13 ஆவது திருத்தச் சட்டமும் அதற்கு அப்பாலான தீர்வும்

ஆக்கம்: துரைசாமி நடராஜா

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வினை பெற்றுக் கொடுக்கும் பொருட்டு கடந்த காலத்தில் பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

இதன்போது தீர்வுக்கு கைகொடுக்கும் பல விடயங்கள் குறித்தும் அலசி ஆராயப்பட்டன. எனினும் இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வு இன்னும் எட்டப்படாத நிலையில் இன்னும் இழுபறி நிலையிலேயே இவ்விடயம் இருந்து வருகின்றது.

இதற்கிடையில் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தனது தீர்வுத் திட்டத்தை முன் வைக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது மகிழ்ச்சி தரத்தக்கது. எனினும், வாக்குறுதிகளுக்கு செயல் வடிவம் வழங்கி பொருத்தமான தீர்வினை துரிதமாக பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர்.

இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நிலவிய கொடிய யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டு தற்போது அமைதிப் பூங்காற்று வீசிக் கொண்டிருக்கின்றது. இந்த அமைதிப் பூங்காற்று நிரந்தரமாக வீச வேண்டும் என்றால் யுத்தத்தின் தோற்றுவாயான இனப்பிரச்சினைக்கு உரிய அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்பதனை யாரும் மறுக்க முடியாது.

எனவே அரசியல் தீர்வு உரியவாறு இனப்பிரச்சினைக்கு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்ற நிலையில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இல்லை என்று கூக்குரலிடும் இனவாதிகளும் எம்மிடையே இருக்கத்தான் செய்கின்றார்கள். இனவாதிகளின் இத்தகைய பிற்போக்கான சிந்தனைகளால் கடந்த காலங்களில் எமது நாடு பல்வேறு இன்னல்களை அனுபவிக்க நேர்ந்தது.

எனவே இனவாதிகள் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதைப் போன்று செயற்படாது தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு அரசின் இனப்பிரச்சினைத் தீர்வு குறித்த முன்னெடுப்புகளுக்கு ஆதரவு வழங்குவது மிகவும் அவசியமாகும்.

இந்நாட்டில் தமிழ் மக்களுக்கு பிரச்சினை இருக்கின்றது. அந்த மக்களுக்கு இங்கு பிரச்சினை இல்லை என்று கூறினால் இந்நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதம் தோற்றுவிக்கும்.

தமிழர்களுக்கு பிரச்சினை இல்லை என்று கூறுவது பொய்யானது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜயலத் ஜெயவர்த்தன அண்மையில் பாராளுமன்றத்தில் தெவித்தார்.

இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்து கடந்த காலங்களில் பல்வேறு முன்வைப்புகள் இடம்பெற்ற போதும் 13 ஆவது திருத்தச் சட்டம் மற்றும் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கும் அப்பால் சென்று தீர்வினை வழங்குவது என்பன குறித்து முக்கிய பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன.

ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட சர்வகட்சி குழுவின் சிபாரிசும் 13 ஆவது அரசியல் திருத்தச் சட்டத்தின் ஊடாகவே இனப்பிரச்சினைக்கான தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதனை வலியுறுத்தி இருந்தமையும் தெரிந்த விடயமாகும்.

எனினும் 13 ஆவது திருத்தச் சட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் மேலெழுந்த வண்ணமாகவே உள்ளன. முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா 13 ஆவது திருத்தச் சட்டம் அவசரத்தில் உருவாக்கப்பட்டது. பல குறைபாடுகள் இதில் உள்ளன என்று தனது நிலைப்பாட்டினை வெளிப்படுத்தி இருந்தார்.

13 ஆவது திருத்தம் சில குறைகளை தன்னகத்தே கொண்டுள்ளது. அது பாதுகாப்பான திறமை மிக்க அதிகார பரவலாக்கத்தினை முன் வைக்கவில்லை.

இந்த 13 ஆவது திருத்தம் இருபது வருடங்களுக்கு முன்னர் அரசியலமைப்பு முற்றிலும் வேறாக இருந்த வேளையில் அறிமுகம் செய்யப்பட்டது.

நாம் தற்போது இலங்கையில் நிலவி வரும் இனப்பிரச்சினைக்கு முக்கியமாக தமிழ் சமூகத்தினருக்கும் முஸ்லிம் சமூகத்தினருக்கும் சட்ட ரீதியான தீர்வு ஒன்றை யாப்பு மற்றும் அரசியல் சீர்திருத்தம் என்பவற்றின் மூலமாக வழங்குவதற்கான வழிவகைகளை ஆராய்ந்து வருகின்றோம்.

எனவே 13 ஆவது திருத்தத்தைத் தாண்டி அரசியல் யாப்புக்கு இன்னும் செயல்திறன் மிக்க சீர்திருத்தம் ஒன்றை நாட வேண்டியது அவசியம் என்று கலாநிதி ரொஹான் எதிரிசிங்க ஊடகவியலாளரின் கேள்வி ஒன்றுக்கு ஒரு முறை பதிலளித்திருந்தார்.

