முரண்பாட்டுக்கான தீர்வில் தோல்வி

ஆக்கம்: கலாநிதி குமார் ரூபசிங்க
கடந்தவார கட்டுரையில் நாம் சுட்டிக்காட்டியிருந்தது போல், சுவிற்சர்லாந்து பேச்சுவார்த்தை வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. எந்தவிதமான இணக்கப்பாடுகளும் இன்றி தோல்வியில் முடிவடைந்திருக்கின்ற இந்தப் பேச்சுவார்த்தையானது நாட்டை மீண்டும் ஒரு முறை யுத்தத்தின் விளிம்பிற்குக் கொண்டு சென்றிருக்கிறது. விடுதலைப் புலிகளின் பேச்சுவார்த்தைக் குழுவினர், ஒஸ்லோவிற்கான தமது பயணத்திட்டத்தை கைவிட்டு விட்டு உடனடியாகவே நாடு திரும்பியிருக்கின்றனர். யுத்த நிறுத்த உடன்படிக்கையைப் பேணுவதற்கு இரு தரப்பினரும் இணங்கியிருந்த போதிலும், பேச்சுவார்த்தை முடிவடைந்த மறுதினமே வடக்கில் கடும் மோதல்கள் இடம்பெற்றன.

பேச்சுவார்த்தை தோல்விக்கான காரணங்கள்

இரு தரப்பினருமே ஊடகத்துறையினருடன் செயற்பட்டுக் கொண்டிருந்தனர். விடுதலைப் புலிகளைப் பொறுத்தவரையில், அரசாங்கத்திற்கெதிரான தமது குற்றச்சாட்டுகளை மேற்கொள்வதற்கான ஒரு பிரசார வாய்ப்பாக இது இருந்தது. எதிர்பார்க்கப்பட்டது போலவே, அவர்கள் ஏ-9 பாதை மூடப்பட்டமை காரணமாக ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடி மற்றும் பொது மக்களின் கஷ்டங்கள் பற்றி கவனம் செலுத்தினர். மேலும், ஜெனீவா-1 பேச்சுவார்த்தையின் இணக்கப்பாடுகளை அமுல்படுத்துதல் மற்றும் யுத்த நிறுத்த உடன்படிக்கையின் அமுலாக்கம் பற்றியும் பிரஸ்தாபித்தனர். மறுபுறத்தில் அரசாங்கமோ, கடல்மார்க்கமாக சர்வதேச செஞ்சிலுவை அமைப்பினர் குடாநாட்டிற்கு போதுமான பொருட்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதிக்காமை குறித்து விடுதலைப் புலிகளை விமர்சனம் செய்தனர்.

அடிப்படை விடயங்களான ஜனநாயகம் மற்றும் பல்லினத்துவம் என்பவற்றை வடக்கில் ஏற்படுத்துதல் மற்றும் விடுதலைப் புலிகளினால் ஆரம்பிக்கப்பட்ட வன்முறைகள் என்பவற்றை விபரிக்க வேண்டும் எனவும் பேச்சுவார்த்தையை நடத்தி முடிப்பதற்கு ஒரு கால வரையறை வேண்டும் எனவும் அரசாங்கம் வலியுறுத்தியது. பேச்சுவார்த்தை தொடர்பில் வெளிப்படுத்தப்பட்ட மற்றொரு விடயம் என்னவென்றால், வடக்கு, கிழக்கு இணைப்புத் தொடர்பில் ஜே.வி.பி.யினரால் உச்ச நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டிருந்த முறைப்பாட்டிற்காக ஜே.வி.பி. யை பிரதிநிதித்துவப்படுத்தியிருந்த எச்.எல்.டி. சில்வா மற்றும் கோமிம் தயாசிரி ஆகிய சட்டத்தரணிகள் பற்றியதாகும். இதனால், உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு இரு சாராருமே ஒருவரையொருவர் சாடும் பொருட்டு ஊடகங்களுக்கு தீனி போட்டதுடன் இரகசிய, நேர்காணல்களையும் கொடுத்திருந்தனர். சமாதான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து செல்லும் பொருட்டு இரு தரப்பினருமே ஊடகங்களை ஒரு பகிர்வு ஊடக கலாசாரத்தினூடாக ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்குவதற்கு பயன்படுத்தியிருக்கவில்லை.

