'எனக்கு நீ போட்டியாக மாட்டாய். உனக்கு நான் போட்டியாக மாட்டேன்'

ஆக்கம்: செய்தித் தொகுப்பு மற்றும் திரட்டல்: ராஜி
விஜய நியூஸ் பேப்பர்ஸ் நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட சஞ்சிகைக்காக பேராசிரியரால் கடந்த 2007ஆம் ஆண்டு வழங்கிய பிரத்தியேக பேட்டியின் முழு விபரம்:

தற்போதைய ஊடகங்களின் நிலை குறித்த உங்களது கவனம் எவ்வாறுள்ளது?

ஊடகத்துறையினுடைய போக்கு என்ன? அந்தப் போக்கு ஏன் நடைபெறுகிறது? என்பதைப் முதலில் புரிந்துகொள்ள வேண்டுமென்பதுதான் முக்கியம். அடிப்படை என்னவென்றால் நாங்கள் வெகுஜன தொடர்பாடலைப்பற்றி பேசுகின்றோம். அதிலும் மாஸ் மீடியா என்பது சாதாரண விடயமல்ல. அது உலகப் பொதுவானபோக்கு. அந்த உலகப் பொதுவான போக்கிற்கு நாங்கள் விரும்பியோ விரும்பாமலோ ஆளாகிறோம்.

ஒரு சின்ன உதாரணத்தைப் பார்ப்போம்.....

FM Broadcasting என்னும் போது அதற்கு சில பண்புகள் இருக்கின்றன. இந்த எல்லைக்குள்தான் கேட்கும். அதற்கென்று ஒரு வரையறை இல்லை. FM கேட்பவர்களுக்கு கதைக்க வேண்டும். எல்லாவற்றையும் சொல்ல வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஒலிபரப்புத் துறையை மாற்றியமைத்த பெருமை FM Broadcastingஐச் சாரும்.

உலகப் பொதுவாக்கத்தில் இரண்டு விடயங்கள் பற்றி பொதுவாகப் பேசப்படுகின்றன. ஒன்று மாஸ் மீடியா மற்றையது இன்றைக்குள் பண்பாட்டு உருவாக்கத்தில் மீடியாவிற்குள்ள பொறுப்பு. இதை ஊடக கலாசாரம் எனலாம். எங்களுடைய அன்றாட வாழ்க்கையினுடைய நியமங்கள் பலவற்றை இந்த ஊடகங்களின் தன்மைகள் நிர்ணயிக்கின்றன. இதை மறுக்க முடியாது.

விரும்பியோ விரும்பாமலோ தனியார் ஊடகங்கள் பல மாற்றங்களைக் கொண்டுவந்திருக்கின்றன. இவ்வாறானதொரு சந்தர்ப்பத்தில் ஊடக கட்டமைப்பை எவ்வளவு தூரம் எதிர்காலத்தில் கடைப்பிடிக்க வேண்டும் என நினைக்கிறீர்கள்?

இன்றைக்கு உலக நிலைப் பொருளாதாரம் என்பது ஊடகங்கள் மூலமாகவே சாத்தியப்படுகின்றது. அதாவது ஊடகம் தான் இதை நடைமுறைப்படுத்துகிறது. இது உலகப் பொதுவான விடயம். இச்சந்தர்ப்பத்தில் ஊடகம் ஒரு மிக முக்கிய சாதனமாக விளங்குகின்றது.

1950, 1960களிலிருந்து புதிதாக வளர்ந்ததுறைகள் இரண்டை இனங்காணலாம். ஆதில் ஒன்று முகாமைத்துவம். ஆரம்பத்தில் இதனை பொருளியல் வணிகம் என்றுதான் கூறுவார்கள். எவரும் முகாமைத்துவம் என்று சொல்வதில்லை. இப்போது முகாமைத்துவம் என்பது முக்கியமானதாகிவிட்டது. காரணம் சமூகவியலைக்கூட முகாமைத்துவம் செய்ய முடியும். இந்த சமூகவியலை முகாமைத்துவம் செய்ய முடியாததால் தான் ரஷ்யாவில் பிரச்சினைகள் எழுந்தன.

