பிரகடனப்படுத்தப்படாத யுத்தமும் தமிழ் மக்கள் மீதான கெடுபிடியும்!

ஆக்கம்: அஜாதசத்ரு
வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் பிரகடனப்படுத்தப்படாத யுத்தமொன்றின் மூலம் அங்குவாழும் தமிழ் மக்கள் போரின் அவலங்களை தினமும் எதிர்கொண்டுவரும் நிலையில் தலைநகர் கொழும்பு உட்பட தென்னிலங்கையில் வசிக்கும் தமிழ் மக்கள் கைது, காணாமல் போதல், கப்பம் கொடுத்தல், படுகொலை போன்ற மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு முகம்கொடுத்துவருகின்றனர். இதெல்லாவற்றிற்குமப்பால் அதிஉச்ச பாதுகாப்பையும் சந்திக்கு சந்தி வீதிச் சோதனைச் சாவடிகளையும், விசேட கண்காணிப்புப் பிரிவின் துரிதமான செயற்பாடுகளை மிக அதிகளவில் கொண்டுள்ள தலைநகர் கொழும்பில் கடந்த மூன்று மாதகாலத்திற்கும் மேலாக ஆட்கடத்தல், கப்பம் பெறுதல், கைது, காணாமல் போதல் போன்ற சம்பவங்கள் மிக அதிகளவில் அதிகரித்துள்ள போதிலும் அதனைக் கட்டுப்படுத்துவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

தலைநகரில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் கைது, காணாமல் போதல், படுகொலைச் சம்பவங்கள், தமிழ் வர்த்தகர்களை கடத்திச்சென்று கப்பம் பெறுதல் போன்ற நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், அண்மையில் ஒய்வுபெற்ற முன்னாள் பொலிஸ் மா அதிபர் சந்திரா பெர்னாண்டோ ஆகியோரிடம் முறையிட்ட போதும் ஜனாதிபதி ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டதே தவிர எந்தவொரு ஆரோக்கியமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இரவு நேரங்களில் மட்டுமன்றி பகல்வேளையிலும் பொதுமக்கள் அதிகமாக கூடுமிடங்களுக்கு அருகாமையிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் நிறைந்த இடங்களிலும் வைத்தே பலர் வெள்ளை வான் ஆயுதபாணிகளால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.

தலைநகர் கொழும்பில் கடந்த மூன்றுமாத காலப்பகுதியில் 40 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கடத்தப்பட்டுள்ளனர். கடத்தப்பட்ட பலர் கோடிக்கணக்கான ரூபா பணம் கப்பமாக பெறப்பட்ட நிலையில், விடுவிக்கப்பட்டுள்ளனர். பணம் செலுத்தியும் இன்னும் பலர் விடுவிக்கப்படவில்லையென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனைவிட, தலைநகர் கொழும்பிலும் அதனை அண்டிய புறநகர் பகுதிகளிலும் கடந்த மூன்று மாதகாலப்பகுதியில் 36 பேருக்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

மேலும் வெலிக்கடை, மகசின் ஆகிய சிறைச்சாலைகளில் குறிப்பாக கொழும்பிலுள்ள வர்த்தக நிலையங்கள், ஆடைத் தொழிற்சாலைகள் என்பவற்றில் கடமையாற்றும் மலையக இளைஞர், யுவதிகள் பெருமளவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சியில் மலையகத்தில் இரு பிரதான அரசியல் கட்சிகளான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி என்பன தொடரும் இவ்வாறான சம்பவங்களைக் கட்டுப்படுத்த எந்தவொரு நடவடிக்கையையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.

