இலங்கைப் பிரச்சினையில் இந்தியாவின் பாத்திரமென்ன?

ஆக்கம்: கிருஷ்ணமூர்த்தி

இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் பாத்திரத்தைப் பற்றி தொடர்ச்சியாகப் பலரும் எழுதியும் பேசியும் வருகின்றனர். இதில் இந்திய அரசுக்கான கோரிக்கைகள், கண்டனங்கள், ஆலோசனைகள், நட்புடன் தெரிவிக்கப்படும் கவனிக்க வேண்டிய விடயங்கள், சுட்டிக் காட்டுதல்கள், குற்றச்சாட்டுகள், வசைகள், ஆதரவுகள் என பல வகைகள் உள்ளன.

இந்தக் கருத்துகளை இலங்கைத் தமிழர்கள், சிங்களத் தரப்பினர், இந்தியர்கள், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தோர், பிறத்தியார் எனப்படும் வெளியுலகத்தினர் என பலரும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தக் கருத்துகளில் சில முக்கியமானவை. பொருட்படுத்தத்தக்கவை. இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கிடையிலான உறவு, இந்த நாடுகளில் ஏற்படவேண்டிய அமைதி, பாதுகாப்பு, இந்த நாடுகளிலுள்ள சமூகங்களுக்கிடையிலான முரண்பாட்டு நீக்கத்திற்கான வழிவகைகள், அவற்றின் அவசியம் போன்றவற்றை, கடந்த கால சமகால எதிர்கால அடிப்படைகளில் வைத்து அவர்கள் இந்தக் கருத்துகளை முன்வைத்து வருகின்றனர்.

அதிலும் பல ஆய்வுகள் இந்தப் பிராந்தியத்தின் அமைதியையும் இந்தப் பிராந்திய மக்களின் நலன்களையும் பாதுகாப்பையும் மையப்படுத்தியவை.

நாடுகளை மையப்படுத்திய ஆய்வுகள் என்பதற்குப் பதிலாக, அரசுகளின் நலனை மையப்படுத்தியவை என்பதற்கப்பால், இந்தப் பிராந்தியத்தில் மக்கள் மற்றும் அவர்கள் அடையாளப்படுத்தும் சமூகங்களை மையப்படுத்திய ஆய்வுகளும் கவனங்களும் முக்கியமானவை.

இவ்வாறு தொடர்ச்சியாகவும் பரந்த அளவிலும் வெளிப்படுத்தப்பட்டு வரும் கருத்துகள் தொடர்பாக இந்திய அரசு எத்தகைய அக்கறையைக் கொண்டுள்ளது?

அது எத்தகைய புரிதல்களைப் பெற்றிருக்கிறது. அல்லது அது இவைகுறித்து அக்கறைப்படவேயில்லையா?

இந்த மாதிரியான கேள்விகள் பலவற்றிற்கு இன்று பதில் காணப்படவேண்டியவையாக உள்ளன.

ஏனெனில், ஏறக்குறைய அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியா வகித்த பாத்திரம் தவிர்க்க முடியாத ஒரு நெருக்கடி நிலையை இலங்கைத் தீவிலுள்ள அனைத்து சமூகங்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது.

இனப்பிரச்சினையைத் தீர்ப்பதிலும் சரி, இந்தப் பிரச்சினையைத் தனது நலன்களுக்காகப் பயன்படுத்தியதிலும் சரி, இந்தியா பெரும் பாத்திரமொன்றைக் கொண்டுள்ளது.

இன்னும் அப்படியான ஒரு முக்கியத்துவத்தையே அது கொண்டுமிருக்கிறது.

இதை மேலும் கூறுவதானால், பிராந்தியத்தில் முக்கியமான சக்தி என்ற வகையிலும் இலங்கை சமூகங்களுடன் வரலாற்று ரீதியாக இந்தியாவுக்குள்ள பிணைப்புகள் தொடர்பாகவும் இந்தியா இலங்கை விவகாரங்களில் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்ற பாத்திரத்தை வகித்து வருகிறது எனலாம்.

