வடக்கில் கணிதத் துறையை மேம்படுத்த பாடுபட்டு உழைத்த கல்விப் பணிப்பாளர்

திருமதி அருளேஸ்வரி வேதநாயகம் கணித ஆசிரியராக, கணித பாட ஆசிரிய ஆலோசகராக,உதவிக் கல்விப் பணிப்பாளராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக, வலயக் கல்விப் பணிப்பாளராகப் படிப்படியாகப் பல உயர் பதவிகளை வகித்து மணிவிழாக் காணும் இத்தினத்தில் அவரை வாழ்த்துவதில் பெரு மகிழ்வடைகின்றோம். பல்வேறுபட்டஆளுமைக் கூறுகளைக் கொண்ட இவர், கல்விப் புலத்தில் பல்வேறுபட்ட தளங்களில் இயங்கியவர்.

கணிதபாட ஆசிரியராக,ஆலோசகராகக் கடமையாற்றிய காலப்பகுதியில் கணித பாடத்துறைக்கு இவர் ஆற்றிய சேவைகள் அளப்பரியன. 1992 இல் உதவிக் கல்விப் பணிப்பாளராக யாழ்ப்பாணக் கல்வித் திணைக்களத்தில் கடமையாற்றியபோது கோப்பாய் மகா வித்தியாலயத்தில் மெல்லக் கற்கும் மாணவர்கள் கணித பாடத்தில் அடிப்படைத் திறன்களைப் பெறுவதற்காக கற்பித்தல் உபகரணங்களை அமைத்துக் கணித மூலவள நிலையமொன்றைத் தொடக்கி வைத்தவர். இக்காலத்தில் கணித பாடத்தில் முதன் முறையாக க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் தோற்றிச் சித்தியடையாத மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகளை ஆரம்பித்து 90 சதவீதமான மாணவர்களின் சித்திக்கு வழிவகுத்தவர்.

இக்காலத்தில் வதிரி திருஇருதயக் கல்லூரி மாணவர்களுடன் கோப்பாய் கணித மூல வள நிலையத்தைப் பார்வையிடச் சென்றேன். மாணவர்கள் ஆர்வத்துடன் கற்றலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். இம்மாதிரியான கணித மூலவள நிலையம் ஒன்றினை அமைக்க வேண்டுமென ஆலோசனை வழங்கினார். 1993 இல் அமரர் இரா.சுந்தரலிங்கம் யாழ். மாவட்டக் கல்விப் பணிப்பாளராகவிருந்தபோது திருமதி அ.வேதநாயகத்தின் முயற்சியால் வடமராட்சி கணித மூலவள நிலையம் கரணவாய் பொன்னம்பல வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டது. பாடசாலை அதிபர் க.பொன்னையா இதற்கான இடத்தினை வழங்கி உதவியமை குறிப்பிடத்தக்கது. 25 ஆயிரம் ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் கி.சிவநேசனின் முயற்சியால் கிடைத்தது. இவர் அவ்வேளை பனை,தென்னை வளக் கூட்டுறவுச்சங்க கொத்தணி முகாமையாளராகவிருந்தவர்.

இக்கணித மூலவள நிலையத்தில் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையில் முதற் தடவையாகத் தோற்றிக் கணித பாடத்தில் சித்தியடையாத மாணவர்களுக்கு மாலைநேர வகுப்புகள் நடத்தப்பட்டது. இதில் 60 சதவீதத்துக்கு மேலான மாணவர்கள் சித்தி பெற்றனர். இம்மாலை வகுப்புகள் தொடர்ந்து 5 ஆண்டுகள் நடைபெற்றது. நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாகத் தொடர்ந்து நடைபெறுவதில் தடங்கலேற்பட்டது.