குறிப்பாக, தலைநகர் கொழும்பில் தொழில்புரியும் மலையக இளைஞர், யுவதிகள் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டு வீணாக அவர்களின் வாழ்க்கையில் சிரமங்களை ஏற்படுத்துவதை தடுத்துநிறுத்துவதற்கு கூட மலையக அரசியல் தலைமைகள் இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றே விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான சம்பவங்களை கண்டித்து இடம்பெறும் மக்கள் போராட்டங்களில் மலையக மக்கள் முன்னணி இடையிடையே முகத்தைக் காட்டிக் கொண்டாலும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அதனை முற்றாகவே நிராகரித்து வருகிறது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்பாக ஜனாதிபதி உட்பட அரசின் உயர்மட்டத் தரப்பினருக்கு பலமுறை முறையிட்டு எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில் தான் ஆட்கடத்தல், கைது, காணாமல் போதல், படுகொலை என்பவற்றை சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு கொண்டுவர மக்கள் கண்காணிப்புக்குழுவும், காணாமல் போனோரை கண்டறியும் குழுவும் அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஐக்கிய சோஷலிச கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரியவை தலைவராகக் கொண்டியங்கும் மக்கள் கண்காணிப்பு குழுவில் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் எம்.பி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர் என். ரவிராஜ் எம்.பி, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன, கொழும்பு மாநகர சபையின் எதிர்க்கட்சித் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆகியோர் இணைந்து செயற்படுகின்றனர்.

அதேநேரம், புதிய இடது சாரி முன்னணியின் முக்கியஸ்தர் எம். தயாளனை இணைப்பாளராக கொண்டு காணாமல் போனோரை கண்டறியும் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த இரு அமைப்புகளின் செயற்பாடுகள் மாத்திரமே காணாமல் போனோரின் உறவினர்களுக்கு ஓரளவு நம்பிக்கையளிப்பதாகவுள்ளது.

அத்துடன், இந்த இரு அமைப்புகளுக்கும் இதுவரை கிடைக்கப் பெற்றுள்ள சுமார் 40 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக சர்வதேச மன்னிப்புச் சபை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளுக்கான அமைப்பு, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, ஜனாதிபதி ஆணைக்குழு என்பவற்றின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், இதுவரை எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது கவலைக்குரியதொரு விடயமாகும்.

தலைநகரில் தொடரும் கடத்தல், படுகொலைச் சம்பவங்கள் தொடர்பாக இந்தியத் தூதரகம் உட்பட பல்வேறு மேற்குலக நாடுகளின் தூதரகங்களுக்கும் மக்கள் கண்காணிப்பு குழுவின் பிரதிநிதிகள் முழுமையான விபரங்களுடன் முறையிட்டுள்ள போதிலும் குறிப்பாக இந்தியத்தூதரக அதிகாரிகள் கூட அது தொடர்பில் எந்தவொரு கரிசனையையும் வெளியிடவில்லை.

அயல் நாடான இந்தியா மற்றும் மேற்குலக நாடுகளின் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பிலான மௌனம் இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல் சம்பவங்களை ஊக்குவிப்பதாகவே அமைந்துள்ளது.

கடந்த மூன்று வாரங்களுக்கு முன்னர் கொழும்பு கொச்சிக்கடை ஜெம்பட்டா வீதியில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரை கடத்திச்சென்ற ஆயுதக்குழுவொன்று பெருந்தொகைப் பணத்தை கப்பமாக கோரிய நிலையில் குறிப்பிட்ட நபரின் மகனிடமிருந்து கப்பப் பணத்தை பெறவந்த ஆயுதக் குழுவொன்றின் நால்வரில் ஒருவர் கொட்டாஞ்சேனையில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார்.

கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த குறிப்பிட்ட நபரின் வாக்குமூலங்கள் பெறப்பட்ட நிலையில், அந்த நபரை உடனடியாக விடுவிக்குமாறு மேலிடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள் கண்காணிப்பு குழுவினர் இதனை வெளியுலகிற்கு கொண்டுவந்தனர்.

