புதிய சிங்களக் கூட்டணியும் அதன் அரசியல் உள்ளடக்கமும்

ஆக்கம்: வசிஸ்டர்

சமீபத்தில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்பாடு குறித்து நாமறிவோம். இவ்விரு கட்சிகளும் சிங்களத்தின் பிரதான கட்சிகள் என்ற வகையிலும் இரு முரண்பட்ட சக்திகள் என்ற வகையிலும் மேற்படி புரிந்துணர்வு உடன்பாடு இலங்கை அரசியலில் முன்னர் எப்போதும் நிகழ்ந்திராத ஒன்று என்ற வகையில் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரசியல் நிகழ்வெனவும் அரசியல் நோக்கர்களால் விதந்து கூறப்படுகின்றது. சிங்களச் சூழலில் அரசியல் கூட்டுகள் உருவாவது குறித்தோ பின்னர் தமது நலன்கள் சார்ந்து அவற்றை கலைத்து வெளியேறுவது குறித்தோ நாம் அலட்டிக்கொள்ள ஏதுமில்லை. அது நமக்கு அவசியமான ஒன்றுமல்ல. ஆனால் அவ்வாறான கூட்டுகள் தமிழ் மக்களுக்கு பெரிதாக நன்மையை கொண்டுவரப்போவதாக பூச்சாண்டிகள் காட்டப்படும்போதுதான் அதில் அரசில் ரீதியாக குறுக்கீடு செய்யவேண்டியது நமக்கு அவசியமாகின்றது. எனவே இலங்கை அரசியல் வரலாற்றில் முன்னர் எப்போதும் நிகழ்ந்திராத வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மேற்படி உடன்பாடு பற்றி பார்ப்பதற்கு முன்னர் சமீப கால சிங்கள அரசியல் போக்கை புரிந்துகொள்ள முயல்வோம்.

மகிந்தராஜபக்‌ஷ தெளிவானதொரு யுத்த நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றார் என்பதை எனது முன்னைய சில கட்டுரைகளிலும் குறிப்பிட்டிருக்கின்றேன். விடுதலைப்புலிகள் மீதான ஐரோப்பிய யூனியனின் தடை மற்றும் பாகிஸ்தான் அரசு வழங்கிய இராணுவ ஒத்துழைப்பு ஆகியவையே இந்த நிகழ்சி நிரலின் பின்பலமாக இருந்தது. ஆனால் இது ஒர் அரசியல் போக்காக எவ்வாறு மாறியது? உண்மையில் விடுதலைப்புலிகளை இன்னொரு யுத்தத்தின் மூலம் தோற்கடிக்க முடியும் என்பதை மகிந்தவும் அவரது அணியினரும் துல்லியமாக நம்புவதே இந்த அரசியல் போக்கின் அடித்தளமாக இருக்கின்றது. சமீப காலமாக நடைபெற்று வரும் சில சம்பவங்களை தமக்குச் சாதகமான ஒன்றாக பார்க்கும் தவறிலிருந்தே இந்த அரசியல் போக்கு ஆரம்பமாகின்றது. சமீப காலமாக நடைபெற்றுவரும் பிரகடனப்படுத்தப்படாத யுத்தத்தில் விடுதலைப்புலிகள் தந்திரோபாய ரீதியாக சில பின்வாங்கல்களை செய்ததும் குறிப்பாக சம்பூர் பகுதியிலிருந்த விடுதலைப்புலிகள் பின்னகர்ந்தது, மற்றும் அரசு விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது தொடர்ச்சியான விமானத் தாக்குதல்களை மேற்கொண்டபோதும், விடுதலைப்புலிகள் எந்தவிதமான எதிர் தாக்குதல்களையும் செய்யாமல் இருப்பது போன்ற நிலைமைகளை, மகிந்தவும் அவரது தலைமையில் இயங்கும் சிங்கள கொள்கை வகுப்பாளர்களும் தமக்கு சாதகமான ஒன்றாக பார்ப்பதுடன், போர் நிறுத்த ஒப்பந்தத்தினாலும் கிழக்கின் கருணா விடயத்தினாலும் விடுதலைப் புலிகள் பலவீனபட்டுவிட்டார்கள் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். இதுவே மகிந்தவை இன்றைய யுத்த அரசியலுக்கு தலைமை தாங்கத் தூண்டியது. இதனை ஒரு வகையில் சந்திரிகாவின் சமாதானத்திற்கான யுத்தம் என்ற நிலைப்பாட்டுடன் ஒப்பிட முடியுமானாலும் மகிந்தவின் நிலைப்பாடானது அதனைவிட பல மடங்கு உக்கிரமானதாகும். இன்றைய மகிந்தவின் அரசியல் நிலைப்பாடானது யுத்தமும் தான் சமாதானமும் தான் என்ற நிலையில் இருக்கின்றது. இத்தகையதொரு பின்புலத்தில்தான் இரு முரண்பட்ட அரசியல் தரப்பினரான சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் ஒரு உடன்பாடு ஏற்பட்டிருக்கின்றது. இலங்கையை மாறி மாறி ஆட்சிசெய்து வந்திருக்கும், ஆட்சியதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதில் மட்டுமே தமக்கிடையில் முரண்பாடுகளைக் கொண்டிருக்கும் இரு பிரதான சிங்கள கட்சிகளுக்கிடையிலேயே தற்போது ஒரு பொது உடன்பாடு நிகழ்ந்திருக்கின்றது. இன்றைய சூழலில் என்னவகையான காரணிகள் இவ்வாறானதொரு உடன்பாட்டில் செல்வாக்குச் செலுத்தியிருக்க முடியும்?

