சிங்களத்தின் ஒருமித்த அரசியல் போக்கும் நடைமுறையாகி விட்ட இரு தேசங்களும்

ஆக்கம்: வசிஸ்டர்
இன்றைய சிங்களத்தின் அரசியல் போக்கை நாம் எவ்வாறு புரிந்துகொள்ளப் போகின்றோம்? இன்றைய நிலையில் சிங்களம் நமக்குச் சொல்லும் தெளிவான செய்தி என்ன? தமிழ்த் தேசிய அரசியலானது, தவிர்க்க முடியாததும் அதன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததுமான, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு சிங்கள தேசத்தின் இன்றைய அரசியல் போக்கை குறித்துக்கொள்வது அவசியமாகும். இன்றைய சிங்கள அரசானது வரலாற்றில் என்றுமில்லாதவாறு இனவாத அரசியலை கொள்கையளவில் முன்னெடுத்து வருகின்றது. இதற்கு மகிந்தவின் இராணுவச் சிந்தனையும் அதற்கான அவரது சகோதரர்களின் தைரியப்படுத்தல் மட்டுமல்ல காரணம். இன்றைய தெற்கின் பிரதான சிங்கள அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒரு நேர்கோட்டில் சந்தித்திருப்பதே இதற்கான முக்கிய காரணமாகும்.

பொதுவாக சிங்கள கட்சிகளைப் பொறுத்தவரையில் ஆட்சியில் பங்கு கொள்ளும்போதே இனவாத அரசியலை கொள்கையளவில் முன்னெடுக்கும் கட்சிகளாக அவை உருமாறுவது வழமையாகும். ஆனால் இன்றைய 2006 இன் அரசியல் நிலைமை அவ்வாறானதல்ல. இன்று யு.என்.பி., மகிந்த அணி, ஜே.வி.பி. மற்றும் ஹெல உறுமய ஆகிய செல்வாக்கு மிக்க அனைத்து சிங்கள சக்திகளும் இன்று கொள்கையளவில் ஒரேயணியாக நிற்பதை நாம் காணலாம். ஒன்றில் ஒன்று முரண்பாடுகள் கொண்டவையாகவும் அதிகாரத்தை கைப்பற்றிக்கொள்வதில் தமக்கிடையில் போட்டி மனப்பான்மையைக் கொண்டவைகளாகவும், தம்மை அரசியல் அரங்கில் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ளும் இவ்வாறான சக்திகள் அனைத்தும் ஒரு நேர்கோட்டில் சந்தித்துக் கொள்வதொன்றும் ஒரு தற்செயல் அரசியல் நிகழ்ச்சியல்ல.

மிகவும் துல்லியமான கொள்கை நிலைப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்றின் கீழே இவ்வாறான சக்திகள் ஒன்றுபட்டிருக்கின்றன. மேற்படி நிலைமையே இன்றைய சிங்களத்தின் அரசியல் போக்கை கொள்கை நிலைப்பட்ட தமிழர் விரோத அரசியல் ஒழுங்கொன்றை நோக்கி நகர்த்தியிருக்கின்றது. உண்மையில் இனிவரும் காலங்களில் இத்தகைய அரசியல் போக்கு மேலும் வலுவடையக் கூடிய வாய்ப்புள்ளதே தவிர ஒருபோதும் தளர்வடையப்போவதில்லை. இத்தகையதொரு அரசியல் போக்கை தவிர்க்கமுடியாத ஒன்றாக மாற்றியதில் ஜே.வி.பி.யின் தந்திரோபாயத்திற்கும் கணிசமான பங்குண்டு. ஆரம்பத்தில் சந்திரிகாவுடன் கூட்டமைத்துக் கொண்டு தங்களது அரசியலை நகர்த்திய ஜே.வி.பி. சந்திரிக்காவிற்கும் மகிந்தவிற்கும் கட்சிக்குள் முரண்பாடுகள் தோன்றிய சந்தர்ப்பத்தில் மகிந்தவை பலப்படுத்தும் நோக்கில் செயற்பட்டு, பாராளுமன்றத்தில் தம்மை இலகுவாக நிராகரிக்க முடியாத அமைப்பாக பலப்படுத்திக் கொண்டது. இதன் மூலம் இனிவரும் காலத்தில் பிரதான கட்சிகள் எவையும் ஏனைய சிங்கள அமைப்புக்களின் ஆதரவின்றி செயற்பட முடியாத நிலைமையை ஜே.வி.பி. தோற்றுவித்தது எனலாம்.

