எங்கள் பிதாமகர் - கார்த்திகேசு சிவத்தம்பி

ஆக்கம்: பேராசிரியர் அ. சண்முகதாஸ்
பேராசிரியர் சிவத்தம்பியின் மறைவு குறித்து பேராசிரியர் அ.சண்முகதாஸ் விடுத்துள்ள இரங்கல் குறிப்பு

எங்கள் பிதாமகர்

இப்பொழுது நேரம் இரவு 10.00 மணி (06.07.2011). ஓன்பது மணியளவில் நண்பர் க. குமரன் தொலைபேசியில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி 8.55 அளவில் காலமாகிவிட்டார் என்று கூறினார். மனோன்மணிக்கும் எனக்கும் இது எதிர்பார்த்திருந்த ஒரு செய்திதான். கடந்த 20 ஆம் திகதி அவரைச் சென்று பார்த்தோம். அப்பொழுது அவர் தன்னுடைய உயர் பயணத்துக்கு ஆயத்தமாகத் தன்னைத் தயார்ப்படுத்திக்கொள்ளுவதாகக் கூறினார். கண்கள் கலங்கின. முற்றான பிரிவு என்பது மனிதர்களாகிய எம்மால் தாங்கமுடியாதது. பிரிந்தவர் சாதாரண ஆள் அல்ல. உலகப் புகழ்பெற்ற ஒரு தமிழ் அறிஞர்.

தமிழ் இலக்கியம், தமிழர் பண்பாடு, தமிழ் இலக்கிய விமரிசனம் பற்றி உலகில் எங்கெல்லாம் ஆய்வுகள் நடைபெறுகின்றனவோ அங்கெல்லாம் பேசும் பொருளாகப் பேராசிரியர் காரத்திகேசு சிவத்தம்பியினுடைய எழுத்தப்பணியும் உடனிருக்கும். இத்தகைய உலகப் புகழுடன் எங்களுடன் வாழ்ந்துகொண்டிருந்தவர் பேராசிரியர் சிவத்தம்பி. இவர் எங்கள் பிதாமகர்.

இவரிடம் கற்ற மாணவர்களும் கற்காத மாணவர்களும் இவரைத் தங்கள் ஆசிரியராகக் கொள்ளும் வழக்கம் உண்டு. வித்தியோதயப் பல்கலைக் கழகத்திலும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்திலும் இவரிடம் கற்றவர்கள் இருக்கின்றனர். ஆனால் பேராசிரியர் மௌனகுருவோ, சுந்தரம் டிவகலாலாவோ, க. சண்முகலிங்கமோ, கலாநிதி தணிகாசலம்பிள்ளையோ, கலாநிதி மனோன்மணியோ, நானோ அவரிடம் கற்றதில்லை. நாங்கள் எல்லோருமே பேராதனைப் பல்கலைக் கழகத்தில் படித்தவர்கள். பேராசிரியர் கைலாசபதியிடம் கற்றவர்கள். எனினும் நாங்கள் எல்லோருமே பேராசிரியர் சிவத்தம்பியினை எங்கள் ஆசிரியராக நினைந்துவருகிறோம். இது கற்றறிந்த பேரறிஞர்களுக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்பாகும். இதனாலேதான் இவரை எங்கள் பிதாமகர் என்று குறிப்பிடுகிறோம்.. ஆனால் எங்கள் பிதாமகரைத் தமிழ்நாட்டிலுள்ள சிலரும் தங்கள் பிதாமகராகக் கொள்ளும் சிறப்புத்தான் பேராசிரியர் சிவத்தம்பியின் உயர் சிறப்பாக அமைகின்றது. நாம் திசைநோக்கித் தொழுகின்ற வழக்கமடையவர்களல்லவா? எந்தரோ மஹானுபாவுலு அந்தரீக்கு வந்தனமு சொல்லும் மரபுடையவர்கள் நாம். இதிலிருந்து பேராசிரியர் சிவத்தம்பியும் தப்பமுடியாது. இப்பொழுது விண்ணை நோக்கித்தான் நாம் அவரைத் தொழவேண்டியுள்ளது.

பேராசிரியர் சிவத்தம்பியின் பலம் இருந்தபடி இருந்ததுதான். கல்லடிகள் போன்று எத்தனை சொல்லடிகள் விழுந்தாலும் இருந்தபடி இருக்கின்றமை எல்லோராலும் முடியாது.

    காய்த்தமரம் ஆதலினால்
    கல்லெறிகள் பட்டவன்நீ
    கல்லால் எறிந்தவர்க்கும்
    கனிகொடுத்த பழமரம்நீ

என்று இவருடய மாணவன் பேராசிரியர் சிவலிங்கராஜா தன்னுடைய ஈழத்து இலக்கியச் செல்நெறிகள் என்னும் நூலைப் பேராசிரியருக்குக் காணிக்கையாக்கி எழுதிய கவிதைதான் இச்சந்தர்ப்பத்தில் என்னுடைய நினைவுக்கு வருகின்றது. இவருடைய இருப்பை அசைக்கப் பலர் முயன்றுள்ளமை சில வேளை வெளியுலகுக்குத் தெரியாமல் இருக்கலாம். இவற்றுக்கு மேலாக நின்று ஒளிர்பவர்கள்தான் பேரறிஞர்கள். கல்லாநிதிகள் என்று சொன்னவர்களின் வாய்கள்தான் வெந்தனவேயொழிய, கலாநிதிகள் என்றும் கலாநிதிகளாக இருந்துவருவதற்கு உலகம் இன்றும் சாட்சியாக இருந்துவருகின்றது.

