யாழ்ப்பாணத்தைப் பிரித்து வைப்பது யார்? 'ஜெனீவா 2'க்குப் பின் எழும் நிகழ்ச்சிகள்

ஆக்கம்: பீஷ்மர்
ஜெனீவா- 2 மாநாடு முடிந்து இன்றுடன் ஒருவாரம் தான் ஆகின்றது. ஆனால் அந்த மாநாடு நடந்திருக்காமல் இருந்திருக்கலாமே என்று கொழும்பு கவலைப்பட வேண்டிய அளவுக்குப் பல விடயங்கள் மேற் கிளம்பியுள்ளன. ஜெனீவா- 2 தோல்வியில் முடிந்துவிட்டது என்பதை சிங்கள ஊடகங்களுக்கு அரசால் மறைக்க முடியவில்லை. சிங்கள ஊடகங்களும் மக்களுக்கு மறைக்கவில்லை. சர்வதேச நாடுகளின் நிர்ப்பந்தம் காரணமாகவே கூட்டப்பட்ட மாநாடு. இவ்விடயம் பற்றி இலங்கையில் நிலவும் ஆழமான கருத்து வேறுபாடுகளை மிகத் துல்லியமாக காட்டி நிற்கின்றது.

இம் மாநாட்டின் முக்கிய அம்சமாக இரு விடயங்களைக் கூறவேண்டும்.

1. எரிக்சொல்ஹெய்ம் அங்கு ஆற்றிய உரை.

2. ஏ-9 பாதையை திறக்க முடியாது என்று அரசு திட்டவட்டமாகக் கூறியமை.

இரண்டாவதன் காரணமாக இரு பகுதியினரும் இணைந்த கூட்டறிக்கை ஒன்றினை வெளியிட முடியவில்லை.

சொல்ஹெய்மின் உரைக்கு வருவோம். அதில் இரு விடயங்களை அவர் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார்.

1. சர்வதேச நாடுகளுக்குள்ள பிற உலக நாடுகள் பற்றிய பிரச்சினைகள் காரணமாக அவர்கள் தொடர்ந்து இலங்கை விடயத்தில் ஆர்வம் காட்டப் போவதில்லை. இலங்கையின் இரண்டு பகுதியினரும் உண்மையான தீர்வுக்கான ஒரு மனநிலையைக் காட்டாவிட்டால் தாங்கள் ஒதுங்கிப் போய்விடக் கூடும் என்று கூறினார்.

2. வரவிருக்கும் அரசியல் தீர்வு இலங்கையைப் பிரிப்பதாக அமையாமல் ஓர் இறைமை கொண்ட அரசுக்குள்ளேயே தீர்க்கப்பட வேண்டும் என்பதே அவர் கூறியமை ஆகும்.

இந்த உரையின் முக்கியத்துவத்தை அடுத்து வந்த சில நாட்களுக்குள்ளேயே உணரக் கூடியதாக இருந்தது. இலங்கைக்கு உதவி செய்யும் நாடுகளின் கூட்டுத்தலைமை நாடுகள் இலங்கை அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தீர்வு ஒன்றிணை நோக்கிச் செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளதாக அறிகின்றோம்.

இந்த மாநாட்டை வைத்துக் கொண்டு இம்முறை அரசு தனக்கான பிரசாரங்களைக் கொண்டு செல்ல முடியவில்லை. விடுதலைப் புலிகளையும் அரசாங்கத்தையும் சரி சமனாகவே சர்வதேச நாடுகள் இவ்விடயத்தைப் பார்த்துள்ளன. அரசு என்ற வகையில் தங்களைக் கண்டிக்காமல் அரசு நிலையற்ற நிறுவனம் என்ற வகையில் விடுதலைப் புலிகளைக் கண்டிக்க வேண்டும் என்பது அவர்களது விருப்பம். அதுமட்டுமல்லாமல் ஜெனிவா - I இல் எடுத்துக் கொள்ளப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவில்லை என்பதும் சொல்ஹெய்மினின் குற்றச்சாட்டு.

