மூடப்பட்டுள்ள பாதை முடக்கப்பட்டுள்ள வாழ்க்கை

ஆக்கம்: யாழின் மைந்தன்
"யாழ். மாவட்டத்தில் பாதுகாப்புப் பிரிவினர் கடல் தொழில் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி பாய்கள் பயன்படுத்தும் வள்ளங்களில் அதுவும் சூரியன் உதித்த பின் கடல் தொழிலுக்கு அனுமதிப்பதால் பலருக்கும் தொழிலில், சிலவேளைகளில் எந்த மீனும் அகப்படாமல் திரும்புவதுண்டு. இந்நிலையால் 5,000 க்கும் அதிகமான மீனவக் குடும்பங்கள், பசி,பட்டினியுடன் வாழும் நிலை உருவாகியுள்ளது. பலர் என்னிடம் பகல் வேளைகளில் வந்து ஒன்றுக்கும் வழியில்லை, கஞ்சிதான் குடித்தோம் எனச் சொல்லும் போது என்மனம் படும் வேதனை வார்த்தைகளில் சொல்ல முடியாது" -யாழ்.மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் என்.நவரெத்தினம். யாழ்.மாவட்டத்துக்கான ஒரே தரைவழிப்பாதை மூடப்பட்டு இன்றுடன், எண்பத்தைந்து நாட்கள் கடந்து விட்டன. இப்பாதையைத் திறப்பதன் மூலம் ஆறு இலட்சம் மக்கள் அனுபவித்துவரும் மனித அவலங்களையும் அவர்கள் எதிர்கொள்ளும் பட்டினிச்சாவையும் உடனடியாக தவிர்க்குமாறு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் சர்வதேச சமூகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் பேச்சுவார்த்தைகளில் கோரிக்கை விடுத்தும் அரசாங்கம் விடாபிடியாக ஏ-9 முகமாலைப் பாதையைத் திறக்க முடியாதென திட்டவட்டமாகக் கூறி குடாநாட்டில் வாழும் மக்களுக்கு எதிரான மனிதஉரிமை மீறலை அம்பலப்படுத்தியுள்ளது. தமிழன் எங்கு வாழ்ந்தாலும் பேரினவாத அடக்குமுறைக்கு முகம்கொடுப்பது இன்று நேற்றல்ல அது அரை நூற்றாண்டு வரலாறாகும். குடாநாட்டுக்கான ஏ-9 பாதையை மூடிவிட்டு ஏதோ குடாநாட்டு மக்களுக்குப் போதிய உணவுப்பொருட்களை கப்பல் மூலமாக அனுப்பி வருவதாக நியாயம் கற்பித்து வருகின்றது.

இன்றைக்கு யாழ்ப்பாணக் குடாநாடு திறந்த வெளிச் சிறைச்சாலையாக, பாதுகாப்புப் பிரிவினர் வேண்டிய நேரத்தில் வேண்டியதெல்லாம் அம்மக்களின் போக்குவரத்தைத் துண்டித்து சுற்றிவளைத்துத் தேடுதல் நடத்தும் பிரதேசமாக மாறியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஒன்றுமறியாத மக்களை நகரின் மத்தியில் அன்றாட அலுவல்களுக்கு வந்த மக்களை எந்தப்பக்கமும் திரும்ப முடியாதளவுக்கு வெயிலில் நிறுத்தி ஐந்து மணித்தியாலம் உடல் சோதனைக்கு உட்படுத்தினர். இது மீண்டும் குடாநாட்டை யுத்த பூமிக்குள்ளாக்கும் நடவடிக்கை என மக்கள் அலுத்துக்கொண்டனர்.

இப்பிரதேசத்தின் நிலைமைகளை தெற்கில் இருந்து சுயாதீனமான தகவல்களை வெளியிடும் அமைச்சர்களும் அதிகாரிகளும் மக்களோடு மக்களாய் இருந்து கருத்துகளைப் பெற்றுத் தகவல்களை வெளியிட முடியாத நிலையிலுள்ளனர். உண்மையிலேயே அரசாங்கத்தின் பிரதிநிதியான அரசாங்க அதிபரோ திணைக்களத் தலைவர்களோ எந்த அறிக்கைகளையும் விடமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது உண்மைகளை வெளிக்கொணர முடியாமல் `வாய்ப்பூட்டு' போடப்பட்டுள்ளது.

யாழ். மாவட்டத்தில் வாழும் ஆறு இலட்சம் மக்களுக்கு ஒருவருக்கு ஒருநாளைக்கு கால் கிலோ அரிசி வேகவைத்து உண்பதற்கு எனக் கணக்கிட்டால் குடாநாட்டுக்குத் தினமும் 230 மெற்றிக்தொன் அரிசி தேவையானது. இதேமாதிரி கோதுமை மா, சீனி, பருப்பு, பால்மா ஆகியவையும் தேவையாக இருக்கும். இந் நிலையைப் புரிந்து கொள்ள முடியாத அரசாங்கம், ஒரு நாட்டில் அனர்த்தம் இடம்பெறும் இடங்களுக்குப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொருள் அனுப்பி வைப்பது போல் குடாநாட்டு மக்களுக்கு உணவுப் பொருள் அனுப்பிவைக்கின்றது.