அத்தோடு 2002 ஆம் ஆண்டு ஒஸ்லோ பிரகடனத்துக்கு அமைவான மாதிரிக் குடியரசை தான் ஆதரிப்பதாகவும் ரொஹான் மேலும் தெரிவித்திருந்தார்.

அரசியலமைப்பு மற்றும் அரசியல் மூலமான தீர்வினை வலியுறுத்துகின்ற பேராசியர் ஜெயம்பதி விக்கிரமரட்ன தேசியப் பிரச்சினை என்பது அதிகாரப் பரவலாக்கம் பற்றியதே என்று குறிப்பிடுகின்றார். பெரும்பான்மையினர் சில விட்டுக் கொடுப்புகளுடன் அதிகாரப் பரவலாக்கத்துக்கு உதவ வேண்டும் என்பதும் இவரது கருத்தாக உள்ளது.

இதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை நடைறைப்படுத்துவது தொடர்பிலும் சிக்கல்கள் மேலெழுந்துள்ளன.

13 ஆவது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாது என்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்க முடியாமைக்கான நியாயமான காரணங்களை தாம் தெளிவாக குறிப்பிட்டுள்ள நிலையில் அதனைக் கேட்டு காலத்தை வீணடிக்கக் கூடாது என்று அரசு தரப்புச் செய்திகள் வலியுறுத்தி இருந்தன.

அத்தோடு திருத்தம் ஒன்றைக் கொண்டு வந்து 13 ஆவது திருத்தத்தில் இருந்து பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை அகற்றுவீர்களா என்று ஊடகவியலாளர் கேட்ட கேள்வி ஒன்றுக்கு அவ்வாறு செய்வோம் என்று அமைச்சரவைப் பேச்சாளர் கருத்து தெவித்திருந்தார்.

இந்நிலையில் மாகாணங்களுக்கு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் இல்லாமல் அரசு ஒரு தீர்வை முன்வைக்க விரும்புமானால் அப்படியானதொரு தீர்வு தமிழ் மக்களுக்கு தேவை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கண்டிப்பாக தெவித்திருந்தது.

இனப்பிரச்சினைக்கு தீPர்வாக 13 ஆவது திருத்தச் சட்டம் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது. இதனை இந்தியா மற்றும் இலங்கை அரசாங்கங்கள் ஒப்பந்த ரீதியாகவும் ஏற்றுக் கொண்டுள்ளன.

இந்தியா, இலங்கை வாழ் தமிழ் மக்களின் அரசியல் தீர்வுக்காக 13 ஆவது திருத்தச் சட்டத்தையே வலியுறுத்துகின்றது.

எனவே இலங்கை இதனை ஏற்றுக் கொண்டு செயற்பட வேண்டும் என்று புத்திஜீவிகள் கருத்து தெவித்துள்ளனர். மேலும் இலங்கைக்கு தனி பௌத்த கொள்கைகள் உதவாது. மாறாக பல்லின சமூகங்களுக்கு ஏற்ற கொள்கைகள் அத்தியாவசியமானதாக உள்ளதாகவும் இவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டம் இந்தியாவால் பலாத்காரமாக எம்மீது திணிக்கப்பட்டது என்றும் இதனை நடைமுறைப்படுத்தக் கூடாது என்றும் காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கக் கூடாது என்றும் ஜாதிக ஹெல உறுமய எச்சக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 13 ஆவது திருத்தச் சட்டம் நடைமுறையில் இருக்கும் பொழுது மாற்றுத் தீர்வைத் தேடி அரசாங்கம் காலத்தைக் கடத்துவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தி வருகின்றது.

13 ஆவது திருத்தச் சட்டம் இவ்வாறு இழுபடுகின்ற நிலையில் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தனது தீர்வுத் திட்டத்தை முன் வைக்கப் போவதாக அரசு தெரிவித்திருக்கின்றது.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவிடம் அரசு இவ் உறுதிமொழியை வழங்கியுள்ளது.

சார்க் உச்சி மாநாட்டுக்காக இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் 13 ஆவது திருத்தச் சட்டத்துக்கு மேலான தீர்வு ஒன்று குறித்து பசீலிக்க வேண்டுமென்று ஜனாதிபதியிடம் கேட்டுக் கொண்டதாக ஊடகங்கள் அப்போது செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதேவேளை 13 ஆவது திருத்தச் சட்டத்தை அல்படுத்துவதிலேயே இழுபறி உள்ள நிலையில் 13 க்கும் அப்பாலான ஒரு தீர்வு குறித்து சிந்தித்துப் பார்க்க முடியுமா என்றும் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர்.

எவ்வாறெனினும் இனப்பிரச்சினையின் காரணமாக எமது நாடு பல சோகத் தழும்புகளை தேகத்தில் பதிந்து கொண்டது.

இத்தழும்புகளை தேசத்தின் தேகத்தில் இருந்து அகலச் செய்வதற்கு பொருத்தமான அரசியல் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்பதனை மறுப்பதற்கில்லை.

பொருத்தமான அரசியல் தீர்வினை பெற்றுக் கொடுப்பதன் மூலமாக ஒளிமயமான ஐக்கியமிக்க இலங்கையை கட்டியெழுப்ப முடியும் என்பதே உண்மை.

Please Click here to login / register to post your comments.