கண்ணை முடிக்கொண்டு விழித்திருக்கும் சர்வதேசம்

ஆக்கம்: சி.இதயச்சந்திரன்
ஊடக முக்கியத்துவம் பெறுகிறது மாவீரர் தின உரை. அதைவிட முக்கியமானது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு.

இந்தியாவின் குரலுக்காக காத்திருந்து, சர்வதேசத்தின் அனுதாபத்தை வேண்டி நின்ற தமிழ் மக்கள், இறுதியில் எந்தவித சிறு மாற்றமுமற்ற நிலையில், பிரபாகரனின் உரை மூலமாவது விடிவெள்ளி தெரியாதாவென வன்னித் திசைநோக்கிப் பார்த்திருக்கின்றனர்.

சிங்களத்தின் போலி முகத்தின் நிஜத்தினை தரிசிக்கும் தமிழ் மக்கள், கரு உடைத்து வெளிவரக் காத்திருக்கின்றனர்.

எப்பாடுபட்டாலும் ஏ-9 பாதையைத் திறக்க வைத்தால், மாவீரர் தின உரையில் காரசாரமான சுயநிர்ணய உரிமைப் போர் முழக்கங்கள் தவிர்க்கப்படுமென்று சர்வதேசம் தப்புக் கணக்குப் போடுகிறது.

சுயநிர்ணய உரிமைப் போரினைத் தொடருவதற்கான வலுவான நியாயப்பாடுகள் தமிழ் மக்களுக்கும் புலிகளுக்கும் உண்டென்பதை இவர்கள் உணரவில்லை.

தினக் கொலைகளும், பட்டினிச் சாவுகளும், அலைந்து திரியும் அகதி வாழ்வும் உரிமைப் போரிற்கான அடிப்படை கூறுகளை வெளிப்படுத்துகின்றன.

ஏ-9 பாதையை ஒருநாள் திறந்து விடுவதன் மூலம், குடாநாட்டு மக்களை ஒட்டகங்களாக எண்ணுகிறது அரசு. ஒருநாள் நீர் அருந்தி பல நாட்கள் உயிர் வாழுமாம் ஒட்டகம்.

வாகரையில் சிறுவர்கள், படையணியில் இணையாமல், நண்டுசுட்டு பசியைத் தணிக்கிறார்கள். இவை மட்டும் எமது சர்வதேச ஜனநாயகக் கண்களுக்குத் தெரிவதில்லை.

பொதுவாக மாரிகாலமென்றால் சகதியாகும் வாகரை மண்ணில், தமிழ் மக்கள் படும் துன்பம் சொல்லிமாளாது. கூடாரம் அமைத்துக்கொடுக்கக்கூட உலக மனிதாபிமான ஜனநாயகக் காவலர்கள் முன்வரவில்லை.

இராணுவக் கட்டுப்பாட்டுப்பகுதியை நோக்கி வாகரை மக்கள் இடம்பெயர வேண்டுமென தமிழ் ஜனநாயகவாதிகள் அறிவுரை முரசு கொட்டுகிறார்கள். இராணுவப் பிரதேசத்தில் நடக்கும் தினப்படுகொலை பற்றி இவர்களுக்குத் தெரியவில்லை போலுள்ளது.

இராணுவக் கட்டுப்பாட்டிலுள்ள குடாநாட்டிலும் உணவில்லை. அவர்களின் கட்டுப்பாடற்ற வாகரையிலும் உணவில்லை. இதற்கான விளக்கத்தைக் கூற அரசால் முடியாவிட்டால், அதன் துணைவர்களாவது தமிழ் மக்களுக்குப் புரிய வைக்கலாமே.

புதைகுழியின் மீது நின்று சமாதானம் பேச முடியாது. ஆனால் அதை விளை நிலமாக்கிக் கொடி நாட்டலாம்.

