மீண்டுமொரு ஜயசிக்குறு?; அதனிலும் பார்க்க அதிக அரசியல் பாதிப்புகளுடன்

ஆக்கம்: பீஷ்மர்
சம்பூர் நடவடிக்கை முதல் தென்னிலங்கையில் ஒரு `மறுதலிக்க முடியாத அண்மைக்கால உண்மை' எனப் போற்றப்பட்டு வந்த ஒரு அபிப்பிராயம் கிளாலி முகமாலைப் போரின் முடிவின் பின்னர் சுக்குநூறாகியுள்ளது. விடுதலைப் புலிகள் தங்கள் படைத்திட்டத்திறனிலும் யுத்த நடத்துகைத் திறனிலும் தமக்குரிய இடத்தை வலுவாக நிறுவிக் கொண்டுள்ளது மாத்திரமல்லாமல் இப்பொழுது ஓர் அரசியல் முதிர்வினையும் காட்டிக் கொண்டுள்ளார்கள்.

முகமாலை, கிளாலி யுத்தத்துடன் இந்த நீண்ட நெடும் போர் நின்றுவிடப் போவதில்லை. ஆனால், அதன் பின்னர் இலங்கை அரசும் தங்கள் நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ள விரும்பாத பிராந்திய சர்வதேச ஊடகங்கள் சிலவும் கூறிவந்த தமக்கான முக்கிய நியாயமாகக் காட்டி வந்த ஒரு நிலையத்தினை இனி தொடர்ந்து அழுத்த முடியாது ஏற்பட்டுவிட்டது.- அதாவது விடுதலைப் புலிகளே தாக்குதல்களை தொடர்கிறார்கள் என்பதும் அது அவர்களின் பயங்கரவாத போக்கின் இயல்பு என்றும் கூறிவந்தமையை முகமாலை, கிளாலி படை நகர்வுகளின் பின்னர் நிச்சயமாக சொல்ல முடியாது. கடந்த இரண்டு தினங்களாக தென்னிலங்கையினதும் பிராந்திய ஊடகங்களினதும் பிரகடனப்படுத்தப்படாத பதிற்குறிகளை பார்க்கும் பொழுது இந்த உண்மை நன்கு தெரிகின்றது.

சர்வதேச சமூகமோ, இணைத் தலைமை நாடுகளோ விடுதலைப் புலிகள் பயங்கரவாத முன்னெடுப்புகளை நிறுத்த வேண்டுமென்று இனி வாய்ப்பாடு ரீதியாக கூறமுடியாது. ஏனெனில், விடுதலைப் புலிகள் இம்முறை அரசாங்க படை நகர்வுக்கு முகங்கொடுத்துள்ளனரே தவிர அவர்கள் இதனைத் தொடங்கவில்லை. அதன் காரணமாக இதன் அரசியல் விளைவுகள் முக்கியமானவை.

அதனைப் பற்றி நோக்குவதற்கு முன்னர் படை நிலைப்பட்ட ஒரு வினா கிளம்புகின்றது. `ஏ-9' பாதையை மூடி யாழ்ப்பாணம் முழுவதையும் கெடுபிடி நிலையில் வைத்துக் கொண்டு போதாதற்கு ஆகாய விமான படையுடன் இத்தகையதொரு படை நகர்வை மேற்கொள்ளும் பொழுது முந்திய வரலாற்று நினைவுகள் வருவதில்லையா... சாதாரண சிங்கள படை வீரர்கள் 200க்கும் மேற்பட்டவர்களினது மரணத்துக்கும் 500க்கு மேற்பட்டவர்களது படுகாயத்துக்குமான மானசீக பொறுப்பு யாருடையது. சிங்களத்துவ கோஷம் சாதாரண சிங்கள மனிதர்களின் அழிப்புக்கு இடங்கொடுத்துள்ளமை பற்றி யாராவது பேசுவார்களா...

