழித்தடத்தில் பயணிக்க வேண்டிய பொறுப்பு மக்களைச் சார்ந்தது.

Please Click here to login / register to post your comments.