பேராசிரியர் சிவத்தம்பியின் புலமையின் அடிநாதம் வரலாற்றுணர்வும் மரபின் பல்வேறு நெளிவு சுளிவுகளை நன்கு இனங்கண்டீருப்பதுமாகும். எந்த விடயத்தை எடுத்து ஆய்வு செய்தாலும் வரலாற்றுணர்வும் மரபின் போக்கும் அந்த ஆய்வினை வழிநடத்திச்செல்வனவாக அமைவதைக் காணக்கூடியதாக இருக்கும். இவற்றுக்குப் பக்கத் துணையாக அமைவது அவர் கையாளும் சொற்களும் சொற்றொடர்களும். தமிழ் நாட்டு இளைஞர்கள் பலர் இவருடைய ஆய்விலே ஈடுபாடு கொண்டமைக்கு இவர் கையாண்ட புதுமையான ஆனால் பொருத்தமான கலைச்சொற்களேயாகும். பேராசிரியருடைய சொற்புனைவு அவருடைய எழுத்துக்களுக்குக் கனதியைக் கொடுத்தது.

பேராசிரியருடைய ஆய்வுவழிகாட்டலிலே கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள் பேராசிரியர் சி. மௌனகுரு, அமரர் கலாநிதி காரை எஸ். சுந்தரம்பிள்ளை, பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன், கலாநிதி அம்மன்கிளி முருகதாஸ், கலாநிதி செ. யோகராசா, கலாநிதி மனோன்மணி சண்முகதாஸ் ஆகியேராவர். ஆய்வுக்குரிய வாசிப்பிலே ஆய்வுமாணவர்களைப் பேராசிரியர் எப்பொழுதுமே வழிநடத்துவார். இந்த வழிநடத்திலில் இடையிலே திசைமாறிப் போவோருமுண்டு. அவர்கள் நீண்ட தூரம் சென்று திரும்புவதுண்டு. பேராசிரியர் தமிழ்நாட்டுக்குச் செல்லும்போது அங்கு பெருந்தொகையான ஆய்வு மாணவர்கள் அவரை எதிர்பார்த்துக் காத்திருப்பர். இது எல்லோருக்கும் கிடைக்கக்கூடியதொன்றல்ல. அங்குள்ள பல்கலைக் கழகங்களிலிருந்து வரும் முனைவர் ஆய்வேடுகளுக்குத் தேர்வாளராக இருப்பதால் பேராசிரியரை அவ்வாய்வாளர்கள் எவ்வாறு பயன்படுத்தியுள்ளனர் என்பதை நான் அறியக்கூடியதாயிருந்தது. பழமரத்தை நாடிநிற்கும் பறவைகளைப் போல அம்மாணவர்கள் இவர் வரவைக் காத்திருப்பதையும் இவரிடம் தங்கள் ஐயங்களைக் கேட்டுத் தெளிவடைiதையும் நான் நேரிலே கண்டுள்ளேன்.

பேராசிரியர் சிவத்தம்பிக்கு வாய்ப்பாக இருந்தவை அவருக்கிருந்த கொம்யுனிஸ்ட் கட்சிச் சார்பு, ஆங்கில-சிங்களமொழிப் புலமை. கொம்யுனிஸ்ட் கட்சிச் சார்பு அவர் எழுத்துக்குச் சிந்தாந்தத்தை நல்கியது. அதனுடன் ஒரு பரந்துபட்ட நண்பர் கூட்டத்தைக் கொடுத்தது. சிங்களமொழியறிவு இதற்கு மேலும் உதவியது. ஆங்கில மொழியறிவு அவரை உலகறியவைத்தது. கருத்துக்கள் உதிரிகளாக இருப்பின் விளங்கி;க் கொள்வது இலகுவாயிராது. அவை ஒரு சித்தாந்தப் பின்புலம் கொண்டவையாயின் மிக இலகுவாக விளங்கிக்கொள்ளமுடியும்.

இதுதான் அவருடைய எழுத்துக்களுக்கு மிகுந்த மதிப்புக்கிடைக்கக் காரணமாயிற்று. இத்தகைய அறிஞரை நாம் இழந்துநிற்கிறோம். உலகத் தமிழ் அறிஞர்கள் அன்னாரது இழப்பினால் மிகுந்த துயரத்தில் இப்பொழுது ஆழ்ந்திருப்பார்கள். அவருடைய குடும்பத்தினர்க்கு நாம் ஆறுதல் கூறமுடியாது. அவருடைய ஆன்மா அவருடைய குல தெய்வமாகிய சன்னதி முருகனின் அடிகளிலே அமைதியுற்றிருக்குமென்பதில் ஐயமில்லை.

Please Click here to login / register to post your comments.