இரண்டாவதாக, தொடர்பாடல் கற்கையினைக் குறிப்பிடலாம். 60களுக்குப் பிறகு உலகில் பொதுவாக வளர்ந்த மிகப்பெரிய ஆராய்ச்சித்துறை இந்த தொடர்பாடல் கற்கை. அதற்குள்ளாகத்தான் இந்த வெகுஜன தொடர்பாடல் உருவாகியது. ஏனென்றால், தொடர்பாடல் என்பது அன்றைக்கிருந்த அரசியல் தேவைகளுக்காகப் பயன்பட்டது. ஆனால் முதலாளித்துவத்தின் வளர்ச்சி, பூகோளமயமாக்குதலைப் தொடர்ந்து போகின்ற போது... ஊடகம் இல்லையென்றால் எப்படி பூகோளமயமாக்கல் சாத்தியப்படும்? அந்த அடிப்படையொன்று இருக்கின்றது.

ஊடகங்களின் வீச்சு விசாலமானது. இதில் சிறிய ஊடகங்கள், பெரிய ஊடகங்கள், பொழுதுபோக்கான செய்திகளை வெளியிடுகின்ற ஊடகங்களும் வரும். இது தனியார் துறையினுடைய வளர்ச்சி. இந்த அடிப்படையைப் புரிந்துகொண்டால் சரிதான். ஊடக மாற்றங்களை ஊடகவியலாளர்கள் கட்டாயம் படிக்க வேண்டும். துரதிர்ஷ்டம் என்னவென்றால் அதற்கான வாய்ப்புக்கள், சூழல்கள் இல்லாதிருப்பதுதான்.

1970களில் தொடர்பாடல் கற்கையினை தமிழில் ஆரம்பித்தவர்கள் நாங்கள்தான். அதில் சுவாரஸ்யம் என்னவென்றால், தமிழில் இக்கற்கை நெறிக்கு என்ன பெயர் வைப்பதென்பது தான். தொடர்பியல் என்று இப்போது உள்ளது. பின்னர் இது தொடர்பாடல் என திட்டவட்டமாக்கப்பட்டது.

98ஆம் காலப்பகுதியில் Mass என்பதற்கு தமிழாக்கம் சென்னைப் பல்கலைக்கழகத்தில் வைத்து நான் வெகுஜனம் என்று சொன்னேன். ஆதனை அவர்கள் ஏற்கவில்லை. மக்கள் ஊடகம் என்றுதான் சொல்ல வேண்டும் என்றார்கள். நான் பின்னர் அதனைத் தெளிவுபடுத்திய பிறகுதான் தமிழ் பண்டிதர்கள் அதனை ஏற்றுக்கொண்டார்கள். இப்போது சில இடங்கள் இருப்பினும் ஊடகத்துறையில் ஆராய்ச்சிக் கல்வி என்பது இல்லாமல் இருப்பது கவலைக்கிடமானதே.

60 வருடகால அனுபவத்தில் பல துறைகளில் நீங்கள் சாதித்துவிட்டீர்கள். இருப்பினும் ஏதாவது ஒரு துறையை தவறவிட்டதாக நீங்கள் உணர்கிறீர்களா?

உண்மையில் அப்படிச் சொல்ல முடியாது. என்னுடைய 60ஆவது ஆண்டு விழா நல்லூரில் நடைபெற்றபோது நான் சொன்ன ஒரு வசனம்...

    "It is nice to be old in ourselves... நீ உண்மையில் முதியவனாக இருந்தால் நீ சொல்வதை அனைவரும் கேட்பார்கள்".

அந்தவகையில் நான் எதை எதிர்ப்பார்த்தேனோ அதை அடைந்திருக்கிறேன். பெரிய பதவிகளை நான் எதிர்ப்பார்க்கவில்லை. ஒரு நல்ல பேராசிரியராக இருக்க விரும்பினேன். அப்படி இருந்தாயிற்று.

எங்கேயாவது நிபுணத்துவம் பண்ணும்போது என்னுடைய புத்தகங்கள் எடுகோளாக்கப்படுகிறதா? என்னுடைய சொல் மதிக்கப்படுகிறதா? அது போதும் எனக்கு. இதுவே நான் அடைந்த சாதனை.