சமீப காலமாகவே குறிப்பாக மகிந்தராஜபக்ஷ தீவிர சிங்கள அடிப்படைவாத சக்திகளான ஜே.வி.பி. மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியதைத் தொடர்ந்து ஒரு தேசிய அரசிற்கான கோரிக்கை பல்வேறு தரப்பினராலும் முன்வைக்கப்பட்டு வந்தமை இணைத் தலைமை நாடுகள் இதற்கான அழுத்தங்களை வழங்கியதாகச் சொன்னாலும் பிராந்திய சக்தியான இந்தியாவே தேசிய அரசு ஒன்றிற்கான அழுத்தத்தை இரு தரப்பினருக்கும் வழங்குவதில் அதிக முனைப்புக் காட்டி வந்தது. தனதுபிராந்திய நலனைக் கருத்தில் கொண்டு இலங்கை அரசியலில் ஒரு முரண் தணிப்பு நிலைமை இருக்க வேண்டுமென்பதில் அதிக அக்கறை செலுத்திவரும் இந்தியா, அத்தகையதொரு பின்புலத்தில் இலங்கையில் தமிழர் பிரச்சினைக்காக முன்வைக்கப்படும் ஓரளவு தீர்வினைக் கூட எதிர்க்கும் சிங்களக் கட்சிகளின் ஆதரவிலிருந்து மகிந்தவை விலக்குவதற்கு இரு பிரதான கட்சிகளுக்கடையில் ஒரு இணக்கப்பாட்டை உருவாக்குவது அவசியமென கருதியிருக்கலாம். ஆனால் யுத்த அரசியலை அடிப்படையாகக் கொண்டு செயற்பட்டு வந்த மகிந்த இவ்வாறானதொரு உடன்பாட்டில் ஆர்வம் காட்டியதற்கும், ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கான சந்தர்ப்பத்தை இலக்கு வைத்து செயற்பட்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறானதொரு உடன்பாட்டில் அக்கறை செலுத்தியதற்கும் அவரவர் கட்சிகள் மற்றும் நலன்கள் சார்ந்த காரணங்களே பிரதான பங்கு வகித்திருக்க வேண்டும். சமீப காலமாக மகிந்தவிற்கும் ஜே.வி.பி.யிற்கும் இடையில் முரண்பாடுகள் முற்றி வரும் நிலையில் பாராளுமன்றத்தில் அவர்களை அடக்குவதற்கு பரந்தளவிலான ஆதரவு மகிந்தவிற்கு தேவைப்பட்டது. அதேவேளை தன்னால் முன்னெடுக்கப்படும் யுத்த நிகழ்ச்சி நிரலுக்கான ஆதரவை பரந்த தளத்திற்கு விஸ்தரிப்பதற்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவு மகிந்தவிற்கு தேவைப்பட்டது. அதாவது தொடர்ந்தும் விடுதலைப்புலிகளை இலக்கு வைத்து மேற் கொள்ளப்படும் தாக்குதல்கள் மற்றும் துணைக் குழுக்கள் விவகாரம் போன்ற எவற்றையுமே இந்த ஒப்பந்தத்தினால் தடுக்க முடியாது. எனவே அத்தகையதொரு நிலையில் ஒரு பொது உடன்பாட்டினடிப்படையிலே தான் செயற்படுவதாக மகிந்தவினால் கூற முடியும். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சியும் இணங்கிப் போக வேண்டியேற்படும். ஐக்கிய தேசியக் கட்சியைப் பொருத்த வரையில் தமது கட்சியிலிருந்து தாவுபவர்களை உடனடியாக கட்டுப்படுத்துவதற்கு ஒரு உடன்பாட்டிற்கு செல்வதைத் தவிர வேறு வழியிருக்க வில்லை. அதேவேளை தம்மால் முன்னெடுப்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தத்தை தமது ஆதரவும் ஆலோசனையுமின்றி பாதுகாக்க முடியாது. தவிர மகிந்த ராஜபக்‌ஷவால் எதனையும் தனித்து செய்ய முடியாது. அதற்கான ஆற்றல் அவருக்கில்லை என்ற கருத்தை நிலைநாட்டுவதும் ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டணி நோக்கங்களில் ஒன்றாக இருக்கலாம்.

