1948 நவம்பரில் முதல்கோணல் இற்றைவரை முற்றும் கோணல்

ஆக்கம்: சி.இதயச்சந்திரன்
மலையகத் தமிழர்கள் 1948 நவம்பர் 15இல் நாடற்றவரானார்கள். அன்றிலிருந்து இற்றைவரை இலங்கை வாழ் தமிழ் மக்களின் மீது இருண்ட வாழ்வு சூழ்ந்து கொண்டுதானிருக்கிறது. வட கிழக்கில் சுயநிர்ணய உரிமைப் போர் வெடித்துள்ளது. மலையக மக்கள் வாழ்வில் மாற்றமில்லை. இருப்பினும், இருட்டினுள் மறைந்த நீதி, இருளைக் கிழித்துக்கொண்டு வெளிக்கிளம்புகிறது. அவ்வொளியில் தமிழ் மக்களைச் சூழ்ந்துள்ள சமாதானக் காவலர்களின் கரும்புகைகள் விலக ஆரம்பித்துவிட்டன.

குற்றுயிராய் வீழ்ந்து கிடக்கும் மனிதரை, ஏறி மிதித்துச் சன்னதம் ஆட, பல வல்லரசுக் கோட்டான்கள் நாள் குறித்தாலும், உறுதி தளரா தமிழ்த் தலைமையை அடிபணிய வைக்க முடியாதென்பதை உணர்ந்துள்ளார்கள். 45 வருடத்திற்கு மேலாக அகதி வாழ்க்கை வாழும் பலஸ்தீன மக்களின் இயல்பு வாழ்க்கைக்குத் தீர்வு ஏற்படுத்த முடியாத சர்வதேசம், தமிழ் மக்களுக்கு என்ன செய்துவிடப் போகிறது?

இஸ்ரேலை அங்கீகரிக்கும் வரை உனக்கு இயல்பு வாழ்க்கையென்பதே கானல் நீர்தானென அச்சுறுத்துகிறது. வியட்னாம் மக்கள் மீது நேபாம் (இரசாயனக்குண்டு) வீசியவர்கள், ஜப்பான் நகரத்தின் மேல் அணுகுண்டைப் போட்டவர்கள், சதாம் ஹ_சைனிற்கு மரண தண்டனை வழங்குகிறார்கள். இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் இருக்கலாம். ஆனால், ஈரான் அதை வைத்திருக்கக் கூடாதாம். இவர்களுக்கூடாகவே எமது நியாயபூர்வமான அபிலாஷைகளை சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்த முனைவோமானால் ஏமாறப் போவது தமிழ் மக்களே. முறிவுற்ற ஜெனீவாப் பேச்சுவார்த்தையில் 'பயங்கரவாதம்" என்ற பதத்தை, சமாதானக் காவலர் எரிக் சொல்ஹெய்ம் பயன்படுத்தியதை உன்னிப்பாக அவதானித்தல் வேண்டும்.

ஆழ் மனதில் மறைந்து கிடந்த அவர்களின் மேலாதிக்க உணர்வுகள், தமது நலன்கள் பாதிப்புறும்போது வெளிப்படுகிறது. அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. இற்கு பொதுவான நடைமுறைக்கொள்கை ஒன்று உண்டு. அதாவது எதையும் அழிக்க விரும்பினால், அதற்கு எதிரான ஒன்றை உருவாக்குவது அது சாத்தியப்படாவிட்டால், அழிக்க விரும்பும் குழுவின் மீதோ அல்லது நாட்டின் மீதோ பணத்தை வாரி இறைக்கும். அதீத பணக்குவிப்பு பெறுபவர்களை திக்குமுக்காட வைத்து, குழப்ப நிலையை உருவாக்கும். இவ்வாறாக அளவிற்கு மிஞ்சிய உபசரிப்பால் அழிந்து போன போராட்டங்கள் அதிகம். நாடுகளும் பலவுண்டு.