முகமாலை, கிளாலி படையெடுப்பின் அரசியல் பற்றி சில உள் இரகசியங்கள் சிங்கள ஊடகவியலாளர்களிடையே பேசப்படுகின்றன. அதில் முக்கியமானது இந்தப் படைநகர்வின் வெற்றியோடு பாராளுமன்ற தேர்தலை அறிவிப்பதாக இருந்ததாம். இது ஜனாதிபதி அவர்கள் ஜே.வி.பி.க்கும் ஹெல உறுமயவுக்கும் சொல்லாது வைத்திருந்த ஒரு விடயமென்றும் பேசிக் கொள்கின்றார்கள்.

இந்தப் படையெடுப்பின் பின்புலமாக அமைந்தவையும் (அமைபவையும்) மிக முக்கியமானவையாகின்றன. `ஏ-9' பாதையை முற்றாக மூடியது, கடற்பாதை வழியாகவே யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொள்வது என்பவை யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கையில் ஏற்படுத்திய பாரதூரமான பாதிப்புகளைப் பற்றி அரசாங்கம் நோக்கிய முறைமை சர்வதேச அரசியலில் முக்கிய இடம் பிடித்திருக்க வேண்டியதொன்றாகும். யாழ்ப்பாணத்தில் அரிசியின் விலை ஒரு கிலோ 250 ஐயும் மாவின் விலை 100 ரூபாவையும் எட்டியது என்பது பற்றி எந்தத் தரவும் அதிகம் தெரியாமலே போய்விட்டது. இது சம்பந்தமாக இளம் எம்.பி.க்கள் எடுத்துக் கொண்ட நடவடிக்கைகள் சிங்கள பத்திரிகைகளை எட்டவே இல்லை. எனினும் அந்த முயற்சிக்காக அவர்கள் வாழ்த்துப்பட வேண்டும்.

இந்த நாட்களிலேயே திருவாளர்கள் சம்பந்தன், சேனாதிராஜா ஜோடியினர் சென்னையிலும் டில்லியிலும் நடத்திய `கூத்துகள்' பற்றிய செய்திகள் வெளிவந்தமையால் அடிப்படைப் பிரச்சினை பற்றிய அரசியல் அழுத்தம் இல்லாமலே போய்விட்டது.

தென்னிலங்கையைப் பொறுத்தவரையில் முகமாலை, கிளாலி முடிவுகள் பற்றி அதிகம் பேசப்படப் போவதில்லையென்பது எமக்குத் தெரியும். ஆனால், தாங்கள் தொடர்ந்தும் வென்று கொண்டிருக்கின்றோம் என்று சொல்வதை இனிமேல் சிங்கள மக்கள் நம்பப்போவதில்லை.

இப் பின்புலத்தில் பேச்சுவார்த்தைக்கு போவது என்பது தனது அரசியற் பெருந்தன்மையின் வெளிப்பாடு என்று கூறிக்கொண்டு வந்த ஜனாதிபதி இதன் பின்னர் அரசியற் தீர்வு பற்றி தொடர்ந்து சுற்றி வளைத்து பேச முடியாது.

உண்மையில் பேச்சுவார்த்தைகளில் இடம்பெறப் போகும் விடயம் யாது என்பது இப்பொழுது முக்கியமாகின்றது. இந்தியாவை தடவிக் கொடுப்பதற்காக பஞ்சாயத்து சபைகள் பற்றி ஆராய்வதற்கு ஒரு பெரிய குழுவே இந்தியா செல்லவிருக்கிறதாம். பிரம்மஸ்ரீ மணிசங்கர் ஐயர் சொன்னாராம் கொல்வின் ஆர்.டீ.சில்வாவின் தோழர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண பயணம் மேற்கொள்ளப்போகிறாராம்.

இலங்கையின் சாதனைகளில் ஒன்றாக கம்சபா என்கின்ற கிராம சபைகளை எடுத்துக் கூறிவந்த சிங்கள பண்பாடு பஞ்சாயத்து முறைபற்றி படிப்பதற்கு இந்தியா செல்கின்றது என்றால் அழுவதா? சிரிப்பதா?

