புலிகள் கேட்டதையா கூட்டமைப்பும் கேட்கிறது...?

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துதல், அவர்களுக்கான புனர்வாழ்வு அபிவிருத்திப் பணிகள் போன்ற விடயங்கள் தொடர்பாக அரசுடன் பேச்சுகளை மேற்கொள்ள வேண்டியுள்ள நிலையில் அதற்கான வாய்ப்புக்கள் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்படுவது தமிழ் மக்களின் அபிவிருத்தி குறித்த விடயத்தில் அரசு அக்கறை காட்டாத நிலைமையையே தெட்டத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது.தமிழீழ விடுதலைப் புலிகள் போராட்டத்தின் மூலம் "தமிழீழம்" என்ற கோரிக்கையை முன்வைத்தனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பினர் என்ன கேட்கிறார்கள். விடுதலைப் புலிகள் கேட்டதையா கேட்கிறார்கள்? இல்லை. தமிழ் மக்கள் தமது தாயகத்தில் தம்மைத் தாமே நிர்வகிக்கக் கூடிய ஒரு தீர்வுத் திட்டத்தையே கேட்கின்றனர்.

னப்பிரச்சினைத் தீர்வு குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்கும் இடையே கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்ததும் இரு தரப்பினருக்கும் இடையிலான பேச்சுக்கள் ஆரம்ப மாகி தொடர்ந்து நடைபெறும் என அரசினால் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னரேயே தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தேர்தல் முடிவடைந்த பின்னர் காலம் தாழ்த்தியே இந்தப் பேச்சுக்கள் ஆரம்பமாகியுள்ளன.தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இவ்வாறான பேச்சுக்களை அரசுடன் மேற்கொள்ள வேண்டும் என்கின்ற எதிர்பார்ப்புடனேயே இருந்தது.

இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்தல், அவர்களுக்கான புனர்வாழ்வு அபிவிருத்திப் பணிகள் போன்ற விடயங்களில் அரசுடன் சேர்ந்து செயற்படுதர் போன்றவற்றில் கூட்டமைப்பு ஆர்வம் கொண்டுள்ளதாக முன்னரே அந்தக்கட்சி தெரிவித்திருந்தது.இந்த நிலையில், காலம் தாழ்த்திய கூட்டமைப்புக்கும், அரசுக்கும் இடையேயான பேச்சுக்களுக்காக உப குழுக்கள் அமைக்கப்பட்டன.

இந்தக் குழுக்கள் இரண்டு தடவைகள் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.ஆனால், இவ்விரு பேச்சுக்களின் போதும் குறிப்பிடத்தக்கதான தீர்மானங்களோ, முடிவுகளோ மேற்கொள்ளப்படவில்லை. சில விடயங்களில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ள போதும் அவை நடைமுறைப்படுத்தப்படவில்லை.

குறிப்பாகக் கடந்தமாதம் இடம்பெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுக்களின் போது, சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிச் சந்தேக நபர்கள் மற்றும் இறுதிப் போரின்போது, படையினரிடம் சரணடைந்த விடுதலைப்புலி முன்னாள் போராளிகள் குறித்தும் பேசப்பட்டது. இதன்போது அவர்களது பெயர்ப்பட்டியலை வவுனியாவிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வு அலுவலகத்தில் உறவினர்கள் பார்வையிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரச தரப்பினர் உறுதியளித்தனர். இது குறித்த செய்திகள் ஊடகங்களில் வெளியானதும், சில தினங்களுக்குப் பிறகு சரணடைந்த, ஏற்கனவே சிறைகளில் உள்ள இளைஞர்களின் பெற்றோர், உறவினர் வவுனியாவிலுள்ள பயங்கரவாதத் தடுப்புப் புலனாய்வு அலுவலகத்திற்குச் சென்றனர். அவ்வாறு சென்றுவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பினர்.இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது எனவும் அவ்வாறான நடைமுறைகள் எதுவுமில்லை என்றும் அந்த அலுவலகத்திலிருந்தவர்கள் கூறினார்கள்.

இது குறித்து யார் உங்களுக்குக் கூறியது எனவும் அவர்கள் கேட்டுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எனத் தெரிவித்ததும், அங்கிருந்தவர்கள் ஏளனமாகப் புன்னகைத்து, அப்படியானால் அவர்களிடமே திரும்பிச் சென்று கேளுங்கள் எனக்கூறி மக்களைத் திருப்பியனுப்பியுள்ளனர்.

தற்போது இரு தரப்புகளுக்கும் இடையிலான மூன்றாம் கட்டப்பேச்சுக்கள் நடைபெறவுள்ளதாக திகதி அறிவிக்கப்பட்டிருந்த போதிலும் அது பிற்போடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த மூன்றாம் கட்டப் பேச்சுக்களை நாடாளுமன்றம் கூடும் நாள்களில் நடத்த நேரம் ஒதுக்கித்தருமாறு கூட்டமைப்பு அரசிடம் கேட்டுள்ளது.முன்னர் அறிவித்திருந்த திகதி பிற்போடப்பட்டமைக்கு, அமைச்சர்கள் உள்ளூராட்சித் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளமையை அரசு காரணம் காட்டியுள்ளது.அரசுக்கும் அதன் அமைச்சர்களுக்கும் பல்வேறு காலகட்டங்களிலும் பல்வேறு பணிகள் இருக்கலாம். ஆனால், அவற்றைக் காரணம் காட்டி நாட்டின் பிரதான பிரச்சினையாகவுள்ள இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை பிற்போடுவதோ, இடை நிறுத்துவதோ முறையானதல்ல.