புலிகளைப் பொறுத்தவரை, இவ்வகையான ஊடறுப்புக்கள் எதுவுமே ஒத்துவரவில்லை. இவ்வகையான அணைப்புக்களும் அழுத்தங்களும் புலிகளின் இலட்சியத்திற்கு தடைபோட முடியவில்லை. இறுக்கமான போக்கைத் தகர்க்க, உட்பிளவுகளை உருவாக்க முயற்சித்தார்கள். ஆயுதங்களை கடன் அடிப்படையில் அள்ளிவீசி அவர்களின் எதிரியை பலவானாக்க எத்தனித்தார்கள். இன்னமும் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

16 வருடங்களிற்கு முன் மாக்சிஸவாதியான டானியல் ஓட்டோகாவின் சன்டினிஸ்டா (ளுயனெinளைவய) அரசைக்கவிழ்க்க, கொன்ரா (ஊழவெசய) கிளர்ச்சிப்படையை அமெரிக்கா உருவாக்கியது. பெருந்தொகையான பணத்தையும், ஆயுதங்களையும் அள்ளிக் கொடுத்தது. அதில் வெற்றியும் பெற்றார்கள். இன்று அதே நிக்ராகுவாவில் டானியல் ஓட்டேகா, மக்களாதரவுடன் மறுபடியும் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவுள்ளார். வெளிப்பூச்சிற்கு மக்கள் ஜனநாயகம் பேசும் அமெரிக்காவிற்கு, காலங்கடந்தாவது நிக்ராகுவா மக்கள் பாடம் புகட்டியுள்ளனர். இந்நிலையில் லத்தீன் அமெரிக்கா நாடுகளில், உலகச் சண்டியருக்கெதிரான அரசுகள் தினமும் புதிது புதிதாக முளைத்துக் கொண்டுதானிருக்கின்றன.

இந்நாடுகளில் இஸ்லாமியத் தீவிரவாதமென்ற பூச்சாண்டிகள் செல்லுபடியாகாது. ஏனெனில் லத்தீன் அமெரிக்க மக்கள் இஸ்லாமியர்கள் அல்லர். அங்கு 'கம்யூனிஸப் பயங்கரவாதம்" தலையெடுப்பது பற்றிப் பேசுவார்கள்.

பனிப்போரின் பின், கம்யூனிஸ அரசுகளை சிதைக்கும் நடவடிக்கைகளில் தற்காலிக வெற்றியடைந்தார்கள். அதற்குப் பின்னான காலங்களில் உலகமயமாக்கலை தீவிரப்படுத்தி, இஸ்லாமியப் பயங்கரவாதம் என்ற கருத்தை உயர்த்திப் பிடித்தார்கள். தாம் வளர்த்து விட்டவர்களுக்கெதிராகவே, பயங்கரவாதத்திற்கெதிரான போரை உருவாக்கினார்கள். முன்னைய காலங்களில் பின்லாடனும், சதாமும் மேற்குலகிற்கு நெருக்கமானவர்கள்தான்.

குர்திஷ் இன மக்கள் மீது சதாம் இரசாயனக் குண்டுகள் வீசும்போது மௌனம் சாதித்தவர்களே இவர்கள். ஒப்பிடுவதாயின், 61 சிறார்கள் வன்னியில் கொல்லப்பட்டபோதும் கவலையுடன் மௌனமானார்கள்.

சோவியத்திற்கெதிரான ஆப்கான் போரில் முஜாகிதீனிற்கு முண்டுகொடுத்து பின்லாடனை உருவாக்கியவர்களும் இவர்களே. ஆப்கான் மாணவர் அமைப்புக்கள் தலிபானாக உருவெடுத்து முஜாகிதீனை அகற்றி, இஸ்லாமியவாதக் கடும்போக்கு அரசொன்றை உருவாக்கினார்கள்.