சுருக்கமாக சொன்னால் இம்மாநாடு அரசின் ஸ்திரமற்ற போக்கையே காட்டிட்டு எனலாம்.

இதனை மிகத்துல்லியமாகக் காட்டியது ஏ-9 பாதையை திறக்கப்பட முடியாது என்ற அரசாங்கத் தீர்மானமாகும்.

உண்மையில் ஏ-9 பாதை திறப்பு பற்றிய விடயமே முக்கியமாகியுள்ளது. ஆனையிறவுக்கு அப்பால் உள்ள யாழ். மாவட்டத்திற்கு இனிமேல் கடல், ஆகாய வழித்தொடர்புகள் தான் உண்டு. தரைப்பாதைத் தொடர்பு மறுக்கப்படுகிறது என்ற நிலைப்பாட்டை அரசாங்கம் ஏன் எடுத்துள்ளது என்பது ஓர் மிக முக்கியமான விடயமாகும். இது தனியே விபரமாக ஆராயப்பட வேண்டிய விடயமாகும். ஆனால் அதனை இங்கு செய்ய முடியாது. சுருக்கமாக சொன்னால் இந்தத் தீர்மானம் அரசியலை இராணுவ மயப்படுத்தும் அதேவேளையில் இராணுவத்தின் அரசியல் மயப்பாட்டின் ஒரு புதிய கட்டத்தை இது ஏற்படுத்துகிறது.

2002 ஆம் ஆண்டு யுத்த நிறுத்த ஒப்பந்தம் அதன் சிறப்பு வாசகங்களுள் ஒன்றாக ஏ-9 பாதை திறப்பது பற்றிப் பேசுகிறது.

இராணுவ வெற்றிக்கான தேவைகளுக்காக இந்த அரசாங்கம் மிகப் பாரதூரமான நிர்வாக நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஜே.வி.பி., ஹெல உறுமய என்பன இந்த நிலைப்பாட்டை ஆதரிக்கின்றன. எனினும், சிங்கள புத்தி ஜீவிகள் பலர் இது ஒரு தவறான அணுகுமுறை என்று பேசிக் கொள்கின்றனர்.

அந்தப் பயத்திலே ஒரு நியாயப்பாடு உள்ளது. ஏன் எனில் எந்த அரசாங்கம் நாட்டை துண்டாடக் கூடாது என்று விரும்புகிறதோ அந்த நிலைப்பாட்டை வைத்துக்கொண்டு உள்ளூரிலும் வெளிநாடுகளிலும் தனக்கான ஆதரவைத் தேடுகிறதோ அதே அரசாங்கம் இப்பொழுது யுத்த உபாயத் தேவைக்காக யாழ்ப்பாணத்தை ஏறத்தாழ புவியியல் அடிப்படையில் ஒரு தனித்துண்டாகக் கொள்கிறது.

கப்பல் மார்க்கமாக தொன் கணக்கில் உணவுகள் அனுப்பப்படுகின்றன என்று அரச ஊடகங்கள் சொல்ல வேண்டிய தேவை என்ன? சிங்கள மக்களை திருப்திப்படுத்துவது மாத்திரமே இதன் உட்கிடக்கை ஆகும். ஏ-9 பாதை மூடப்பட்டுள்ளமைக்கான பல்வேறு காரணங்களை கடந்த இரு நாட்களாக நேரத்துக்கு நேரம் பாதுகாப்பு விடயப் பேச்சாளரான அமைச்சர் கூறிக் கொண்டே இருக்கிறார். அவர் கூற்றுகள் ஒன்றுடன் ஒன்று இணைவதாக இல்லை. பல்கலைக்கழக பாடசாலை மாணவர்களுக்கு கிளிநொச்சியில் கொடுக்க விருந்த ஒரு பெரும் பயிற்சிக்கான திட்டமொன்றை அரசாங்கம் கண்டுபிடித்திருப்பதாக நேற்றுக்காலை ஊடகங்கள் தெரிவித்தன.