ஆரம்ப காலத்தில் உங்களுடைய எழுத்துக்களில் கொமினுஷியம் மற்றும் மாக்ஸிஸம் ஆகியன கலந்திருந்தன. புப்ற்காலத்தில் அதிலிருந்து விடுபட்டதாக உணர முடிகின்றதே.

கொமினுஷியம் என்பது மாக்ஸிஸமாக மாறுவது உலகப் பொதுவான மாற்றம். 60களுக்குப் பின்தான் வெஸ்டன் மாக்ஸிஸம் என்பது வந்தது. காலத்ப்ன் தேவைக்கேற்ப மாறுதல்கள் அவசியமானதே.

பொதுமக்களுக்கு இந்த மாக்ஸிஸம் பற்றிக் குறிப்பிடும்போது ஏகத்துவக் கொள்ளையுடன் புகுத்துகிறார்களே. இது எந்தளவுக்கு சாத்தியம்?

மாக்ஸிஸம் என்பது Ideology. ஒரு கருத்துநிலை. Ideology என்ற சொல்லுக்கே இன்னும் சரியான தமிழ் சொல் இல்லை. சிலர் இதனை கருத்தியல் என்கிறார்கள். அல்தூஸர் பயன்படுத்திய Ideology என்ற சொல்லுக்கு கருத்தியல் பொருந்தாது. Ideology என்பது நாம் எடுக்கின்ற புத்தி சார்ந்த நிலைப்பாடும் நாம் உலகத்தைப் பார்க்கின்ற முறையும்தான்.

இது கருத்துக்களின் வரலாறு அல்ல. உண்மையிலேயே மாக்ஸிஸம் என்பது மிகப்பெரிய ஆழமான விடயம். அதுபற்றி இலகுவாக, தெளிவாகப் புரிந்துகொண்டால் மாக்ஸிஸம் என்பது ஒரு சிந்தனைக் கருவி என்பது புரியும். மாக்ஸிஸம் கட்சி சார்ந்த நிலைப்பாடொன்றல்ல. தத்துவ ஞானிகள் உலகத்தை விளக்க முயன்றுள்ளனர். ஆனால் பிரச்சினை என்னவென்றால் உலகத்தை மாற்றுவது என்படி என்பதுதான் என்று மாக்ஸ் குறிப்பிடுகின்றார்.

அந்த மாற்றத்துக்கான ஒரு அரசியல் வழிகாட்டியாகவே மாக்ஸிஸம் அமைந்துள்ளது. அச்சாதனையை முதன்முதலில் லெனின் புரிந்தார். மாக்ஸிஸத்தினுடைய மாற்றங்கள் முழுமையாக தமிழில் பயன்படுத்தப்படவில்லை என்பதும் கவலைக்கிடமானது.

கலைச்சொல் உருவாக்கம் பற்றி விளக்கம் தர முடியுமா?

ஆங்கிலச் சொற்களுக்கு தமிழாக்கம் செய்கின்றபோது ஆங்கிலச் சொல் ஏற்படுத்துகின்ற தாக்கம் மாறாமல் இருக்க வேண்டும். அதற்காக இடத்துக்கிடம் வெவ்வேறு அர்த்தங்களைப் பயன்படுத்த முடியாது. சொல்கின்ற சொல்லில் சிந்தனை இறுக்கம் இருக்க வேண்டும். அந்தச் சொற்கள் மூலமாகத்தான் தமிழ் மொழி பயிலும் மாணவர்களின் சிந்தனை வெளிப்படுகிறது என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.

இத்தனை இறுக்கமான சூழ்நிலையிலும் அனைத்து ஊடகங்களின் விடயங்களையும் உங்களால் உள்வாங்க முடிகிறதே. இது எப்படி சாத்தியமாகிறது?

நாங்கள் வளர்ந்த சூழல் அப்படி. அனைத்தையும் தேடி அறியும் ஆவலும் தெரியாதவற்றை தேடிக் கேட்டு அறிந்துகொள்ளும் ஆர்வமும் இருக்கிறது. இதற்கு நாம் பயப்படக்கூடாது. எனக்கு நீ போட்டியாக மாட்டாய். உனக்கு நான் போட்டியாக மாட்டேன் என்ற மனப்பான்மை இருந்தால் அறிவு உன்னைத் தேடி வரும்.

Please Click here to login / register to post your comments.