நீண்ட காலமாகவே தலிபான் அடிப்படைவாத அரசு பற்றி அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை. செப்டெம்பர் 11, இரட்டைக் கோபுரத் தாக்குதலின் பின் விழித்துக்கொண்டது மேற்குலகம். உலகை தம் பிடிக்குள் கொண்டுவர 'பயங்கரவாதத்திற்கெதிரான போர்" என்கிற ஆயுதத்தை கையிலெடுத்துக் கொண்டார்கள்.

ஆப்கானிஸ்தான் நாடானது சிரியா, ஈரான், ஈராக் போன்று இராணுவ, பொருளாதார பலம் நிறைந்த தேசமல்ல. அதைக் கைப்பற்றுவது இவர்களுக்கு மிக இலகுவாக இருந்திருக்கிறது. அத்துடன் அந்நாடு, ஆசியாவின் எல்லையில் அமைந்திருப்பதும், எதிர்கால பிராந்திய ஆதிக்க நலனிற்கு ஒத்திசைவானதுதான்.

அணு ஆயுத நாடுகளான இந்தியா, பாகிஸ்தானிற்கு அருகில் தமது பிரசன்னம் இருப்பது நீண்டகால நோக்கில் சாதகமான அம்சங்களை தமக்கு வழங்குமெனவும் இவர்கள் புரிந்திருக்கலாம். அதேவேளை "பேரழிவு ஆயுத" புனை கதைகளை சோடித்து ஈராக்கையும் கைப்பற்றிவிட்டார்கள். இதில் இவர்களுக்கு இரட்டை நலன்கள் கிடைத்திருக்கின்றன. முதலாவதாக ஈரானின் இரு பக்கத்திலும் தமது பிடியை இறுக்குவது. இரண்டாவதாக இஸ்ரேலின் மீதான ஈராக்கின் இராணுவ அச்சுறுத்தலை அகற்றுவது.

இவை நீண்டகால நலன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆக்கிரமிப்புக்கள், குறுகிய கால தந்திரோபாயத்தில் அரபுலகின் எண்ணெய் வளம், சீனா, ரஷ்யாவின் பிடிக்குள் சிக்கக்கூடாது. அதேபோன்று எண்ணெய் வியாபாரம், யூரோ நாணயப் பொறிமுறைக்குள் சரியக் கூடாதென்பது அமெரிக்காவின் விருப்பமாகவும் உள்ளது. அமெரிக்காவும் ஐரோப்பாவும் ஒரே நேரத்தில் பல இலக்குகளையும், எதிரிகளையும் எதிர்கொள்ளும் நிலையில், சீனாவானது தனது பொருளாதார ஆதிக்கத்தை ஆபிரிக்கக் கண்டத்தில் ஊன்ற ஆரம்பித்துள்ளது.

இவ்வாறான உலக சூழலில், உலக அங்கீகாரத்திற்காக, மேற்குலகினை அரவணைத்துச் செல்லவேண்டுமென்கிற கருத்து நிலையானது. எவ்வகையான பலனை எமக்கு அளிக்குமென சற்று நிதானமாக எடைபோட வேண்டும்.

இவர்களை அணைத்தவர்களின் கைகள் கட்டப்பட்டு, கழுத்து நெறிக்கப்பட்ட வரலாறுகள் அதிகம். எதிரியைக் கண்டு அச்சமடைபவர்கள், அடிமையாக வாழப் பழகிக்கொள்ள வேண்டும். அவர்களின் பலத்தையிட்டு பதற்றமடையாமல், மேலாதிக்க நலனால் உருவாகும் முரண்பாடுகளை சரியாகக் கையாள்வதன் மூலமே நியாயபூர்வமான எமது இலக்கினை நோக்கி நகரலாம். ஆதிக்க சக்திகளின் பதற்றம் நிறைந்த நகர்வுகளே ஐரோப்பியத் தடையாகவும், பேச்சுவார்த்தைச் சடங்குகளாகவும், ஆயுதக்குவிப்பாகவும் வெளிப்படுகிறது.