1990 ஆம் ஆண்டு முதல் 2002 ஆம் ஆண்டுவரை ஏ-9 பாதை மூடப்பட்டிருந்த போது வர்த்தகர்கள் கப்பலில் உணவுப் பொருட்களை எடுத்து வந்துள்ளனர். அவர்களால் எடுத்துவரப்பட்ட பொருட்கள், குடாநாட்டு மக்களின் தேவைக்கும் அதிகமாக ஆறுமாத காலத்துக்கு சேமிப்பில் வைத்திருந்தார்கள். ஆனால் அரசாங்கம் குடாநாட்டுக்கு அனுப்பும் பொருட்கள் ஒரு வாரகாலத்துக்குப் `பதுக்கி' களஞ்சியங்களில் வைக்கப்படுகின்றது. இதனை அரச அதிகாரிகள் மறுப்பதற்கில்லை.

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் தமிழர் பிரதேசங்களில் மூன்றாம் ஈழப்போர் நடைபெற்ற காலங்களில் குறிப்பாக குடாநாட்டில் மக்கள் இடப்பெயர்வு உட்பட பல அவலங்களைச் சந்தித்த போதெல்லாம் உள்ளூர் அரச சார்பற்ற தொண்டர் நிறுவனங்கள் அம்மக்களுக்கு ஆதரவளித்து உணவளித்து காத்து வந்துள்ளனர். இப்பணிகளில் சர்வதேச லயன்ஸ் கழகம்,றோட்டரிக் கழகம், இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், மனித முன்னேற்ற நடு நிலையம், தமிழ் அகதிகள் புனர்வாழ்வுக் கழகம், அறவழிப் போராட்டக்குழு, ஊற்று நிறுவனம் எனப் பலஅமைப்புகள் ஈடுபட்டுக் கொண்டுள்ளதோடு சேவையாற்றி வந்துள்ளனர். இவர்கள் பெருந்தொகையான உணவுப் பொருட்களை கப்பல் மூலம் தருவித்து மக்களின் பசிப்பிணியைப் போக்கியிருந்தனர். இன்றோ, ஆறு இலட்சம் மக்கள், ஒருவேளை உணவுக்காக ஏங்கும் வேளையில் மனித அவலங்களைக் கண்டும் கேட்டும் `மௌனிக்கும்' நிலையில் இருப்பது வேதனையளிக்கிறது.

இன்றைக்கு யாழ்ப்பாணக் குடாநாட்டில் உணவுப் பொருட்களுக்காக ஏங்குபவர்களில் யாழ். மாவட்ட லயன்ஸ் கழக உறுப்பினர்களும்தான் இவர்கள் நினைத்தால் சர்வதேச உதவியைப் பெற்று குடாநாட்டின் பசி பட்டினிக்கெதிரான தொண்டினை முன்னெடுக்கலாம்.இது மனிதாபிமான பிரச்சினை.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் தினக்கூலிகள் அனைவரும் வேலையிழந்து பயங்கரமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களது கையிலே பணமில்லை. யாரும் உதவுவதற்கு வாய்ப்புமில்லை. அழும் குழந்தைக்கு பாலுக்குப் பதிலாக வெறும் சாயத் தண்ணீரை சூப்பிப் போத்தல்களில் விட்டுப் பருக்குகிறார்கள்.

வறுமையின் கொடுமையைப் பற்றிப் பலரும் கூறுகின்றபோது, வேதனைப்படுவதைத் தவிர உதவ முடியாது. யாழ். மாவட்ட கடல்தொழில் கூட்டுறவுச் சங்க சமாசத் தலைவர் எம்.நவரெத்தினம் கூறிய கருத்துகள்; இன்றைக்கு குடாநாட்டின் நிலைமையை கண்ணிருந்தும் காண மறுக்கும் கல் நெஞ்சத்தவரையும் கலங்க வைக்கும்.

`யாழ். மாவட்டத்தில் பாதுகாப்புப் பிரிவினர் கடல்தொழில் நடவடிக்கைகளை மட்டுப்படுத்தி, பாய்கள் மூலம் வள்ளங்களில் கடல்தொழில் செய்வதற்கு அனுமதி வழங்குவதால் பலருக்கு தொழிலில் சில வேளைகளில் எந்த மீனும் அகப்படாமல் திரும்புவதுண்டு. இந்நிலையில் 5,000 க்கும் அதிகமான மீனவக்குடும்பங்கள் பட்டினியுடன் வாழும்நிலை உருவாகியுள்ளது. பலர் என்னிடம் பகல்வேளைகளில் வந்து ஒன்றுக்கும் வழியில்லை கஞ்சிதான் குடித்தோம் எனச் சொல்லும் போது என் மனம் படும் வேதனை வார்த்தைகளில் சொல்ல முடியாது, எனக் கூறியுள்ளார்.