அத்துடன், பேச்சுக்கான சரியான நிகழ்ச்சி நிரலைக் கடைப்பிடிப்பதும், ஒரு இலக்கை நோக்கி அதனை நகர்த்திச் செல்வதும் முக்கியமானதாகும்.

சர்வதேச அழுத்தங்களுக்கான "பேய்க்காட்டல்" ஆகவும் இழுத்தடிப்பாகவும் இனப் பிரச்சினை தீர்வுக்கான பேச்சுக்கள் அமையக்கூடாது.இனப் பிரச்சினைத் தீர்வுக்கான கால நிர்ணயத்தை குறிப்பிடமுடியாது என அண்மையில் ஜனாதிபதி கூறியிருப்பது தமிழர் தரப்பை கவலை கொள்ளச் செய்துள்ளதுடன், நம்பிக்கையீனத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

புலிகள் கேட்டவற்றைத் தம்மால் வழங்கமுடியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார். இதுவும் விமர்சனத்திற்குரிய கருத்தாகவே உள்ளது. தற்போது பேச்சுக்களில் ஈடுபட்டுள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் புலிகள் கேட்டவற்றையா கேட்கிறார்கள்? புலிகள் தங்கள் போராட்டத்தின் மூலம் "தமிழீழம்" என்கிற தனியரசையே இலக்காகக் கொண்டிருந்தனர். அரசுடன் சமாதானப் பேச்சுக்களில் ஈடுபட்டபோது தமிழீழம் என்கிற தனியரசுக்கு மாற்றாக, "உள்ளகசுயாட்சி", "இடைக்காலத் தன்னாதிக்க அதிகாரசபை" (ISGA) போன்ற தீர்வுத் திட்டங்களை அவர்கள் முன்வைத்திருந்தார்கள்.

ஆனால், கூட்டமைப்பினர் புலிகள் கேட்டவற்றைக் கேட்கவில்லை. ஒன்றுபட்ட இலங்கையில், தமிழ்மக்கள் தங்களது பூர்வீகத் தாயகத்தில், தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்ளக் கூடிய வகையிலான ஒரு தீர்வுத் திட்டத்தினையே தமிழர் தரப்பு வேண்டி நிற்கிறது.எனவே ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட புலிகள் கேட்டவற்றையும் ஜனநாயக ரீதியாகப் போராடிவரும் தமிழ் மிதவாத அரசியல்வாதிகள் கேட்பதையும் வேறுபடுத்திப் பார்க்கவேண்டும்.கடந்த வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் கட்ட வாக்கெடுப்பின்போது அரசுக்குத் தங்களது நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதமாக அதனை எதிர்த்து வாக்களிப்பதை தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கள் கைவிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்க தாகும்.

போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச அழுத்தங்கள் இலங்கை அரசுக்கு அதிகரித்துவரும் சூழ் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தப் போர்க் குற்றச்சாட்டுத் தொடர்பான கருத்துக்களை வெளியிடக்கூடாது எனவும் அவ்வாறு வெளியிட்டால், அது இனப் பிரச்சினைத் தீர்வு தொடர்பான விடயத்தில் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் அரசு தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.இதனைக் கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டதா இல்லையா என்பது குறித்து சரியாகத் தெரியவில்லை. ஆனாலும், இந்தச் சந்தர்ப்பத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவு பூர்வமாகவும் இராஜதந்திர ரீதியாகவும் சிந்தித்து அணுக வேண்டும் என்பது அரசியல் நோக்கர்களின் கருத்தாகவுள்ளது.

அரசு மீதான போர்க் குற்றச்சாட்டை தமிழ் மக்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு ஒன்றை வழங்குவதற்கான பேரம் பேசும் உத்தியாக சர்வதேச சமூகம் கையாள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்வாறான நகர்வுகள், உத்திகள் தொடர்பான சாதக, பாதகங்கள் குறித்து தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு விரிவாகச் சிந்தித்து ஆராயவேண்டிய அவ சியம் உள்ளது. இதற்காக சர்வதேச சமூகத்துட னான இராஜதந்திரத் தொடர்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவையும் கூட்டமைப்புக்கு உள்ளது. தற்போது நடைபெற்றுவரும் கூட்டமைப்புக் கும், அரசுக்கும் இடையிலான பேச்சுக்கள் சரியான திசை வழியில் செல்வதற்கு மேற்குறித்த விடயங் கள் கவனத்திற்கொள்ளல் அவசியமானதாகும்.

Please Click here to login / register to post your comments.