இலங்கைத் தமிழரின் உரிமைப் பிரச்சினை கிராம சபை (பஞ் சாயத்து) மட்டத்தில் தீர்க்கப்படக் கூடியதொன்றா? இந்தப் பிரச்சினைகளின் எடுகோள்கள் யாவை? இந்தியாவின் பஞ்சாயத்துக்கும் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கும் என்ன தொடர்பை காண்கிறார்கள். மொழி மாநில மட்ட ஆராய்வு என்றால் அதில் நியாயமிருக்கும். அதிற்கூட ஒரு சிக்கலுண்டு. கலாநிதி தேவநேசன் நேசையா வற்புறுத்தியுள்ள ஒரு உண்மை உண்டு. மாநில ஆளுநரை மத்திய அரசு மாநில விடயங்களில் பயன்படுத்தும் முறைமையினை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் சிந்திக்கவே முடியாது என்பதே அந்தக் கருத்தாகும்.

இவற்றைக் கூறுவதற்கான ஒரு தேவையுள்ளது. ஏனெனில், தம்மை தமிழ்க் கட்சிகளாக காட்டிக் கொள்ளும் பலம். இந்த விடயங்களை கொழும்பிலும் டில்லியிலும் சொல்லியுள்ளார்கள். விடுதலைப் புலிகளை எதிர்ப்பதென்பது தமிழ் மக்களின் நியாயமான அரசியற் கோரிக்கைகளை எதிர்ப்பதாக அமைந்துவிடக் கூடாது என்ற உண்மையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமானது.

முகமாலை - கிளாலி படையெடுப்பு சம்பந்தமான அரசாங்கமும் பிரதான சிங்கள ஊடகங்களும் நடந்து கொள்ளும் முறைமையில் ஒரு முக்கிய அடிப்படை அரசியற் பிரச்சினையுள்ளது. அரசியல் நகர்வுகள் போர் நடவடிக்கை பற்றிய உண்மைகள் எடுத்துக் கூறப்படுகின்றனவா, பிரதான சிங்கள அச்சு ஊடகங்கள் எழுதுகின்ற முறைமையில் சிங்கள மக்களின் தமிழ் எதிர்ப்பு வைராக்கியத்தை வளர்ப்பதே நோக்கமாக கொண்டுள்ளன. இதிலுள்ள சோகம் என்னவென்றால், அவர்கள் நிலைநிறுத்த விரும்புகின்ற ஒற்றையாட்சி கோஷத்தின் பிரதான எதிர்ச்சக்தி இதுவே என்பதாகும். ஆதாவது தமிழுக்கு எங்கும் எந்த இடமும் கொடுக்க வேண்டியதில்லை என்று கூறுவதன் மூலம் தமிழர்கள் தாங்கள் பிரதானமாக வசிக்கும் பகுதிகளில் தங்களை ஸ்திரப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். உண்மையில் ஸ்திரப்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது.

இறுதியாக இந்திய அர சாங்கத்தின் ஆயுத உதவி வரப் போவதாக இந்திய கடற்படை மட்டத்திலிருந்து கிளம்பியுள்ள செய்தியாகும். டாக்டர் சொல்ல வேண்டிய விடயத்தை மருந்து கலக்கி கொடுப்பவர் விளக்கிச் சொல்வது போன்ற ஒரு நகைச்சுவை நாடகமிது. இலங்கையில் பாகிஸ்தானின் தாக்கத்தை குறைக்க பாகிஸ்தான் போன்று தாமும் படை உதவி செய்ய இந்தியா சிந்திக்கின்றதா என்ற ஒரு கேள்வி எழவே செய்கின்றது. முதலில் இந்த விடயத்தின் உண்மை பொய்யை அறிய வேண்டாமா. அறிய வேண்டிய தமிழ் எம்.பி.க்கள் பபூன் வேடம் போட்டு ஆடுகிறார்கள். இது தனியே பேசப்பட வேண்டிய விடயம்.

Please Click here to login / register to post your comments.