அந்த வகையிலே, இந்தப் பிரச்சினை தொடர்பாக இந்திய அரசும் இந்தியத் தலைவர்களும் உயர் மட்ட அதிகாரிகளும் இராஜதந்திரிகளும் அடிக்கடி கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், நடைமுறையில் அவர்கள் தெரிவித்து வருகின்ற கருத்துகளுக்கும் வெளிப்படையான நடவடிக்கைகளுக்கும் முயற்சிகளுக்கும் மாறாகவே நிலைமையும் யதார்த்தமும் உள்ளது.

அதாவது, இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா திடசங்கற்பமான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது என்று இந்தியாவின் தலைவர்கள் அனைவரும் கட்சி பேதமின்றி கால பேதமின்றி சொல்லி வந்திருக்கின்றனர் சொல்லி வருகின்றனர்.

ஆனால், அந்தத் திடசங்கற்பத்தின் தாற்பரியம் என்ன? அதன் அளவு என்ன? அது எத்தகையதாக இருக்கிறது? அதன் பெறுமானம் எத்தகையது? அது வெறும் வாய்ப்பேச்சு என்ற அளவிற்தானா? சம்பிரதாய பூர்வமானதாக உள்ளதா?

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்து வைப்பதில் இந்தியா கரிசனை கொண்டுள்ளது என்று இன்னொரு தளத்தில் அறிவிப்புகள் வந்திருக்கின்றன. அப்படியானால், இந்தக் கரிசனையின் உண்மைத் தன்மை எத்தன்மையை உடையது. அல்லது இந்தக் கரிசனையின் வீச்செல்லையும் விசையும் எத்தகையன?

இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதில் இந்தியா தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொண்டு வந்திருக்கிறது.? இன்னும் அத்தகைய முயற்சிகளை அது முன்னெடுத்து வருகிறது என்று இந்தியத் தலைவர்கள் சொல்லி வருகிறார்கள். இலங்கை வரும் இந்திய இராஜதந்திரிகளும் முக்கியஸ்தர்களும் அமைச்சர்களும் இதைத்தான் சொல்கிறார்கள்.

ஏறக்குறைய இப்படி அவர்கள் சொல்வது சம்பிரதாயமானதாகக் கூட இப்பொழுது மாறிவிட்டது. தாங்கள் சொல்லும் இந்தக் கூற்றுகளை இலங்கையில் இப்போது யாரும் நம்புவதும் இல்லை. பெரிதாகப் பொருட்படுத்திக் கொள்வதும் இல்லை என்றுகூட அவர்கள் யோசிப்பதில்லை.

தொடர்ந்து தாங்கள் சம்பிரதாயபூர்வமான அறிவிப்புகளை இயந்திரமொன்றின் செயற்பாட்டைப்போல எந்த உணர்ச்சியுமின்றி சொல்லிக் கொண்டேயிருக்கிறார்கள்.

இந்தியாவின் இந்தச் செயலாண்மைக்குள் (இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்க்க இந்தியா எடுத்துக்கொண்டு திடசங்கற்பம் (உறுதிப்பாடு), கரிசனை, முயற்சிகள், நடவடிக்கைகள் எல்லாவற்றுக்குள்ளும்) தான், இலங்கையில் இனப்பிரச்சினைப் போர் தீவிரமடைந்ததும் அது மூன்று இலட்சம் வரையான உயிர்களைக் குடித்ததும் நடந்திருக்கிறது.

அப்படியானால், இந்தியாவின் விசுவாசமான நடவடிக்கைகளும் திடசங்கற்பமும் கரிசனையும் செயற்பெறுமதியும் இந்தியாவின் செல்வாக்கும் இந்த விடயத்தில் எப்படியுள்ளன?

இந்தக் கேள்வியை இங்கே எழுப்ப வேண்டியிருப்பதே மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றுதான். ஏனெனில், இதையும் விடக் காட்டமான கேள்விகள் இந்தியாவை நோக்கி இந்த விடயத்தில் ஏற்கெனவே பலர் எழுப்பியிருக்கிறார்கள். இப்போது மீண்டும் இதை இங்கே கேட்பது எல்லோருக்கும் சலிப்பூட்டலாம். ஆனால், என்ன செய்வது; இந்தக் கேள்வி மீண்டும் எழுகிறதே!

