பிளவு படுத்தும் அவலம் வேண்டாம்

ஆக்கம்: த.மனோகரன்
தமிழ் மக்கள் இன்று பல்வேறு துன்பங்களுக்குள்ளாகியுள்ளனர். நிம்மதியான வாழ்வு என்பது தமிழர்களைப் பொறுத்தவரை கற்பனைக்குரிய ஒன்றாகவேயுள்ளது. இது இலங்கையடங்கிலுமுள்ள தமிழர்களின் உண்மையான யதார்த்தமான நிலையாகவுள்ளது. இதனை எவராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

பசி, பட்டினியுடன் மர நிழலில் அடிப்படை வசதிகளின்றி அவதிப்படுவோர் பெருந்தொகையினர். சொந்த இடங்களிலிருந்து வெளியேறி நிர்ப்பந்தத்தின் நிமித்தம் பல்லாண்டுகளாக அகதிகளாக அல்லற்படுவோர் நிலை பரிதாபத்திற்குரியது.

தமிழ் மக்களுக்குப் பிரச்சினையுண்டு. அவை தீர்க்கப்பட வேண்டும் என்று பேரின அரசியல் வாதிகளே ஏற்றுக் கொண்டுள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. பேரினவாதச் சிந்தனைகளே தமிழர்களின் பிரச்சினைக்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தமை வரலாறு.

1948 ஆம் ஆண்டின் குடியுரிமை, வாக்குரிமை பறிப்புச் சட்டம், 1956 ஆம் ஆண்டின் தனிச் சிங்கள அரச கருமச் சட்டம், 1958 ஆம் ஆண்டின் தமிழருக்கெதிரான இன வெறிப் பயங்கரவாதம், 1961 ஆம் ஆண்டின் சாத்வீக போராட்டம் படை பலத்தால் அடக்கப்பட்டமை, 1964 ஆம் ஆண்டின் தமிழர்களை நாடு கடத்தும் மனித ஏற்றுமதி ஒப்பந்தம், 1972 ஆம் ஆண்டின் அரசியலமைப்பில் சிறுபான்மை மக்கள் புறக்கணிப்பு, 1979 ஆம் ஆண்டின் பயங்கரவாத ஒடுக்க விதிமுறை 1977, 1981, 1983 களில் தமிழருக்கெதிரான பயங்கரவாத இன வெறிச் செயற்பாடுகள், யாழ் நூலக எரிப்பு இவ்வாறு பல தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான, குழிபறிப்பு செயற்பாடுகள் தமிழ் மக்களின் அமைதியான வாழ்வுக்கு, நிம்மதியான வாழ்வுக்கு எதிரான செயற்பாடுகளாயமைந்தன.

இவற்றில் தமிழ் மக்களின் குடியுரிமை, மொழியுரிமை, கல்வியுரிமை, தொழிலுரிமை, வாழ்வுரிமை ஆகிய பஞ்சமா உரிமைகள் இழக்கப்பட்டன. அவற்றில் சில சந்தர்ப்ப சூழ்நிலைகளாலும், நிர்ப்பந்தங்களாலும் சட்டப் படி வழங்கப்பட்டாலும் நடைமுறையில் இல்லை என்பது யதார்த்தம்.

நிலைமை இவ்வாறிருக்க, தமிழ் மக்களின் அதாவது உரிமைகளை இழந்து விட்ட தமிழ் மக்களின் உரிமைகளை மீட்டுத் தந்து, தமிழ் மக்களை வாழவைப்போமென்று கூறிக் கொண்டு பொது வாழ்வில் அதாவது அரசியலில் ஈடுபட்டோரின் செயற்பாடுகள் வரலாற்று ரீதியில் எவ்வாறு அமைந்தது என்பதை மீள் பார்வை செய்வது அவசியம். நமது வரலாற்றை, நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்ப்பது அவசியம்.