பேச்சுவார்த்தை முறைமையும் வாய்ப்பானதாக இருக்கவில்லை. ஒருவரையொருவர் நம்பாமல் எதிரிகள் போல இரு தரப்பினரும் எதிரும் புதிருமாக அமர்ந்திருந்தனர். பேச்சுவார்த்தை உண்மையான வெற்றியளிப்பதற்கு அவசியமான எதிர்வாதப் பிரதிவாதங்கள் இருந்தன. ஆனால், இரு தரப்பினருமே தமது கடும் நிலைப்பாடுகளுடன் விடாப்பிடியாக ஒட்டிக்கொண்டிருக்கும் நோக்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தார்கள். பேச்சுவார்த்தை முறைமையானது ஒரு நிலைக்குரிய பேரப்பேச்சாக இருந்தது. இரு தரப்பினருமே தமது நிலைப்பாட்டில் இருந்து இம்மியளவும் விட்டுக் கொடுக்காமல் தமது நிலைப்பாடுகளில் அதாவது, இரு தரப்பினரும் இருவேறுபட்ட விவகாரங்கள் பற்றியே முதலில் பேசவேண்டும் என்ற இறுக்கமான நிலைப்பாட்டில் இருந்தனர். முக்கியமான விவகாரங்களை தீர்ப்பதற்கும் ஒரு பொது அடிப்படையை ஏற்படுத்துவதற்கு இரு தரப்பினரும் கலந்துரையாடி பிரச்சினையை தீர்க்கின்ற அணுகுமுறையாக இது இருக்கவில்லை. ஒரு பிரச்சினையை தீர்க்கும் அணுகுமுறை என்பது இரு தரப்பினருக்கும் வெற்றிக்குரிய ஒரு முயற்சியாக காணப்படுகிறது. ஆனால், நடந்து முடிந்த பேச்சுவார்த்தை அவ்வாறானதாக இருக்கவில்லை. ஒரு நிலைப்பாட்டிற்குரிய பேரப்பேச்சுகளானவை, தீர்க்கமுடியாத கடினமான பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஓர் உவப்பற்ற முறைமையாகும். பிரச்சினையை இவை மேலும், தீவிரப்படுத்துகின்றன. தத்தமது நிலைப்பாடுகளில் இறுக்கமாக இருப்பதற்கு இரு தரப்பினருக்குமே அவர்களது தலைவர்களிடமிருந்து தெளிவான அறிவுறுத்தல் இருந்தது.

பேச்சுவார்த்தையின் துயரம் என்னவென்றால் வெறும் தொழில்நுட்ப விவகாரங்களுக்காக இணக்கப்பாடு காணப்படாமை ஆகும். கடும் அழுத்தங்களுக்குள்ளாகியிருக்கும் ஒரு சனத்தொகைக்கு எவ்வாறு உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை கொண்டு செல்வது என்பதுதான் இந்தப்பிரச்சினை. இணக்கப்பாட்டுக்குரிய ஒரு தீர்வு சாத்தியமானதாகவே இருந்தது. உதாரணமாக சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் தமது கொடியுடன் சுயாதீனமாக பொருட்களை எடுத்துச் செல்வதற்கு விடுதலைப் புலிகள் இணங்கியிருக்க முடியும். அதேபோல், அரசாங்கமானது ஏ-9 பாதைக்கு சில மட்டுப்படுத்தப்பட்ட பாவனைக்கு அனுமதியளித்திருக்கலாம். விடுதலைப் புலிகள் ஏ-9 பாதையை வரி வசூலிப்பதற்காகவும் தமது துருப்பினரின் நகர்விற்காகவும் பயன்படுத்துவர் என்பதே அரசாங்கத்தின் கவலையாக இருந்தது. இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழுவின் மேற்பார்வையுடன் போக்குவரத்து இடம்பெறுவதை அனுமதிப்பதன் மூலம் இந்த விவகாரம் தீர்க்கப்பட்டிருக்க முடியும்.

பேச்சுவார்த்தை ஏன் இரண்டு தினங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டது என்பதையும் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இரு தினங்கள் என்பது என்ன மாய இலக்கமா? பிரச்சினைக்கு தீர்வு காணுகின்ற வரையிலும் தரப்பினர் தமது தலைவர்களுடன் ஆலோசனை பகரக்கூடிய வகையிலும் ஏன் கூடுதலான நாட்களுக்கு பேச்சுவார்த்தை நடைபெறக்கூடாது. காலத்தினால் மட்டுப்படுத்தப்படாமல் 1978 ஆம் ஆண்டு அமெரிக்காவில் எகிப்திற்கும் இஸ்ரேலுக்குமிடையே நடைபெற்ற `காம்ப்டேவிட்' மாநாட்டை நான் ஞாபகப்படுத்துகிறேன். அங்கே இரு தரப்பினரும் ஒரு தீர்வை எட்டுவதற்காகவென்று சென்று அந்தத் தீர்வை எட்டும் வரை தொடர்ச்சியாக 12 தினங்களுக்கு அங்கே தங்கியிருந்தனர். 12 தினங்களும் மிக இரகசியமான முறையில் பேச்சுவார்த்தை நடைபெற்று வெற்றியில் முடிவடைந்தது.