நிலைமையின் யதார்த்தம் வேறு. மக்கள் உண்மையிலேயே பெரிதும் கஷ்டப்படுகிறார்கள். உணவுப் பொருட்கள் மாத்திரம் அல்ல அத்தியாவசியமான மருந்துப் பொருட்கள், கல்வித் தேவைப்பொருட்கள் ஆகியனவும் வேண்டும் என்று யாழ்.அரச அதிபர் கேட்டுள்ளார். அனுப்பப்பெற்ற உணவுப் பொருட்களை விநியோகிப்பதிலுள்ள இடர்பாடுகள் காரணமாக பல இடங்களிலே நீண்ட கியூக்கள் நிற்பதாக அறிகிறோம். இந்தப் பிரச்சினைக்கு முகம் கொடுக்கும் வகையில் படையினர் தாமே சில விநியோக மையங்களை ஏற்படுத்தியிருப்பதாக யாழ். செய்திகள் கூறுகின்றன. யாழ்ப்பாண நகரத்தினுள் மாத்திரம் 4/5 இடங்களில் இவ்வாறான விநியோகம் நடைபெறுகிறது. அந்த விநியோக மையங்களில் படையினர் இது தாங்கள் தமது நல்நோக்கம் காரணமாக செய்யும் உதவி என்று கூறிக் கொள்வதாக சொல்லப்படுகிறது.

ஜனாதிபதிக்கு தெரியவில்லை இராணுவத்தின் அரசியல் மயப்பாடு தெட்டத் தெளிவாகத் தொடங்கிவிட்டதே என்பது.

இவை யாவற்றுக்கும் மேலாக தமிழக துறைமுகங்களிலிருந்து காங்கேசன்துறை, பருத்தித்துறைக்கு உணவுப் பொருட்களை அனுப்புமாறு இந்தியவை இலங்கை கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

இந்தியாவும் அதற்கு இணங்கலாம் என்று பேசிக் கொள்ளப்படுகிறது. இந்த நிலைப்பாட்டை ஏ-9 பாதையை மூடுவதை ஆதரிக்கும் ஜே.வி.பி., ஹெல உறுமய எவ்வாறு பார்க்கப் போகிறதோ என்பது தெரியவில்லை. சர்வதேச நாடுகள் சற்று கண்டிப்பாக இருக்கும் இவ்வேளையில், இந்தியாவைத் தொடர்ந்தும் பகைத்துக் கொள்ளக்கூடாது என்பதும் காரணமாக இருக்கலாம்.

யாழ்ப்பாண மாவட்டத்தை இப்படி நடத்துவதன் உண்மை நிலைகள் பற்றி சர்வதேச சமூகம் சரிவர அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டா? இது ஒரு முக்கியமான வினா. இந்தப் பொருள் தடை ஏற்கனவே நடந்து கொண்டிருந்த யாழ்ப்பாண சிவில் நிலை மக்களின் கொலைகள் தொடர்ந்து செய்யப்படுகின்ற ஒன்றாகும். ஏற்கனவே பயமுறுத்தப்பட்டவர்கள் இப்பொழுது பட்டினி போடப்படுகின்றார்கள்.

யாழ்ப்பாணத்திலிருந்து அங்குள்ள சிவில் சமூகத்தின் குரல்களாக அமையும் தொழில்மைச் சங்கங்கள், தொழிற் சங்கங்கள் ஆகியன இன்னும் எதுவுமே கூறவில்லை. இவ்விடயத்தில் கூட்டமைப்பு எம்.பி.க்கள் எடுத்த முயற்சிகளை அரசாங்கமும் சிங்கள ஊடகங்களும் புறக்கணித்துவிட்டன. நவம்பர் 7 ஆம் திகதி பாராளுமன்றம் கூடுகின்றபோது எம்.பி.க்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை.