இந்திய வெளியுறவு அமைச்சர் கிருஸ்ணா இலங்கைக்கு வரவுள்ளார் என்ற செய்தி கடந்த வாரத்தில் வெளியாகியபோது இலங்கை மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள பல ஊடகங்களும் இந்த செய்தியைக் கேலிப்படுத்தியே பிரசுரித்தன. சில ஊடகங்கள் கேலிச்சித்திரங்களைக் கூட வெளியிட்டிருந்தன. சில ஊடகங்களின் ஆசிரிய தலையங்கத்தில் கிருஸ்ணாவினுடைய விஜயத்தின் மீது நம்பிக்கையற்ற தன்மையையும் இந்தியா தொடர்பான அவநம்பிக்கையையும் வெளிப்படுத்தியிருந்தன.

இந்தியா ஏன் இப்படி நடந்து கொள்கிறது? என்ற கேள்வி பெரும்பாலான தமிழர்களிடம் இன்று தீவிர நிலையில் எழுந்துள்ளது. ஆயிரம் விமர்சனங்களுக்கு அப்பாலும் இந்தியாவின் மீது பெரும்பான்மையான தமிழர்கள் பிடிப்பும் நம்பிக்கையும் கொண்டிருந்தனர் என்பது உண்மையான செய்தி.

தமிழர் தரப்பின் அரசியலாளர்களிற் பலரும் பெரும்பாலான ஆய்வாளர்களும் இலங்கையின் இனப்பிரச்சினையில் இந்தியாவின் பங்கையும் பாத்திரத்தையும் பெரிதாகவே பேசியும் கருதியும் வந்திருக்கின்றனர்.

ஆனால், இவர்களைக் கூட இந்தியா பொருட்படுத்தவில்லை. அதாவது, தன்னை நம்பியவர்களையும் தனக்கு விசுவாசமாக இருப்போரையும்கூட அது கவனத்திற்கொள்ளவில்லை என்று சில விமர்சகர்கள் இந்தநிலை தொடர்பாகக் கூறுகின்றனர்.

இதனால், இந்தியாவை மட்டும் நம்பினாற் போதாது, அதற்கப்பால் மேற்குலகத்தையும் நம்ப வேண்டும். அவர்களுடைய ஆதரவையும் திரட்ட வேண்டும் என்ற கருதுகோளுக்கு இலங்கைத் தமிழர்களிற் பலரும் இன்று நகர்ந்துள்ளனர். தமிழர் சார்பான அரசியலாளர்களிற் பலரும்கூட இத்தகைய நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை அவர்களுடைய அண்மைய கருத்துகள் தெரிவிக்கின்றன.

தமிழர்கள் மேற்குலகத்தை நம்பி, அதை நோக்கி நெருங்கிச் செல்ல இலங்கையோ இந்தியாவை நோக்கி நெருக்கமாகிறது. ஏன்னதான் இருந்தாலும் இலங்கையும் இந்தியாவும் மிகவும் நெருக்கத்துக்குரிய நாடுகள்.

எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கைக்கு இந்தியாவே நட்புச்சக்தி என்று அண்மையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவும் வேறு பலரும் தெரிவித்திருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும்.

இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் யார் என்ன சொன்னாலும் இந்தியா தனக்கென்று வகுத்துக் கொள்ளும் கொள்கையின் அடிப்படையில் மட்டுமே செயற்பட்டு வருகிறது. அதற்கேற்பவே அது நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது. இது துலக்கமான உண்மை.

இந்த உண்மைக்கு அப்பால், யாரும் அதன்மீது கண்டனங்களை வைப்பதும் பாராட்டுவதும் குற்றம்சாட்டுவதும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பதும் நம்பிக்கை வைப்பதும் எதிர்ப்பதும் பயனற்றது. அவைக் குறித்து இந்தியா கவலைப்படுவதில்லை. அது அவற்றையிட்டு கவலைப்படும் நிலையிலும் இல்லை.