இவ்வொப்பந்தத்தை பொருத்தவரையில் இரு கட்சிகளுக்கும் ஏற்புடைய ஒரு பொதுத் தேவையும் இருக்கின்றது. அது தம்மைப் போன்று பாராளுமன்றத்தை மட்டுமே இலக்கு வைத்துச் செயற்படும் ஜே.வி.பி.யை தனிமைப்படுத்துவதும் சிதைப்பதுமாகும். தேர்தல் சீர்திருத்தம் பற்றி இரு கட்சிகளும் அக்கறை கொள்வது இந்தப் பின்னனியில்தான்.

இப்போது இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கூட்டணி தமிழர் பிரச்சனையில் என்ன வகையான தாக்கங்களை ஏற்படுத்தலாமென்று பார்ப்போம். சிங்களம், சில வேளை இந்தியாவின் பலமான ஆலோசனையின் கீழ் சர்வதேச பின்னணியில், தமிழ் மக்களின் பிரச்சினைக்காக ஒரு அரைகுறைத் தீர்வை முன்வைக்க முயற்சிக்கலாம். அதனை தமிழீழ விடுதலைப் புலிகள் நிராகரிக்கும்போது, பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் தமிழர் போராட்டத்தை முடக்குவதற்கு முழு அளவில் யுத்தத்தை முன்னெடுக்கக் கூடிய வாய்ப்பு உருவாகலாம். இந்த இடத்தில் நாம் கவனம் கொள்ள வேண்டிய முக்கியமான விடயமென்னவென்றால் இவ்விரு கட்சிகளதும் அரசியல் பண்பு நிலையாகும். கடந்த காலத்தில் தமிழர் பிரச்சினையை மிகவும் சிக்கலானதாக்கியதில் இவ்விரு கட்சிகளுக்கும் ஒன்றையொன்று மிஞ்சும் அளவிற்கு பங்குண்டு. அதேவேளை தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்துவதற்கான முயற்சியிலும் இரு கட்சிகளும் ஒன்றுக்கொன்று போட்டியானவை. எனவே இவ்விரு கட்சிகளுக்கிடையிலான கூட்டிணைவு இலங்கையின் அரசியல் வரலாற்றுக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். ஆனால் தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழர் அரசியலுக்கோ புதிதாகவோ, ஆச்சரியமானதாகவோ இருக்க முடியாது. தமக்கிடையில் உறவு நிலை முரண்பாடுகளை கொண்டிருக்கும் ஒரே அரசியல் பண்பைக் கொண்ட, இரு வேறுபட்ட அரசியல் சக்திகளுக்கிடையிலான உடன்பாடுகள் புற அரசியல் சூழலில் எந்த மாற்றங்களையும் ஏற்படுத்தமாட்டாது. நாம் வீணான மாயைகளில் அகப்பட்டுவிடக்கூடாது என்பதற்காகவே எனக்கு இவ்வாறானதொரு தலைப்பு தேவைப்பட்டது.

Please Click here to login / register to post your comments.