விட்ட தவறுகள் என்ன? எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும். நாம் விட்ட தவறுகளால் சமுதாயம் அடைந்த இழப்புக்கள் என்ன? இனியும் இவ்வாறான தடுமாற்றங்கள் ஏற்படாது தடுக்க வழி என்ன என்பது பற்றிச் சிந்திக்க வேண்டிய கால கட்டம் இது.

பேரினவாதிகள் தமிழ் மக்களின் உரிமைகளைப் பறித்து விட்டனர். நசுக்கி விட்டனர் என்று கூப்பாடு போட்டுக் கொண்டிருப்பதற்கு காலம் இதுவல்ல.

பெரும்பாலான சிங்கள மக்களுக்குத் தமிழர் படும் துன்பம் தெரியாது. தமிழ் மக்கள் ஒரு பிரச்சினையுமின்றி வாழ்கின்றனர் என்றே நம்புகின்றனர். சிங்கள ஊடகங்களும், அரசியல் வாதிகளும் அவ்வாறு கூறுவதை அப்பாவிச் சிங்கள மக்கள் நம்பி விடுகின்றனர். உண்மையை கூறுவதானால் நாட்டிலுள்ள சிங்களச் சகோதரர்கள் உண்மை மறைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

சிங்கள மக்களும், தமிழ் மக்களும் மோதிக் கொண்டிருப்பது பல தரப்புகளுக்கு அரசியல் நடத்தத் தேவையாக இருக்கின்றது. சாதாரண சிங்கள மக்கள் தமிழ் மக்களை நட்புடனேயே நோக்குகின்றனர். தம்மைப் போல சகல தமிழ் மக்களும் உரிமைகளுடன் வாழ்கின்றனர் என்றே நம்புகின்றனர். இதுவே யதார்த்தமான உண்மை. தமிழ் மக்களுக்கும், சிங்கள மக்களுக்குமிடையே உறவுக்குத் திரைபோட்டு பேரினவாத ஊடகங்களும் வேறு பல அமைப்புகளும் கங்கணம் கட்டிக் கொண்டுள்ளன. தமது சுய நல நோக்கை நிறைவேற்றிக் கொள்வதற்கேயாகும்.

நாட்டில் பிரிவினைவாதம் இவ்வாறே வித்திடப்பட்டது. வளர்க்கப்பட்டு வருகின்றது. இதனால் தேசிய இனங்களான தமிழர்களும், சிங்களவர்களும் சந்தேக வாழ்வின் உச்சத்திற்குத் தள்ளப்பட்டு விட்டனர். நாடு எதிர் நோக்கியுள்ள பிரச்சினையின் அடிப்படையே இது தான்.

நிலைமை இவ்வாறிருக்க தமிழ் மக்களின் உரிமையை மீட்கவெனப் பொது வாழ்வில் ஈடுபட்டவர்களின் நிலைமை விசித்திரமானது. தமிழ் மக்களின் உரிமைக்காக, நிம்மதியான வாழ்வுக்காக, தமிழ் மக்களின் ஒன்று பட்ட சக்தியால் இனத்தின் எழுச்சிக்கும், உயர்ச்சிக்குமாக பணியாற்றப் புறப்பட்டோரின் நிலை பரிதாபமாகத் தமிழ் மக்களின் வாழ்வை ஆக்கிக் கொண்டுள்ளது.

தமிழ் மக்களின் ஒற்றுமைக்காக, உரிமைக்காகப் பொதுப் பணியாற்றப் புறப்பட்டவர்கள் எத்தனை பிரிவுகளாகப் பிரிந்து செயற்படுகின்றார்கள். ஒருவரை ஒருவர் காலை வாரிவிட்டு அவதிப்படுத்தும் கைங்கரியத்தில் ஈடுபட்டுள்ளனர். சிந்திக்க வேண்டிய விடயம் இது.