இந்த நிலையில் குறிப்பிட்ட நபர் கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திலிருந்து பாதுகாப்பு பிரச்சினை உள்ளதாகக் கூறி வேறிடத்திற்கு மாற்றப்பட்ட போதிலும் இதுவரை அந்நபர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதோர் நிலைமைக்கு மத்தியில் தான் கடந்த புதன்கிழமை நண்பகல் காணாமல் போனோரை கண்டறியும் குழுவின் ஏற்பாட்டில் கைது, காணாமல் போதல், ஆட்கடத்தல், படுகொலை என்பவற்றை கண்டித்தும் இவற்றை உடனடியாக நிறுத்துமாறும் சர்வதேச சமூகத்தையும் அரசாங்கத்தையும் வலியுறுத்தும் மக்கள் போராட்டமொன்று நடைபெற்றது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த மக்கள் போராட்டத்தில் காணாமல் போனோரின் பெற்றோர், உறவினர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், பொது அமைப்புகளின் பிரமுகர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்ன தலைமையில் நடைபெற்ற இந்த மக்கள் போராட்டத்தில் ஏனைய தமிழ்க் கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட போதிலும் வழமைபோன்று அரசாங்கத்தை கண்டிக்கும் இந்தப் போராட்டத்தை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நிராகரித்துள்ளது.

இந்த மக்கள் போராட்டத்தில் வெள்ளை வான் ஆயுதபாணிகளிடம் தமது பிள்ளைகளை பறிகொடுத்த தாய், தந்தையும், கணவன்மாரை பறிகொடுத்த இளம் பெண்களும் தங்களது உறவுகளை விடுவிக்குமாறு கோரி கண்ணீர்விட்டு அழுதது சம்பவ இடத்தில் நின்ற அனைவரது உள்ளத்தையும் உருக வைத்தது.

தமது தந்தையரை பறிகொடுத்த 20 இற்கும் மேற்பட்ட சிறு குழந்தைகளும் எதுவும் புரியாத நிலையில் `எங்கள் அப்பாவை பிடித்தவர்கள் தயதுசெய்து விடுதலை செய்யுங்கள்' என்ற பதாதைகளை தாங்கியவாறு தமது தாய்மாருக்கு அருகில் நின்ற சோகக் காட்சி இந்த நாட்டின் எதிர்கால இளஞ் சந்ததியினரின் வாழ்க்கை பற்றிய பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளது.

` என்னுடைய மகன் எந்தவொரு குற்றமும் செய்யாதவர் அவரை நம்பித்தான் எமது குடும்பத்தின் எதிர்காலமேயுள்ளது. தயவுசெய்து விட்டுவிடுங்கள்' என்றார் ஒரு தாய். `என்னுடைய கணவரை எதற்காக கடத்தினார்கள் என்று எமக்கு தெரியவில்லை. அவரை நம்பித்தான் நானும் என்னுடைய இரண்டு வயதுக் குழந்தையும் உள்ளோம். கெஞ்சிக் கேட்கிறேன் தயவுசெய்து விட்டுவிடுங்கள்' என்றார் வத்தளையிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் ஒருவரின் இளம் மனைவி. எனது கணவருடன் தொலைபேசியில் பேசுவதற்காகவாவது தயவுசெய்து ஒருதடவை அனுமதி தாருங்கள் என்றார் கைக்குழந்தையுடன் காணப்பட்ட திருகோணமலையைச் சேர்ந்த இளம் பெண்னொருவர்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக இடம்பெற்ற மக்கள் போராட்டத்தில் கலந்து தமது உறவுகளை இழந்தவர்களின் உணர்வலைகள் இவ்வாறாக இருந்தன. அதேநேரம், நாடுபூராவும் இடம்பெற்றுவரும் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தென்னிலங்கையின் சிங்கள இடதுசாரி தலைமைகள் முன்வந்து குரல்கொடுக்கின்ற அதேநேரம், முஸ்லிம் அரசியல் தலைமைகள் அதிலிருந்து விலகிக் கொண்டு வருவது அவர்களின் சந்தர்ப்பவாத அரசியலையே துல்லியமாக வெளிக்காட்டி நிற்கின்றது.

இன்று தமிழ் வர்த்தகர்களையும் தமிழ் மக்களையும் இலக்குவைக்கும் அதே கரங்கள் நாளை முஸ்லிம் சமூகத்தை நசுக்க முற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதமிருக்கிறது.