இக்காலப்பகுதியில் வேதநாயகம் யாழ்.வலயம் இரண்டில் கணிதபாட உதவிக் கல்விப் பணிப்பாளராக இருந்தார். தரம் 9,10,11 மாணவர்களுக்கான தன்னறிவுத் தேர்ச்சிச் செயலட்டைகளைத் தயாரித்துப் பாடசாலைகள் எல்லாவற்றுக்கும் வழங்கி கணிதபாட அபிவிருத்திக்காகப் பெரிதும் உழைத்தார். வடமராட்சி வலயப் பாடசாலைகளுக்கும் செயலட்டைகளை விநியோகம் செய்ய இம்மூலவள நிலையம் பொறுப்பாகவிருந்தது. இக்காலத்தில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கான நடமாடும் சேவையொன்று இம்மூலவள நிலையத்தால் செயற்படுத்தப்பட்டது.இதே காலத்தில் யாழ்.மாவட்டத்தில் செயற்படுத்தப்பட்ட சீடா செயற்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதிலும் முன்நின்று கூடிய பங்களிப்புச் செய்தார்.

வடக்கு,கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் கணித பாடப் பிரதிக் கல்விப் பணிப்பாளராகவிருந்த காலத்தில் இவரின் முயற்சியால் 2004 ஆம் ஆண்டு 10 நாட்கள் வடமராட்சிக் கணித மூலவள நிலையத்தில் இறுவட்டுகள் தயாரிக்கப்பட்டன. கணித பாடத்தில் 10 அலகுகளும் விஞ்ஞான பாடத்தில் இரு அலகுகளும் தெரிந்தெடுக்கப்பட்டது.இந்த இறுவட்டுகள் மூலம் மாணவர்கள் மிகுந்த பயனடைந்தனர். 12 இறுவட்டுகள் கொண்ட தொகுதி வடக்கு,கிழக்கிலுள்ள எல்லா வலயங்களுக்கும் வழங்கப்பட்டது. இதற்குரிய சகல செலவுகளையும் வடக்கு,கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் பொறுப்பேற்றது.

தென்மராட்சிக் கல்விப் பணிப்பாளராகவிருந்த காலத்தில் சாவகச்சேரி மகளிர் கல்லூரியில் கணித மூலவள நிலையம் புனரமைக்கப்பட்டது. நாட்டின் அசாதாரண சூழ்நிலை,மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வது அரிதாக இருந்தது. இதனால் கணிதபாடம் செயலமர்வு ஆசிரியர்களுக்குத் தொடர்ந்து நடந்தது. அதில் நானும் வளவாளராகக் கடமையாற்றினேன். இதேபோன்று முக்கிய படங்களுக்குச் செயலமர்வுகள் நடத்தப்பட்டன. இச்செயலமர்வுகளில் சுயகற்றல் கையேடு தயாரிக்கப்பட்டு ஆசிரியர்களின் உதவியுடன் மாணவர்களுக்குச் சேர்க்கப்பட்டது. இச்செயற்பாடுகள் நெருக்கடியான இக்காலகட்டத்தில் மாணவர்கள் பரீட்சையில் சித்தியடைய வாய்ப்பாகவிருந்தது.

2008 இல் இருந்து இன்றுவரை யாழ்.வலயக் கல்விப் பணிப்பாளராக இருந்து கல்விப்புலத்தில் ஆற்றிய சேவை அளப்பரியது. கல்வி அபிவிருத்திக்கு அதிக நேரம் ஒதுக்கி தரம் 5, சாதாரணதரம், உயர்தர வகுப்புகளுக்கான செயற்திட்டங்களைத் தனது மேற்பார்வையில் ஒழுங்கமைத்து வந்தார். இவ்வாறு தனது காலத்தில் கணிதபாட மேம்பாட்டுக்கு ஆற்றிய சேவை மறக்க முடியாததொன்று. அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்றாலும் கல்விச் சேவையில் ஓய்வுபெறவில்லை. வடக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு இவரது கல்விச்சேவை கிடைப்பதற்குப் பொறுப்பானவர்கள் தனிப்பட்ட முறையில் உதவிகளைப் பெறுவது சிறந்ததாக அமையும்.

*கட்டுரையாளர் முன்னாள் வடமராட்சிக் கணித மூலவள நிலையப் பொறுப்பதிகாரி

Please Click here to login / register to post your comments.