நீதியான போராட்டத்தின் பக்கம் நிற்க வேண்டிய தேவை அவர்களுக்கில்லை. அப்படி இருக்கவேண்டுமெனக் கற்பிதம் கொள்வது எம்மை நாமே ஏமாற்றுவது போலாகும். கதிரவெளிப்படுகொலைக்கு கவலை தெரிவிக்கக்கூடத் திராணியற்றிருக்கிறது சர்வதேசம். நிக்கராகுவா மக்களால் டானியல் ஒட்டேகா தெரிவுசெய்யப்பட்டால், அவர்களுக்கான உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்கா கூறுகிறது. இதுதான் அவர்களின் கருத்துச் சுதந்திரம், மக்கள் ஜனநாயகம். தமக்குச் சார்பான அரசுகளுக்கு மட்டுமே அவர்களின் உதவி கிட்டுமா? போகிற போக்கில் ஏகாதிபத்திய சார்பு நிலை நாடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே போகலாம். இந்த ஏகாதிபத்தியங்கள் உலகைக் கூறுபோட்டு ஆண்ட காலத்தில், இலங்கையிலும் பெரும் மனித அவலத்தை உருவாக்கினார்கள்.

பிரிட்டிஷார் இலங்கையில் காலனித்துவ ஆட்சி செய்கையில் தமிழகத்திலிருந்து தமிழ் மக்களை கூலிகளாகக் கொண்டுவந்து சேர்த்தார்கள். மலையகம் செழிப்பானது. தங்கத்தை சுரண்ட முடியாது. மண்ணிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்தார்கள்.

மலையக மக்கள் சிந்திய வியர்வையிலும் இரத்தத்திலுமிருந்து இலங்கைத் தேசம் உரம் பெற்று நிமிர்ந்தது. தேயிலையும் இயற்கை இறப்பரும் கொழும்புத்தரகு முதலாளிகளின் பைகளை நிரப்பியது. அவர்களின் பையன்கள் வெளிநாடு சென்று கல்விச் செல்வம் பெற்றார்கள். பிரித்தானியர் வெளியேறும் போது தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கைத் தரகர்களின் கையில் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய மண்ணும் ஸ்ரீமாவுடன் ஒப்பந்தம் செய்து அம்மலையக மக்களை நிர்க்கதியாக்கியது. பல கோடி மக்கள் வாழும் தேசத்திற்கு கூலிகள் தேவையில்லை. தேவையற்ற, தீண்டப்படாத மக்களாக மாற்றப்பட்ட மலையகத் தமிழர்கள், 1948 நவம்பர் 15இல் நாடற்றவரானார்கள்.

இலங்கை வரலாற்றில் நிகழ்ந்த மிகக்கொடூரமான மனித அவலமிது. சுதந்திரமடைந்த பின் நிகழ்ந்த முதல் கோணல், தற்போது முற்றிலும் கோணலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. பிரித்தானிய ஏகாதிபத்தியத்தாலும், இந்திய தரகு முதலாளிகளாலும், இலங்கைத் தேசிய வாதிகளாலும், மலையகத்தலைமைகளாலும் துரோகமிழைக்கப்பட்ட தொழிலாளர்கள் வர்க்கமே இத்தோட்டத்தொழிலாளர்கள்.

நாட்டின் முதுகெலும்பினை தடி வைத்து நிமிர்த்த சரியான தலைமை இல்லை. எலும்பு நிமிர, ஏகாதிபத்தியங்களோ அல்லது சிங்கள மேலாதிக்கமோ விரும்பாது. அதிகாரப் பகிர்வென்ற போர்வையில் அதன் தலைமைகளை விழுங்கிக் கொண்டதே கடந்த கால வரலாறாகப் பதிவுற்றுள்ளது. இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய வரலாற்றுப் பாடம் சொல்லும் செய்தி என்னவெனில், நண்பன் யாரென்ற தேடலை புறந்தள்ளினால், வாழ்க்கை முழுவதும் எதிரியை இனங்காணும் அனுபவங்களிலேயே எமது நேரம் செலவிடப்படும்.

Please Click here to login / register to post your comments.