இந்தியாவைப் பொறுத்தவரையில் அது உள்நாட்டிலும் சர்வதேச நிலையிலும் பிராந்திய ரீதியிலும் தனக்கு எழுகின்ற நெருக்கடிகளையும் அபாயங்களையும் குறித்தே சிந்திக்கிறது. இது முதலாவது. அடுத்தது, தனக்கு சர்வதேச ரீதியாகவும் பிராந்திய ரீதியிலும் உள்நாட்டிலும் எத்தகைய நன்மைகள் கிட்டுகின்றன? என்ன வகையான நலன்கள் கிட்டும் என்பதற்கேற்பவே அது அரசியற் கொள்கையையும் வெளியுறவுக் கொள்கையையும் இராஜதந்திர நகர்வுகளையும் செய்கிறது. இதற்கேற்பவே அதனுடைய நிகழ்ச்சி நிரல்கள் அமைகின்றன.

இதுவே உண்மை. இந்த உண்மை பரகசியமானதும்கூட. பல தடவைகள் இது பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட்டும் உள்ளன.

ஆனால், இலங்கையின் இனப்பிரச்சினை தொடர்பாக இன்னும் பல ஆண்டுகளுக்கு இப்படியே இந்தியாவின் திடசங்கற்பத்தைக் குறித்தும் கரிசனையைக் குறித்தும் முயற்சிகளைக் குறித்தும் இந்தியத் தலைவர்கள் சொல்லிக் கொண்டிருக்கத்தான் போகிறார்கள்.

இந்தியத் தலைவர்களும் பிரதானிகளும் இலங்கைக்கு வரும்பொழுதெல்லாம் இனப்பிரச்சினை தொடர்பாகவும் அவர்கள் ஏதாவது கதைக்கத்தான் போகிறார்கள். அதே போல, இலங்கையின் அரசியற் தலைவர்கள் இந்தியாவுக்குச் செல்லும்வேளையில் எல்லாம் இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பற்றிப் பேசத்தான் போகிறார்கள்.

இதெல்லாம் ஒரு சம்பிரதாயபூர்வமான விளையாட்டாக மாறியுள்ளது என்று இப்போது சிங்கள அதிகார வர்க்கத்தினருக்கும் தெரிந்துவிட்டது.

பனிப்போர்க்காலத்தில் நிலவிய உலக ஒழுங்கின் காரணமாக அன்றைய சர்வதேச அரசியல் நிலைமைகளையிட்டு இந்தியாவின் அணுகுறை தொடர்பாக இலங்கைக்கு அச்சங்கள் இருந்தன.

அத்துடன் தமிழர்களின் ஆயுதந்தாங்கிய அரசியற் போராட்டத்துக்கு இந்தியா வழங்கிய ஆதரவையிட்டும் இலங்கைக்கு நெருக்கடிகளும் இருந்தன. அச்சமும் இருந்தது.

ஆனால், பின்னர் குறிப்பாக 1990இற்குப் பிந்திய நிலைமைகள் முற்று முழுதாகவே இந்தியாவானது இலங்கை அரசை சிங்களத் தரப்பை அனுசரித்துப்போகும் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்துள்ளது, வரவேண்டியதாக உள்ளது என்பதை இலங்கை தெளிவாகவே புரிந்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை அது தமிழ்த் தரப்புக்கும் சிங்களத் தரப்பினருக்கும் இடையிலான ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிக்க முற்படுகிறது. தமிழர்களுக்கு அரசியல் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று சொல்வதன் மூலம் தமிழ்த்தரப்புக்கான தன்னுடைய ஆதரவைத் தெரிவித்துக்கொள்வது.

இதேவேளை, ஐக்கிய இலங்கைக்குள் ஒருமைப்பாட்டைச் சிதைக்காத வகையில் இனப் பிரச்சினைக்குத் தீர்வுகாணப்பட வேண்டும்.

அத்தகைய தீர்வொன்றுக்கு இந்தியா ஒத்துழைக்கும் என்று சொல்வதன் மூலமாக சிங்களத்தரப்பின் உளநிலையிற் கலவரத்தை உண்டு பண்ணாமல், அதைத் தனக்கு நெருக்கமாக வைத்துக் கொள்வது.