ஏன் எதற்காக கடத்தப்படுகின்றோம், சுட்டுக் கொல்லப்படுகின்றோம் என்ற எந்தவொரு உண்மையும் தெரியாத நிலையில் வாழ்வை இழந்து கொண்டிருக்கும் இளந்தலைமுறையினரை அந்தக் கொடூரங்களிலிருந்து காப்பாற்றுமாறு இலங்கை அரசிடம் நியாயம் கேட்டு தோற்றுப் போயிருப்பவர்களுக்கு சர்வதேச சமூகம் என்ன பதில் சொல்லப் போகிறது.

*திருஞானசம்பந்தர் திருமாறன், `சமன்பாய' மாத்தளை றோட், வக்கமுனா என்ற இடத்திலிருந்து 30.08.2006 இல் கடத்தப்பட்டார்.

* சோதிலிங்கம் கிருஷ்ணானந்தன் திருகோணமலை சிவன் கோயில் வீதியைச் சேர்ந்த இவர் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் வைத்து 04.09.2006 இல் காணாமல் போயுள்ளார்.

*சின்னக்கிளி கருணாகரன் பரக்கும்பாபிளேஸ் கொழும்பு -06, இல் உள்ள வீட்டுக்கு அருகில் வைத்து 27.12.2005 இல் கடத்தப்பட்டுள்ளார்.

*இரட்ணசிங்கம் ஜெகன்தனபால், மெனிறிகம பிளேஸ் கல்கிசையில் தங்கியிருந்த இவர் 13.09.2006 இல் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். இவர் மொரட்டுவ பல்கலைக்கழக் மாணவன் என்பதும் குறிப்பிடத்தக்கது.

*ரொசான் பெரேரா அரங்கபொலவத்த, வெலிவிற்ற, கடுவலயிலுள்ள வீட்டில் வைத்து 04.04.2006 இல் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

*உதயா பிரியதர்சன எயிறியா வெற்றிய கிரிபத்கொடையிலுள்ள வீட்டிலிருந்து 31.01.2006 இல் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

*ஹமில்டன் மரிந்திரன் வட்டம்புலம் இளவாலை 08.01.2006 இல் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

*நிசாந்த சந்திரசிறி வட்டவல ரணலயிலுள்ள வீட்டில் வைத்து 23.08.2006 இல் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

*மகேஸ்வரன் போல்ராஜ் - பிரதேச சபை றோட் மானிப்பாய் 01.01.2006 இல் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

*இளையக்குட்டி பாலக்கிருஷ்ணன் - மெயின்றோட், இளவாலை 10.01.2006 இல் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

*சிவராஜா சிறிதரன் - கலட்டிபாம், ஏழாலை மேற்கு, சுன்னாகத்தை சேர்ந்த இவர் பற்றிமா மாவத்தை களுபோவில தெஹிவளையில் வைத்து 16.04.2006 இல் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

*சிவலிங்கம் பகிரதன் - குப்பிளான் கிழக்கை சேர்ந்தவர் பற்றிமா மாவத்தை களுபோவில தெஹிவளையில் வைத்து 16.04.2006 இல் கடத்திச் செல்லப்பட்டார்.

*குணச்செல்வம் மகிந்தன் - பருத்தித்துறை றோட் கொடிகாமத்தை சேர்ந்தவர் கொழும்பு - 14 கிராண்ட்பாஸில் வைத்து 22.08.2006 இல் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

*அகமட் ஜலால் பிரேமரத்ன இலக்கம் - 15, றொட்னிவீதி, கொழும்பு - 08 இலுள்ள வீட்டிலிருந்து 22.08.2006 இல் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

*திருமதி நிசாந்தினி அகமட் ஜலால் பிரேமரத்ன இலக்கம் - 15, கிராண்ட்பாஸ் வீதி கொழும்பு - 14 இல் வைத்து 22.08.2006 இல் கடத்தப்பட்டுள்ளார்.

*லோகேந்திரராஜா கோமதி - வலகம்பாவ மாவத்தை, பொரு பனறோட், இரத்மலானையிலுள்ள வீட்டில் வைத்து 22.08.2006 இல் கடத்தப்பட்டுள்ளார்.

*இராசநாயகம் பிள்ளை சிவானந்தமூர்த்தி - மந்துவில் கிழக்கு கொடிகாமம் 06.05.2006 இல் கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.

Please Click here to login / register to post your comments.