இன்னொரு நிலையில் அவர்களோடு இப்பிரச்சினையை வரையறுத்துக் கொள்வதும் பொருத்தமல்ல. ஏனெனில், விடுதலைப் புலிகளுக்கு எதிரான சக்திகளின் பிரதிநிதிகள் என்று தம்மை அடையாளம் காட்டிக் கொள்ளும் அரசியல் சக்திகள் இந்தப் பிரச்சினையை எவ்வாறு நோக்குகின்றன என்பது இன்னும் தான் தெளிவாகவில்லை. விடுதலைப் புலிகள் சமாதானத்தை விரும்பவில்லை என்று ஒருவரால் கூறப்பட்ட செய்தியை சிங்கள ஊடகங்கள் இரண்டு, மூன்று நாட்களாக தொடர்ந்து பயன்படுத்துகின்றன.

எ-9 பாதை திறக்கப்படுவது பற்றியோ யாழ்ப்பாணத்துக்குப் பொருட்கள் அனுப்பப்படுவதிலுள்ள பிரச்சினைகள் பற்றியோ பேசுவது உண்மையில் இப்பிரச்சினையின் உயிர் மையத்தை தவறவிடும் ஒரு நோக்கமாகும். இப்பொழுது நிதர்சனமாகியுள்ள உண்மை என்னவெனில் இலங்கைத் தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் ஒரு புதிய உபகட்டம் ஒன்று தோன்றியுள்ளது என்பதே ஆகும்.

சாதாரண மக்கள் மீது தாங்க முடியாத பளுவை ஏற்படுத்துவதன் மூலம் போராட்டம் பற்றிய ஒரு சிரத்தையின்மையை ஏற்படுத்துவது இந்த நடவடிக்கைகளில் கவனமாக இருக்கும். அதுமாத்திரம் அல்லாமல் இந்த உரிமைப் போராட்டத்தின் முன்னிலையிலுள்ள விடுதலைப் புலிகள் மீது மக்களின் இன்னல்கள் பற்றி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவையையும் ஏற்படுத்துகிறது.

உண்மையில் இவை நன்கு சிந்திக்கப்பட்ட நெருக்குவார அழுத்தங்களாகவே கொள்ளப்பட வேண்டும்.

இந்தக் கட்டத்தில் மக்கள் பார்வையாளர்களாக இருக்கும் நிலையில் ஏற்படவேண்டிய மாற்றங்கள் பற்றிய சிந்தனை முக்கியமாகிறது. இவை யாவற்றுக்குமூடே சிங்கள ஊடகங்கள் மூலம் வளர்த்து எடுத்துக் கொள்ளப்பட்டுவரும் ஒரு முக்கிய விடயம் பற்றி இங்கு கூறவேண்டும். அதாவது, சுதந்திரக் கட்சியும், யு.என்.பி.யும் இணைந்து வைக்கின்ற தீர்மானத்தை விடுதலைப் புலிகளும் தமிழர்களும் ஏற்காமல் இருக்க முடியாது என்பதாகும். இந்த அம்சத்தினையே ஜனாதிபதியிலும் பார்க்க ரணில் விக்கிரமசிங்க அழுத்தி , அழுத்திக் கூறிவருகிறார். இந்த நிலைமை இன்னும் இரண்டு மாதங்களில் ஏற்பட்டு விடும். அப்பொழுது நிலைமை என்னவாகும்? இந்த விடயத்தில் விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு மாத்திரம் அல்லாமல் கூட்டமைப்பு எம்.பி.க்களின் நிலைப்பாடும் அதற்கு மேல் புகலிடத் தமிழ் நிறுவனங்களின் நிலைப்பாடும் முக்கியமாகும். இதுபற்றி ஆழமாகச் சிந்தித்துச் செயற்படல் வேண்டும்.

தமிழகத்து அரசியல் அபிப்பிராயத்தைக்கூட மாற்றுவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம். பஞ்ச தந்திரத்தில் ஒருவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது பற்றிய மூன்று நிலைகள் உண்டாம். வருமுன் காப்பது, வந்ததும் காப்பது, வந்தபின் காப்பது இதில் மூன்றாவது காத்தல் நிலையே அல்ல.

Please Click here to login / register to post your comments.