இத்தகையதொரு அரசியல் போக்கின் மிகத் துல்லியமான வெளிப்பாடுதான் சமீபத்தைய யு.என்.பி - மகிந்த கூட்டாகும். சமீப காலமாக மகிந்தவிற்கும் ஜே.வி.பி.யிற்கும் முரண்பாடுகள் வலுவடைந்து வந்த சூழலில்தான் இத்தகையதொரு கூட்டு மகிந்தவிற்கு அவசியப்பட்டது. ஜே.வி.பி.யை ஓரங்கட்டுவதற்கும் ஜே.வி.பி.யின் நெருக்குவாரங்களிலிருந்து தப்புவதற்கும் மகிந்த யு.என்.பி.யை துணைக்கழைத்துக் கொண்டார். நாளை யு.என்.பி.யுடன் முரண்பாடுகள் தோன்றும் நிலையில் ஜே.வி.பி., ஹெலஉறுமய ஆகிய சக்திகளிடம் செல்வதைத் தவிர மகிந்தவிற்கு வேறு வழிகள் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால் சிங்கள ஆளும் வர்க்கமோ மகிந்த-ஜே.வி.பி. கூட்டை தமக்கு சாதகமான ஒன்றாகப் பார்க்கவில்லை. அதனுடைய வெளிப்பாடாகவும் தற்போதைய மகிந்த - யு.என்.பி. கூட்டை நாம் நோக்கலாம்.

அதே வேளை இன்றைய உலக அரசியல் ஒழுங்கினை கருத்தில் கொண்டும் நாம் இவ்வாறான அரசியல் கூட்டுக்களை புரிந்துகொள்ள முயற்சிக்கலாம். தற்போதைய உலக அரசியல் ஒழுங்கில் பழைமைவாத வலதுசாரி அரசியல் அமைப்புக்கள் பிரதான அரசியலில் காலூன்றியிருப்பது கடினமான ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. அவற்றின் சிதைவு தவிர்க்க முடியாத ஒன்றாகியும் வருகின்றது. எனவே அவ்வாறான பழமைவாத வலதுசாரி அமைப்புக்கள் ஒரு புதிய வலதுசாரி ஒழுங்கிற்கு வரவேண்டிய தேவையுள்ளது. இந்த பின்புலத்தில் நின்று பார்ப்போமாயின் தன்னளவில் சிதைந்துவரும் யு.என்.பி. சிதைவை தடுத்து நிறுத்துவதற்கும் தம்மை ஒரு புதிய அரசியல் ஒழுங்கிற்கு கொண்டு வருவதற்கும் இவ்வாறான கூட்டொன்றை நோக்கி சாய்வது அதனளவில் மிகவும் அவசியமான ஒன்றாகும். என்னளவில் மேற்படி சிங்கள அரசியல் போக்கானது தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் நாம் குறித்துக்கொள்ள வேண்டிய முக்கியமான புள்ளிகளாகும்.

தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரையில் தமிழ் மக்களுக்கான சுயாதீன அரசொன்றின் தேவை கொள்கையளவில் மட்டுமல்லாது தற்போதைய அரசியல் சூழலில் அது நடைமுறையாவிட்டது என்பதே மேற்படி சிங்கள அரசியல் போக்கு நமக்குச் சொல்லும் தெளிவான செய்தியாகும். நாம் மேலே குறித்துக் கொண்ட சிங்கள அரசியல் போக்கு அத்தகையதொரு நிலைமையை தெட்டத் தெளிவாக்கியிருக்கின்றது. நமது அரசியல் ஆய்வுச் சூழலில் தமிழர் தேசம் என்ற கருத்துருவாக்கம் கொள்கை நிலைப்பட்ட ஒன்றாகவே பார்க்கப்பட்டு வந்திருக்கின்றது.

ஆனால் 2006இன் கொள்கை நிலைப்பட்ட சிங்கள மேலாதிக்க அரசியல் போக்கானது அத்தகைய பார்வைகளை இனியும் நாம் முன்னிறுத்த வேண்டிய தேவையில்லை என்பதையே தெளிவான செய்தியாக முன்னிறுத்தியிருக்கின்றது. 1977ஆம் ஆண்டே நமது மக்கள் இன்று மேற்கு முதன்மைப்படுத்தும் ஜனநாயக மரபினூடாக தமது எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். மக்களின் ஜனநாயக கோரிக்கைகளுக்கான முக்கியத்துவம் மறுக்கப்பட்ட நிலையிலேயே ஆயுத போராட்ட அரசியல் மக்களின் தெரிவாகியது. அதன் பின்னரே தமிழர் தேசம், தமிழர் தேசியம், தமிழர் சுய நிர்ணயம் என்ற கருத்துக்கள் தமிழர் அரசியலில் கொள்கை நிலைப்பட்ட அரசில் கருத்துக்களாக இடம்பெறலாயின. இன்று அது நடைமுறையாவிட்டது என்பதே தற்போதைய அரசியல் நிலைமை. மேற்படி அரசியல் நிலைமை கருத்தளவில் நமது மக்களுக்கு விளங்கிக் கொள்வது கடினமாக இருந்தாலும் சமீப காலமாக அவர்கள் அனுபவித்து வரும் சொல்லொன்னா துயரங்கள் மூலம் இதனை அவர்கள் நன்கு விளங்கியிருப்பர்.

Please Click here to login / register to post your comments.