இந்தியாவின் இந்த சமாளிப்புத் தனமான நிலைப்பாட்டைத் தெளிவாகவே சிங்கள அதிகாரத் தரப்புப் புரிந்துள்ளது. எனவே தான், அது ஐக்கிய இலங்கைக்குள் தீர்வு காணப்படும் என்றும் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற ஒரு தோற்றப்பாட்டை தொடர்ச்சியாக ஆனால், வௌ;வேறு விதங்களில் வெளிப்படுத்தி வருகின்றது.

இங்கே இந்தியாவுக்கு ஒரு முக்கிய பிரச்சினை தீர்ந்து விடுகிறது. அதனுடைய நலன்கள் பாதுகாக்கப்படுகின்றன.

இன்றைய நிலையில் இலங்கை அரசு இந்தியாவை விட்டு வேறு பிராந்தியங்களின் ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு விடக்கூடாது என்பதே இந்தியாவின் கவலை. இந்தக் கவலை நீங்க வேண்டுமானால், இலங்கை சிங்களத்தரப்பு கஞ்சுழிக்காதவாறு ஒரு அணுகுறையையும் நிலைப்பாட்டையும் இந்தியா மேற்கொள்ள வேண்டும்.

ஆகவேதான், சிங்களத்தரப்பின் - இலங்கையின் விருப்பத்துக்கு மாறாக இலங்கை யின் இனப்பிரச்சினை விடயத்தில் தமிழர்களுக்கு தமிழ் பேசும் மக்களுக்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்க அது விரும்பல்லை.

இலங்கையைப் பொறுத்த இந்தியாவின் புரிதல் என்பது, சிங்களத் தரப்பின் முதன்மைப்பாட்டையே கொண்டதாக உள்ளது.

அதாவது, இலங்கை என்பது சிங்களவர்களின் தலைமைத்துவத்தைக் கொண்டது, அவர்களுடைய விருப்பத்தையே பிரதானமாகக் கொண்டது என்பதாகும்.

இதையே இந்தியாவின் நிலைப்பாடும் நடைமுறையும் அணுகுமுறைகளும் நிரூபிக்கின்றன. இதை மறுத்துரைப்போர் இந்தியாவின் பிற அணுகுமுறைகளைப் பற்றிய ஆதாரங்களை முன்வைக்க வேண்டும்.

ஆகவே, இந்தியாவின் அரசியல் நலன்களுக்காகப் பலியிடப்படும் ஒரு விடயமாகவே இலங்கையின் இனப்பிரச்சினையும் இலங்கைத் தமிழ் பேசும் மக்களின் அரசியல் போராட்டங்களும் உள்ளன என்பது தெளிவாகும்.

இதனுடைய நீட்சி இன்னும் நீண்ட காலத்துக்குத் தொடரக்கூடும். இங்கே நாம் இந்தியாவைக் குறைத்து மதிப்பிடுவதாகவோ, குறை சொல்வதாகவோ இந்தக் குறிப்பை எழுதவில்லை. பதிலாக இந்தியா ஒரு பிராந்திய வல்லரசு என்ற அடிப்படையில் அது, அதனுடைய நலன்களைக் குறித்தே அக்கறைப்படும் என்ற உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இதை இங்கே குறிப்பிடுகின்றோம்.

ஆகவே, இந்தியாவின் அறிவிப்புகளும் அணுகுறைகளும் சொல்லும்செய்திகளின் பின்னாலுள்ள சொல்லாத செய்திகள் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு என்பது இலங்கையர்களின் சொந்த விடயம் என்பதாகவே உள்ளது.

இதற்கப்பால், அது சிங்களத் தரப்பின் முகக்கோணலை விரும்பவில்லை என்பதாகவும் இருக்கிறது. எனவே, தமிழர்களின் அரசியல் அணுகுறைகள் மீள்பரீசீலனைக்கும் அனுபவ மீள்பார்வைக்கும் உரியதாகிறது.

இதை விடுத்து, இந்தியாவைக் குறைசொல்வதாலோ, இழிவுபடுத்துவதாலோ, நம்பிக்கை கொள்வதாலோ, விசுவாசமாக இருப்பதாலோ எதுவும் நடந்துவிடப்போவதில்லை.

அரசியல் அநாதைகளாகுவதைத் தவிர.

Please Click here to login / register to post your comments.