புதைக்கப்படும் புன்னகைகள்

அந்த வீட்டின் முன்னால் விடுப்புப் பார்க்கக் கூடியிருந்தவர்களை விலக்கிக் கொண்டு உள்ளே சென்றனர் பொலிஸார். அவர்களுக்குக் கிடைத்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்த இடத்தைத் தேடி, இறுதியில் கண்டுபிடித்தும் விட்டனர். அது ஒரு சமையலறை. மண்ணாலானது. சமையலறை தோண்டப்பட்டது. வழமையாகப் பொலிஸாரின் இத்தகைய தேடுதல்களின்போது மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருக்கும் கசிப்பு மற்றும் சட்டவிரோத மதுபான வகைகளே அகப்படுவதுண்டு. ஆனால் இங்கு பொலிஸாரின் அகழ்வின் இறுதியில் கிடைத்தவையோ, கூடிப்பிறந்த இரட்டைக்குழந்தைகளின் உடலங்கள்.

எந்தப் பாவமும் அறியாத, தாய்ப்பாலின் முதற்துளியைக்கூட உணராமல், உயிரோடு அந்தச் சிசுக்கள் பெற்ற தாயால் புதைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகின்றது. பல வருடங்களுக்கு முன்னர் பரபரப்பாகப் பேசப்பட்ட கோகிலாம்பாள் கொலை வழக்கு போல இப்போது இது. ஆனால் அதில் தன் கணவரையே கொன்று, எருக்கிடங்கில் கோகிலாம்பாள் புதைத்திருக்க, இப்போது ஒன்றுமறியா பச்சிளம் சிசுக்களின் உயிரைப் பொருட்டாகவே மதிக்காது புதைத்துக் கொல்லும் பாதகம் அரங்கேறத்தொடங்கியுள்ளது.

அநேகமாக எல்லோருக்கும் மகாபாரதக்கதை தெரிந்திருக்கும். அதில் மிக முக்கியமான சர்ச்øŒக்குரிய சம்பவம் குந்தியின் முதற்பிரசவம். சூரியனுடன் ஏற்பட்ட தவறான உறவால் பிறந்த தன் மைந்தனை கர்ணனை சேலையால் சுற்றி ஆற்றில்விட்டாள் குந்தி. குருஷேத்திரப்போரில் பாண்டவர்கள் திணறுவதற்குப் பின்னாளில் அதே கர்ணனே காரணியாகவும் இருந்தான். இப்போது போர் ஓய்ந்துவிட்ட நம் மண்ணில் குந்திகளும் கர்ணன்களும் புதிதாக அசுரவேகத்தில் உருவெடுத்துக் கொண்டிருப்பதைக் கண்முன்னே நடக்கும் நிகழ்வுகள் செõல்லியபடியே நகர்கின்றன. கருவறையில் இருந்து புறப்பட்டு மண்ணுக்கு வந்த மறுகணமே பெற்றவர்களால் உயிரோடு புதைக்கப்படும் சிசுக்கள் பற்றிய செ#திகள் இதனையே உறுதிசெய்கின்றன. சிலநாள்களுக்கு முன்னர் கோப்பாய் பகுதியிலும் தற்போது வன்னியிலும் இவ்வாறான சிசுக்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. அதிலும் வன்னியில் மீட்டெடுக்கப்பட்டவை இரட்டைக்குழந்தைகளின் சடலங்கள். கருணையற்றவர்கள் கூட குழந்தைகள் என்றால் தம் கொடுமைகளை அவர்கள் மீது பிரயோகிப்பதற்குத் தயங்குவார்கள். ஆனால் அதெல்லாம் இப்போது மலையேறிவிட்டது. ஈவு, இரக்கம் எல்லாவற்றையும் தம் சிசுக்களின் புன்னகைகளோடு சேர்த்து மண்ணுக்குள் புதைத்துவிடுமளவுக்கு பெற்றவர்களின் மனங்கள் இறுகிவிட்டன.

அண்மையில் ஒரு மருத்துவ நண்பருடன் உரையாடிக்கொண்டிருந்த போது அவரும் இதே கருத்துக்களை எதிர்வு கூறியிருந்தார். அவர் மருத்துவராக இருந்தாலும் சமூகத்தின் போக்குக் குறித்து அதீத பிரக்ஞை கொண்டிருப்பவர். பொதுவாகப் போர் முடிவுக்கு வந்த பின்னர் அங்குள்ள சமூகங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்சினை பாலியல் ரீதியிலான வன்முறைகள்தான்.

ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற இறுக்கமான மதக்கட்டுக்கோப்புகளைக் கொண்ட நாடுகளில் கூட யுத்தம் நிறைவுக்கு வந்த பின்னர் இவ்வாறான பாலியல் அத்துமீறல்கள் பெருக்கெடுத்து , எ#ட்ஸ் போன்ற உயிர்கொல்லி நோ#களின் பரவுகையும் அதிகரித்துவிட்டது. இத்தகைய பாலியல்சார் முறைகேடுகள் இயல்பாக நிகழ்வதில்லை. என்றைக்குமே மீளமுடியாதபடி ஓர் இனத்தை தொடர்ச்சியான நெருக்குதல்களின் பிடியில் சிக்கவைக்கவே இவை திட்டமிட்டுச் செய்யப்படுகின்றன. போர் முடிந்த பின்னர் வெறும் மீள்குடியேற்றம் பற்றி மட்டுமே நாம் அதிக கரிசனை கொண்டிருக்கிறோம். சண்டை முடிந்துவிட்டதாக நிம்மதியடைகிறோம். ஆனால் உண்மையான சவாலை இனித்தான் சந்திக்கப்போகிறோம். கண்ணுக்குத்தெரியாத அந்த யுத்தம் ஏற்கனவே தொடங்கிவிட்டது. எல்லைகளற்ற பாலியல் சீர்கேடுகள் நமது பிரதேசங்களில் திட்டமிட்ட வகையில் பெருகத் தொடங்கிவிட்டன. குறிப்பிட்ட சில வருடங்களின் பின் நம் சமூகத் தின் பெரும்பாலானோர் எய்ட்ஸின் பிடிக்குள் சிக்கியிருப்பர். ஆனால் இப்போது நிலைமை கைமீறிப் போயிருக்கும். அந்த மருத்துவர் செõன்னபோது அதன் வீரியம் புரியவில்லை. ஆனால் அடுத்தடுத்து மீட்கப்படும் சிசுக்களின் உயிரற்ற உடலங்கள் மறைந்து கிடந்த உண்மைகளைப் பேசவைக்கின்றன. யுத்தம் தமிழர்பகுதிகளைத் தின்றுகொழுக்கத் தொடங்கிய இறுதிக்காலங்களில் ஏராளமான லட்சக்கணக்கான மக்கள் படையினரின் கட்டுப் பாட்டுப்பகுதிகளுக்கு வந்திருந்தனர். அப்போது ஏராளமான பெண்கள் பாலியல் இம்சைகளுக்கு ஆளானதாகக் குற்றஞ் சாட்டப்பட்டிருந்தது.

அதன் பின்னர் நலன்புரி நிலையங்கள் என்ற பெயரிடப்பட்ட யாருமே உட்புகவோ, வெளியேறவோ முடியாத திறந்தவெளிச்சிறைகளுக்குள் மூடிவைக்கப்பட்டனர். அதன்போது சரணடைந்த போராளிகளைத் தவிர, தம்மை இனங்காட்டாதிருந்த மக்களோடு மக்களாக மறைந்திருந்தபோராளிகளைக் கைது செய்தல் என்ற போர்வையில் களை யெடுப்பு நடந்துமுடிந்தது.

இதன் போதும் இளம்பெண்கள் சிலர் விசாரணை செய்யப்படும் தருணங்களில் படையினரின் பசிக்கு இரையானதாகக் கூறப்பட்டது. தன் குடும்பத்தினரைக் கொலை செய்துவிடுவதாக மிரட்டி தன்னை ஒரு சிப்பாய் பாலியல் பலாத்காரம் செய்ததாக அண்மையில் ஒரு யுவதி வாக்குமூலம் அளித்திருந்தமை அத்தகைய கதைகள் உண்மைதான் என்று சொல்லாமல் சொல்லிநின்றன. தடுப்பில் உள்ளவர்களைச் சந்திக்கச் செல்லும் பெண்களில் சிலர் பாலியல்ரீதியான சீண்டல்களுக்கு ஆளாவதாகக் கூறப்படுகின்றது. இதைவிட முன்னாள் பெண் போராளிகள் தடுத்து