ஆகவே, மாவீரர் தின உரையில், சுயநிர்ணய உரிமைப் போர் முழக்கத்தைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள். ஒட்டுமொத்த உலகத் தமிழினத்தின் எதிர்பார்ப்பும் அதுதான்.

வாகரையில் வீழ்ந்து, வவுனியாவில் மிதக்கக்கூடாது. வீழ்வோமாயின் ஒன்றாக வீழ்வோம் என்பதே மக்களின் நிலைப்பாடு.

பட்டினிச்சாவினை எதிர்கொள்ளும் மனிதர்களுக்கு இழப்பதற்கு உயிரைத் தவிர வேறொன்றுமில்லை. பட்டினி கிடப்பவனிடம் வேதங்களை உபதேசிக்காதே என்று பிரம்மஞானிகளும் கூறுவர்.

சர்வதேசத்திற்கு ஆயிரம் பிரச்சினைகள், ஈராக் என்கிற புதைகுழிக்குள் வைத்த காலை எடுக்க முடியாமல், சிரியா, ஈரானின் உதவியை நாடியுள்ளது.

இணைத்தலைமைக்குள் இந்தியாவை இழுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. ஈராக்கினுள் ஜனநாயகத்தை இறக்குமதி செய்ய முடியாமல் திண்டாடுகின்றனர்.

இந்நிலையில் ஆசியாவின் கடல் வழித் தலைவாசலைக் கைவிட முடியாத திரிசங்கு நிலையிலுள்ளது சர்வதேசம்.

கண்காணிப்புக்குழு, செஞ்சிலுவைச் சங்கத்தினூடாகவே சர்வதேசமானது தமது இருப்பினை சிறிலங்காவில் தக்க வைத்துள்ளது. இவர்கள் பார்வையாளராகவிருப்பது தமிழ் மக்களின் அவலத்திற்கு தீர்வினை வழங்காது.

யுத்த நிறுத்த ஒப்பந்தமானது கண்காணிப்புக்குழுவென்ற ஒற்றை நூலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. நூலை அறுக்கும் முயற்சியில் ஈடுபடும் ஜனாதிபதி மஹிந்த, புலியின் கத்தியினால் வெட்ட முயற்சிப்பது வேடிக்கையானது. அதை நம்புவது போல் நடிக்கும் சர்வதேச வல்லரசுகளின் கோமாளித்தனம், அதைவிட சுவராசியமானது.

தமிழ் மக்கள் தரப்பு நியாங்களை யாரிடம் சொல்லி நீதி கேட்பது என்பதிலேயே பலரும் தடுமாற்றமடைந்துள்ளனர்.

தூங்குபவன் போல் நடிக்கும் சர்வதேசத்தை தட்டி எழுப்புவதைவிட, எம்மை அழிக்க முயல்பவருக்கெதிராக ஒன்று திரண்டு முழுப்பலத்தினையும், ஒருமுகப்படுத்துவதே புத்திசாலித்தனமானதாகும்.

தினம் 40, 50 பேர்வரை கொல்லப்படும் ஈராக்கிய மக்களோடு ஒப்பிடுகையில், எம்தேசத்தில் நடக்கும் கொலைகள் சில்லறை விடயமாக சர்வதேசத்திற்கு தென்படலாம்.

லெபனான் மீது இஸ்ரேல் வீசிய குண்டுகளால் கொல்லப்பட்ட மக்கள் தொகையோடு பார்க்கையில், வடக்கு கிழக்கில் வீசப்படும் குண்டுகளால் இறக்கும் மனிதர்களின் தொகை குறைவாக இருப்பதால், அதுபற்றி கவனத்திலெடுக்க சர்வதேச வல்லரசுகள் அக்கறை கொள்வதில்லை.

தேசிய விடுதலைப் போராட்டத்தை, பயங்கரவாதமாகக் கொள்பவர்கள், ஜனநாயக உரிமைக்கான போராட்டமாக விடுதலைப் போரைக் கணிக்க வேண்டுமென எதிர்பார்ப்பது மடமைத்தனம்.