சுருங்கச் சொன்னால் யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் இன்று எதிர்கொள்ளும் மனித அவலங்கள் என்றைக்கும் அவர்கள் எதிர்கொண்டவையல்ல. சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் நிறைவு பெற்றிருப்பது அவர்களது வாழ்வில் பேரடியாக மாறியுள்ளது. அதற்கு அடையாளமாக ஒன்றுமறியாத நாற்பத்தாறு மீனவர்கள் எண்பது நாட்களின் பின் உறவுகளோடு இணைந்து கொள்வதற்காக வெள்ளைக் கொடிகளை பறக்கவிட்டு குருநகரை நோக்கிவந்த போது, ஏதோ விடுதலைப் புலிகள் பட்டப் பகலில் வருகின்றார்கள் என அச்சம் கொண்டு பாதுகாப்புப் படையினர் அவர்களை நோக்கிப் பல்குழல் எறிகணைத் தாக்குதலை நடத்தினர். சுமார் ஒரு மணித்தியால தனிமைப்போரை நடத்தியமை மக்கள் மத்தியில் போர் சிந்தனைகளை உருவாக்கியுள்ளது. காலம் நேரம் பார்த்து தாக்குதல் நடத்த இப்போது சரிப்பட்டு வராது எனப் பாதுகாப்புப் படையினர் தமக்கு விரும்பும் நேரமெல்லாம் "சிவபூமி" யில் எறிகணை வேட்டையைக் காணமுடிகிறது. இதற்கு `இராணுவப் பயிற்சி' என அர்த்தம் சொல்லப்படுகிறது.

இது பற்றிக் குட்டிக்கதையொன்றை மக்கள் கிரகித்துப் பேசுவது வேடிக்கையானது மட்டுமல்ல சிரிப்புக்குரியது. ஒரு முறை முக்கிய தலைவர்கள் கடவுளைச் சந்திக்கச் சென்றார்களாம். அமெரிக்க ஜனாதிபதி புஷ், பாகிஸ்தான் ஜனாதிபதி முஷாரவ், இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ ஆகியோரே சென்றனர். முதலில் ஜோர்ஜ் புஷ் கடவுளிடம் கடவுளே ஈராக்கில் சமாதானததை ஏற்படுத்த என்னால் முடியுமா எனக் கேட்டார். கடவுளும் எல்லாக் கணக்குகளையும் போட்டுப்பார்த்து அது சாத்தியமில்லை என்றாராம். முஷாரப் சென்று கடவுளை வணங்கிவிட்டு நான் ஆட்சியில் இருக்கும் போது இந்திய காஷ்மீர் பாகிஸ்தானுடன் இணையுமா எனக் கேட்டார். கடவுளும் பலமுறை யோசித்துவிட்டு நீ அந்த முயற்சியில் இறங்காதே அதற்கு வாய்ப்பே கிட்டாது. ஆசைப்படாதே என்று கூறி அனுப்பிவிட்டாராம். கடைசியாக இலங்கை ஜனாதிபதி மகிழ்ச்சி ததும்ப கடவுளிடம் சென்று எனது காலத்தில் வடக்கு,கிழக்குப் பிரச்சனையை சமாதானமாகத் தீர்த்துவைக்க விரும்புகிறேன்.அது சாத்தியம் தானா எனக்கேட்டார். கடவுள் ஆழ்ந்த யோசனையில் இருந்து விழித்துப் பல கணக்குகளைப் போட்டுப் பார்த்துவிட்டு கடவுளே அழத் தொடங்கிவிட்டார். பதபதைத்துப் போன ஜனாதிபதி ராஜபக்‌ஷ கடவுளே நான் என்னதவறு செய்துவிட்டேன் என மன வேதனையுடன் கேட்டார். கடவுளும் பதில் சொன்னார். வடக்கு, கிழக்குப் பிரச்சினை எனது ஆயுளில் கூட தீர்க்கப்பட வாய்ப்பில்லை என்றார்.

இக்கதை சுவாரஸ்யமானதுதான். ஆனால் வடக்கு, கிழக்கு மக்களின் அவல வாழ்க்கை இன்று தொடர்கதையாகி வருகின்றது. யுத்த நிறுத்தம் அமுலில் இருக்கும் போது யுத்தம் நடைபெறும் அதிசய நாடாக வடக்கு, கிழக்கு மாறிவருகின்றது. பேச்சுவார்த்தைகள் சாதகமான பலனைத் தராவிட்டாலும் இருபகுதியினரும் யுத்தத்தில் இறங்கக் கூடாதென சமாதான பேச்சுக்கான அனுசரணையாளர் சொல்ஹெய்ம் கூறிய செய்தி எத்தனை நாளைக்கு காப்பாற்றப்படுமென்பது குடாநாட்டு மக்கள் மனதில் தொக்கி நிற்கும் கேள்வியாகும்.

பசியும் பட்டினியும் அவர்களை கொள்ளை நோய் போல் பற்றவைப்பது தவிர்க்க முடியாது.

Please Click here to login / register to post your comments.