தோல்வியடைந்திருக்கும் இப் பேச்சுவார்த்தையின் விளைவுகள் என்ன?

தோல்விக்கு இட்டுச் செல்கின்ற வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை விட அவற்றை நடத்தாமல் இருப்பதே மேல் என்று எனது கட்டுரைகளில் வாதிட்டிருந்தேன். ஒவ்வொரு தடவையும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடையும் போது, அது உச்சளவு வன்முறை மற்றும் பெரும் தனிப்படுத்தலுக்கு இட்டுச் செல்கிறது. இலங்கையிலே மற்றொரு யுத்தத்தின் விளைவுகளானது பெரிதும் துயர் மிக்கதாக இருக்கும். இராணுவ வழிமுறைகள் மூலம் யுத்தம் வெல்லப்பட முடியும் என்று இரு தரப்பினரும் மீண்டும் ஒரு முறை உணர்கிறார்கள்.

மீண்டும் ஒரு முறை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரையை கேட்கவிருக்கிறோம். தேச விடுதலைக்கான இறுதிப் போராட்டம் விரைவில் ஆரம்பமாகும் என்று கடந்த வருட மாவீரர் தின உரையின் அடிப்படையில் அவர் உரை நிகழ்த்துவார். வன்முறைக்கு மாற்றீடான ஒரு தீர்வை முன்வைப்பதற்கு அவர்கள் ஒரு வருட காலக்கெடுவை மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்கு வழங்கியிருந்தார்கள். சகல கஷ்டங்களுக்கு மத்தியிலும் வன்முறை வழிகளினூடாக தமிழ் மக்கள் இப்போது தமது சொந்த முயற்சிகளில் தங்கியிருக்க வேண்டியிருக்கிறது என்று அவர் வாதிடுவார். ஆனால் அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் விடுதலைப் புலிகள் ஒரு தீவிரவாத அமைப்பாகவும் தனிநாடு என்ற தமது கனவை முன்னெடுத்துச் செல்வதற்கான தெளிவான நிகழ்ச்சித் திட்டம் இருக்கிறது. அத்துடன், விடுதலைப் புலிகள் இயக்கம் இராணுவ ரீதியாக பலவீனப்படுத்தப்பட வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாக இருக்கும். யுத்த கோட்பாடுகள் ஊடகங்களை ஆக்கிரமித்திருக்கும்.

அண்மையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் சுதந்திரக் கட்சிக்குமிடையில் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையில் எத்தகைய தாக்கத்தை இது ஏற்படுத்தும். மோதல் ஆரம்பம் எவ்வாறு இந்த உடன்படிக்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த உடன்படிக்கையானது வரலாற்று முக்கியத்துவம் மிக்கதும் அவசியமானதுமாகும். ஆனால், யுத்த நிலைமையானது இந்த உடன்படிக்கைக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இனப் பிரச்சினை தொடர்பில் பேச்சுவார்த்தை ஊடான ஓர் தீர்வை காணுவதும் வடக்கு, கிழக்கில் ஒரு அதிகார பகிர்வை நோக்கிச் செல்வதுமே இந்த உடன்படிக்கையின் பிரதான அடிப்படையாகும். இதனால், ஐ.தே.க. தொடர்ந்தும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு தீர்மானம் எடுக்குமா அல்லது தொடர்ந்து அரசாங்கத்தில் இருந்து கொண்டு சமாதானத்திற்காக வலியுறுத்துமா? அடுத்த சில வாரங்களில் விடையளிக்கப்படுவதற்கான வினாக்கள் இவை.

மனித உரிமை மீறல்கள் மிக மோசமாக இருக்கும். ஏற்கனவே, பல நாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. மறுபுறத்தில், சர்வதேச ரீதியாக கடும் விமர்சனத்தை அரசாங்கம் முகம் கொடுக்க வேண்டியிருக்கும். சட்டத்தின் மூலமான எந்தப் பாதுகாப்பும் இன்றி மக்கள் பீதியில் வாழ்வர். கொலைகளும் ஆட்கடத்தல்களும் அதிகரிக்கும். ஊடக சுதந்திரமே முதல் பலிக்கடாவாகும். பத்திரிகை சுதந்திரத்தை மட்டுப்படுத்துவதற்கான மற்றும் தணிக்கை செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்படும்.