எதிர்பார்த்தது போல் இணைத்தலைமை நாடுகளின் கூட்டறிக்கையும் வெளிவந்துவிட்டது. ஏ-9 பாதையை ஒருநாள் திறக்க அனுமதிக்கும்படி புலிகளைக் கேட்டுள்ளார்கள்.

குற்றுயிராய்க் கிடப்பவனிடம் தானம் கேட்கும் கிருஷ்ண பரமாத்மாக்கள் போலுள்ளது சர்வதேசம்.

யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் நல்லுறவு வெளிப்பாடாக திறக்கப்பட்டதுதான் ஏ-9 பாதை. அதைத் திறப்பதைக் கூட அரசின் மீது அழுத்தம் பிரயோகிக்கத் தயங்கும் சர்வதேசம், தமிழ் மக்களிற்கான சுயநிர்ணய உரிமையைப் பெற்றுக்கொடுக்க முடியாது.

உரிமையென்பது யாசித்துப் பெறுவதல்ல என்பதையே இவை புலப்படுத்துகின்றன. பேச்சுவார்த்தைகளும், யுத்தமும் மாறி, மாறி வருமென்பதே பழைய வரலாறு. ஆனால், இனிவரும் யுத்தம், பேச்சுவார்த்தையை நோக்கி நகரும் வாய்ப்பினை அழித்துவிடலாமென்ற அனுமானத்தால் திகைப்புற்றுள்ளது சர்வதேசம்.

ஈழப் பிரச்சினையில், புலிகள் தரப்பின் படைவலு மேலோங்கி நிலங்கள் பல விடுவிக்கப்பட்ட நிலையில் சமாதான ஒப்பந்தத்தினை சர்வதேசமானது சிறிலங்காவின் மீது திணித்தது.

இதே நிகழ்வு மறுதலையாகி, சிறிலங்காவின் பலம் மேலோங்கியிருந்தால், சமாதானம் பற்றி உலக வல்லரசுகள் சிந்தித்திருக்க மாட்டா.

முகமாலை முறியடிப்பு, ஹபரணை காலித் தாக்குதல் நிகழ்வுகள் நடைபெறாதிருந்தால், இணைத்தலைமை நாடுகள் ஓய்வு நிலையில் இருந்திருக்கும்.

பாரிய மனித அவலத்தினுள் தள்ளப்பட்டிருக்கும் மக்களின் பரிதாப நிலைபற்றிக் கவனத்தில் கொள்ளாமல் இருதரப்பும் தவறு செய்வது போன்றொரு பூசிமெழுகிய அறிக்கைகள் அவர்களின் இருப்பினை கேள்விக்குள்ளாக்கும்.

யார் முதலில் வலிந்த தாக்குதலில் ஈடுபடுகிறார்களென்று கண்காணிப்புக்குழு தனது விரிவான அறிக்கைகளை வெளியிடும் நிலையிலும், புலிகளின் தாக்குதலை முறியடிக்கவே இராணுவம் பதில் தாக்குதலை மேற்கொள்வதாகக் கூறுவது விசனத்திற்குரியது.

தமிழ் மக்கள் தமது ஒரு முகப்பட்ட பலத்தினை வெளிக்காட்டும் போதே சர்வதேசத்தின் ஆர்வப் பார்வை தமிழ்மக்கள் பக்கம் திரும்பும்.

அதுவரை தமிழ் மக்களால் மேற்கொள்ளப்படும் பரப்புரைகள் யாவும், அவர்களின் ஆவணக் காப்பகங்களில் குவிந்து கிடக்கும். இருப்பினும், தமிழ் மக்களின் கல்லறைகள் மீது சமாதானக் கொடி நாட்ட சர்வதேசம் முற்பட்டால், அதனை மீறி எழுச்சி கொள்வதே மக்களிற்கான ஒரே வழி.

Please Click here to login / register to post your comments.