எமக்காக எமது வாழ்வின் நலனுக்கும் வளத்திற்குமாகப் பணியாற்றப் புறப்பட்ட நீங்கள் எதற்காக இவ்வாறு பகைமையுடன் சகோதரச் சண்டையில் ஈடுபட்டு அழிகின்றீர்கள் என்று வாய்விட்டுக் கேட்பதே கூடாது என்ற நிலையில் தமிழ் மக்கள் வாழ்கின்றனர். உள்ளத்திலே உறுதி கொண்டு எழுச்சியுடன் வாழவேண்டிய சமுதாயம் உட்பிளவுகளால் உரிமையை மட்டுமா இழக்கும் அவலம் ஏற்படுகின்றது. உறவுகள், உடைமைகள் எனப் பல இல்லாமற்போகின்றன.

நாட்டிலே இனங்களுக்கிடையே ஒற்றுமை ஏற்பட வேண்டும். அதன்மூலம் நாடு நலம்பெற வேண்டும் என்று ஏங்கும் இந்நாளில் நமது வழிகாட்டிகளாக வலிந்து பொறுப்பைச் சுமக்கும் நம்மவர்கள் ஒன்றுபட வேண்டும் என்று சிந்திப்பது இனத்துரோகம் என்று கூட நம்மவர்களில் சிலர் கருதுகின்றனர்.

தமிழ் மக்கள் சகல உரிமைகளுடன் சமத்துவமாக, நிம்மதியாக வாழ வேண்டும் என்பதில் உண்மையான பற்றுக் கொண்டவர்களின் வேதனைக் குரலை, ஏக்கத்தை வழிகாட்டப் புறப்பட்ட நம்மவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

விருதுக்கு வேட்டையாடும் சிந்தனையிலிருந்து விடுபட்டு ஒட்டுமொத்த இன நலனுக்காகத் தமது சுயநல, சுயலாப நோக்கங்களைத் தியாகம் செய்து இன நலனுக்காக இனத்தின் ஒன்றுபட்ட மேன்மைக்காக நம்மவர்கள் பணி செய்ய வேண்டும்.

தமிழினத்தைக் காப்பதற்காக என்று கூறிக் கொண்டு இன்னுமொரு தமிழனைச் சாகடிப்பது போன்று இலங்கை நாட்டைக் காக்கவென்று கூறிக் கொண்டு ஒரு இனத்தவரை இன்னுமொரு இனத்தவர் சாகடிப்பது என்ன தத்துவம் என்று புரியவில்லை. சிந்தனைத் தெளிவும் சீரிய பார்வையும் எதிர்கால நோக்கும் அற்ற இச்செயற்பாடுகள் கைவிடப்பட்டாலே சிங்கள மக்களும் தமிழ் மக்களும் இலங்கைத் திருநாட்டில் நிம்மதியாக வாழலாம்.

இலங்கையின் தமிழ், சிங்கள அரசியல்வாதிகளிடம் சித்தாந்த வேறுபாடுகள் இல்லை. சுயநல நோக்க சிந்தனைகள் மட்டுமே தலைதூக்கி ஆட்டுகின்றன. இவை களையப்பட்டால் நாடு நலம் பெறும். இதற்கு முன்னோடியாகத் தமிழர் நலம் பேணும் அமைப்புகளிடையே நிலவும் வேண்டத் தகாத பகைமை உறவுகள் நீங்கி ஒற்றுமை ஏற்பட வேண்டும். இதுவே விடிவுக்கு ஏங்கும் நம்மக்களின் இதயக் குரலாக ஒலிக்கின்றது. இதுவே தமிழ் இனத்தின் குரலாகும்.

நல்லெண்ணத்துடன், நம்பிக்கையுடன் எதிர்பார்க்கும் ஒற்றுமை நிலை நாட்டப்பட்டால் நிம்மதி தானாகவே நம்மை நாடிவரும். இனத்தின் நலனுக்கு அத்திவாரமாகவும் அமைந்து விடும். சிந்தித்துச் செயற்பட வேண்டியவர்கள் கவனத்திற்கு இக்கோரிக்கை வைக்கப்படுகின்றது. பலன் கிட்ட எதிர்பார்ப்போம்.

Please Click here to login / register to post your comments.