ஒட்டு மொத்தத்தில் ஜே.வி.பி.யும் ஹெல உறுமயவுமே மகிழ்ச்சிடையவர். தமது நிலைப்பாடு சரியானதாகியிருப்பதாகவும் விடுதலைப் புலிகள் அழிக்கப்படும் வரை யுத்தம் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் வாதிடுவர். ஆனால், தமது பிள்ளைகளை அவர்கள் யுத்த களத்திற்கு அனுப்பமாட்டார்கள். தாங்கள் கூட யுத்த முனைகளுக்கு செல்லமாட்டார்கள். தேசப்பற்றுள்ள ஏழை இளைஞர்களே தாக்குதல்களின் விளைவுகளை தாங்கிக் கொள்வர். தேசப்பற்று யுத்தம் என்ற போர்வையில் அரசாங்கத்துடன் இணைவதற்காக ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமயவின் நீடிக்கப்படும் முயற்சிகள் இருக்கக் கூடும்.

சர்வதேச சமூகத்தைப் பொறுத்தவரையில், குறிப்பாக அனுசரணையாளர்கள் என்ற வகையில் நோர்வேயானது தாங்கள் பயன்படுத்தி வரும் பேச்சுவார்த்தை முறைமை குறித்து தீவிரமாக சிந்திக்க வேண்டியிருக்கிறது. அதாவது இந்த முறைமை போதுமானதா, தாங்கள் அடைய விரும்புகின்ற பெறுபேறை வழங்குகிறதா என்பது பற்றி ஆராய வேண்டும். இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் நிலைப்பாட்டிற்குரிய பேரப் பேச்சுகளுக்கான இடம் மற்றும் அடிப்படையை வழங்குவது தோல்வியிலேயே முடிவடைந்திருக்கிறது. நோர்வே தூதுவர் அடிக்கடி பல நாட்களுக்கு இலங்கைக்கு வருவதும் சில மணித்தியாலங்களுக்காக கிளிநொச்சி செல்வதும் உயர் மட்ட அதிகாரிகளை சந்திப்பதுமான முறைமை அவசியம் தான். ஆனால், இது இரு தரப்பினருக்குமிடையே ஒரு நிகழ்ச்சித் திட்டத்தை தயாரிப்பதற்கான ஓர் அடிக்கடி பயணம் செய்கின்ற இராஜ தந்திரமாக இருக்க வேண்டும். (Shuttle Diplomacy) . இதுவே இரு தரப்பினரிடையேயும் வெற்றி பெறத் தவறி வருகிறது. பேச்சுவார்த்தைக்கான நிகழ்ச்சித் திட்டமானது நன்கு தயார்படுத்தப்பட்டதாக அன்றி, பேச்சு ஆரம்பமாவதற்கு முதல் நாள் விவாதிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது. தீர்வுகள் அல்லது எதிர்பார்க்கப்படும் விளைவுகள் முற்கூட்டியே நிர்ணயிக்கப்பட்டதாவும் குறைந்தது, அதன் வடிவமைப்பு பரந்தளவில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். இந்தியாவுக்கான இலங்கை அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்கின்ற நிலைமையில் இந்தியா தொடர்ந்தும் இலங்கை முரண்பாட்டில் இருந்து விலகி நிற்க முடியாது. தென்னிந்தியாவில் வழமையான ஆர்ப்பாட்டங்கள் இலங்கைத் தமிழர்களுக்காக இடம் பெறும். மோதல் மீண்டும் ஆரம்பமாகாமலிருப்பதை உறுதி செய்வதற்கு இந்தியா தனது சிறப்புத் தூதுவரை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப வேண்டும். இலங்கைக்கான தனது உதவியை ஜேர்மன் அரசாங்கம் இடை நிறுத்தியது போல ஏனைய நாடுகளும் செய்கின்ற அபாயம் இருக்கிறது.

தரப்புகளுக்கிடையே முறைசாரா கலந்துரையாடல்களை நடத்துவதற்கான சகல முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். இதற்காக அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான பல்வேறு ஆதரவு வடிகால்கள் உயிர்ப்பூட்டப்பட வேண்டும்.

Please Click here to login / register to post your comments.