வைக்கப்பட்டிருக்கும் இடமொன்றுக்கு அண்மையில் தனது உறவுப் பெண்ணைச் சந்திக்க ஒருவர் சென்றிருந்தார். ஆனால் அங்கு கண்ட சிலகாட்சிகள் அவருக்குப் பெரும் அதிர்வை உண்டாக்கின. பகல் பொழுதுகளில் தடுப்பில் உள்ள பெண்கள், இரண்டு சிப்பாய்களின் மேற்பார்வையின் கீழ் புல்லு வெட்டுதல், மற்றும் சிறு சிறு வேலைகளைச் செய்ய அனுப்பப்படுவார்கள். அதன்போது படையினர் தான் மேற்பார்வை செய்யும் பெண்களிடம் ஆபாசமாக உரையாடுதல், தனது செல்போனில் உள்ள சில காட்சிகளை அவர்களுக்குக் காண்பித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவதை அவர் நேரில் கண்டுள்ளார். பகலில் நாம் பார்த்திருக்கையிலேயே இப்படி என்றால்...? என்ற அவரின் ஆதங்கத்தை அவ்வளவு எளிதில் ஒதுக்கிவிட முடியாது.

நிகழ்ந்து முடிந்துவிட்ட யுத்தம் பல குடும்பங்களின் ஆண்களையும் காவு வாங்கியபின்னே அடங்கியிருக்கிறது அல்லது ஆண்களை காணாமற் போகச் செய்துள்ளது அல்லது தடுப்பில் அடைபட்டு உழலும் வாழ்வுக்குள் வீழ்த்தியிருக்கிறது. இதனால் பெண்களின் தலைமைத்துவத்தின் கீழேயே பெரும்பாலான குடும்பங்கள் இயங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.

இதுவும் பாலியல் ரீதியான ஆக்கிரமிப்பை இலகுவாக நிகழ்த்துவதற்குச் சாதகமாக மாறிவிட்டது. மீள்குடியேறிய பகுதிகளில் இரவுவேளைகளில் வீடுகளுக்குள் ஒரு சில படையினர் அத்துமீறி நுழைய முற்படும் சம்பவங்கள் அதிகளவில் நிகழ ஆரம்பித்திருப்பது (அண்மையில் வடமராட்சி கிழக்கில் இவ்வாறானசெயலில் ஈடுபட்ட படைவீரர் மக்களிடம் சாத்துப்படி வாங்கியது நினைவிருக்கலாம்) கூட இத்தகைய ஏவிவிடப்பட்ட பாலியல் போரின் நீட்சிதான். சிலசமயங்களில் ஆண் துணை யில்லாததால் , குடும்பத்தின் அடிப்படைப் பொருளாதாரக் கட்டமைப்பே சிதைவுறுவதால் வேறுவழியின்றித் தன் குடும்பத்தை நடத்துவதற்காக உடலை விற்கும் நிலைக்கும் பெண்கள் தள்ளப்படுகின்ற அவலங்களும் அரங்கேறவே செய்கின்றன. இவையே இறுதியில் இத்தகைய சிசுக்கொலைகளாக மாற்றமுறுகின்றன.

வடக்கின் வசந்தம், மீள்குடியேற்றம் என்ற அர்த்தமற்ற வெளிப்பூச்சுகளால் நிறைந்து கிடக்கும் வார்த்தைகளை அடிக்கடி உச்சரிப்பவர்கள் உள்ளே ஒளிந்திருக்கும் இந்தப்பிரச்சினைகளையும் தயக்கமின்றித் தடுக்கமுன்வரவேண்டும். இல்லாவிட்டால் சிசுக்களின் உயிரற்ற உடல் மீட்புகளும் , எய்ட்ஸ் போன்ற உயிர்கொல்லிகளும் கண்மூடித்திறப்பதற்கிடையில் பெருக்கெடுப்பது நிச்சயம்.இவற்றின் நீட்சிகளால் சிசுக்களின் உடலங் களைப் போலவே எதிர்காலத்தில் நம் இனத்தின் புன்னகையும் புதைக்கப்பட்டுவிடும், ஆனாலும் என்னசெய்வது, உடையவன் இல்லாவிட்டால் ஒரு முழம் கட்டைதானே?

Please Click here to login / register to post your comments.