எமக்கான அபிவிருத்திக்கு எம் பங்கு அவசியம்

ஆக்கம்: பேராசிரியர் இரா.சிவசந்திரன்
தமிழ்ப் பிரதேச அபிவிருத்தி எவ்வாறு நிகழ வேண்டும் என்பதை அம்மக்களே தீர்மானித்தல் முக்கியம். எமக்கான அபிவிருத்தியை நாமே செய்தல் வேண்டும் என மக்கள் கருதுகிறார்கள். முதலில் தமிழ்ப் பிரதேசத்தில் மக்கள் கருதும் அபிவிருத்தி என்ன? என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். அது கிராமம் சார்ந்த நிலைத்து நிற்கத்தக்க அபிவிருத்தியா? அல்லது சிங்கப்பூர், யப்பான், மேற்கு நாடுகள் போன்ற உயர் தொழில்நுட்பம் சார்ந்த அபிவிருத்தியா? அல்லது இதற்கு இடைப்பட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் அபிவிருத்தியா? என்பது பற்றி தமிழ் மக்களிடம் வினாவ வேண்டும்.

மேலும் இவ் அபிவிருத்தி யாரைச் சென்றடைய வேண்டும் என்பதும் முக்கியமானதாகவும் உள்ளது. அபிவிருத்தி எனும் போது அது உணவு, உடை, உறையுள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாகவும் அரசியல் உரிமைகளுடன் கூடிய சுய கௌரவமான மதிப்பார்ந்த சுதந்திரமான வாழ்வை மேற்கொள்ளக் கூடிய மக்கள் குழுவைக் கொண்டதாகவும் மக்களிடையே பொருளாதார வருமானங்கள் சமமாக பங்கிடப்படுவதாகவும் இருக்க வேண்டும். இந்த அம்சங்கள் தற்போதுள்ள அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டக் கொள்கைப் பிரகடனத்தில் காணப்படவில்லை. இங்கு அமுல்படுத்தப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகள் பிரதேச மக்களின் விருப்பத்துக்கான அபிவிருத்தியாக இல்லாமல் சர்வதேச உதவியுடன் அரசால் திணிக்கப்படும் அபிவிருத்தியாக அமைந்துள்ளது.

பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கையில் விவசாயம், மீன்பிடி, கைத்தொழில் போன்றன அபிவிருத்தி செய்யப்படல் வேண்டும். அரசாங்கம் கைக்கொள்ளும் விவசாய அபிவிருத்தி ஒரு வர்த்தக ரீதியிலான பல் தேசியக் கம்பனிகளுக்குத் தீனி போடும் விவசாய அபிவிருத்தியாக அமைக்கப்படவுள்ளதாக தெரிகிறது. வன்னியை உதாரணமாக கொள்கையில் வன்னி நிலங்களில் பெரும்பாலானவை அரசாங்க அனுமதிபெற்ற காணிகள் என சொல்லப்படுகிறது. இவற்றுக்கான பெருமளவு காணி உறுதிகள் மக்களிடம் வழங்கப்படவில்லை. அரசாங்கம் இதனை மீண்டும் மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம் என சந்தேகம் எழுகின்றது. பால் உற்பத்தியில் சீன, இந்திய, அவுஸ்ரேலியா பால் பண்ணை பல்தேசிய நிறுவனங்களின் தலையீடுகள் இடம்பெற்று மக்களிடமிருந்து அன்னியப்படும் உற்பத்தி முறைக்கு இதனை இட்டுச் செல்லும் போக்கு தென்படுகிறது.

கைத்தொழிலை எடுத்துக்கொண்டாலும் வளம் சுரண்டப்படுதல், மாசாக்கம் போன்றன நிகழுமென அஞ்சப்படுகின்றது. உதாரணமாக காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, இந்திய பிர்லாக் கம்பனி இடம் வழங்கப்பட்டு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டால்; யாழ் குடாநாட்டு சுண்ணக்கல்லை முற்றாக அழித்தொழிக்கும் நடவடிக்கையாகவே அதனை கருதவேண்டும். எங்கள் எல்லைக்குட்பட்ட வளங்கள் வேகமாக சுரண்டப்பட்டு தரைகீழ் நீர் உப்பாதலும் கடல்நீர் உட்ப்புகும் தன்மையும், இதனால் அதிகரித்து யாழ் மக்களின் வாழ்வு கேள்விக்குறியாகும் என அஞ்சப்படுகிறது. காங்கேசன் துறைப்பகுதி பாரிய பள்ளங்களாக தற்போது காணப்படுகிறது. உயர் பாதுகாப்பு வலயம் இருந்தபோதே அகழ்வு நடத்தப்பட்டதாக அவ்வூர் மக்கள் தெரிவிக்கின்றனர். அரசு செல்வாக்குப் பெற்ற உள்ளுர் கம்பனி ஒன்று நீண்டகாலமாக இந்த சுரண்டலில் ஈடுபட்டுள்ளது. தொடர்ந்தும் பிரதேச நிர்வாகக்கட்டமைப்புக்குத் தெரியாது அது இடம்பெற்று வருவதாக பொறுப்பு வாய்ந்த அரசு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

எமது பிரதேச வளங்களை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதுபற்றி எமது பிரதேச நிபுணர்களின் ஆலோசனை பெற்றே அவை நடைமுறைப்படுத்த வேண்டும். மீன்பிடித்தொழிலை எடுத்துக்கொண்டால் பல மீன்பிடிக் கிராமங்கள் தமிழ் பிரதேசங்களில் பரந்துள்ளன. இவர்களது வாழ்வாதாரமாக பாரம்பரிய தொழில்நுட்பங்களை கொண்ட மீன்பிடி முறையே உள்ளது. இது மீன்வள வருமானத்தை மக்களிடையே சமமாக பகிர வழிவகுத்த முறையாகும். சீனா, யப்பான் போன்ற நாடுகளின் முதலீட்டுடன் மீன்பிடி அபிவிருத்தி செய்யப்படுமாயின் ஒரு மீன்பிடிக் குடியிருப்பிற்கு ஒரு மீன்பிடி கப்பலின் சேவையே போதுமானதாக அமைந்துவிடும். ஒரு பல்தேசிய நிறுவனத்தால் மக்களின் வருமானம் அனைத்தும் சுரண்டப்பட முடியும். இது மக்களுக்கான அபிவிருத்தியல்ல என்பதை நாங்கள் மனங்கொள்ள வேண்டும்.

சுற்றுலாத்துறையின் கட்டுப்பாடற்ற வளர்ச்சியானது எமது கலை, கலாசார, விழுமியங்களை அழிக்கவல்லதென மக்கள் கருதுகிறார்கள. சமீபத்தில் நல்லூர் பிரதேசத்தில் நட்சத்திரஹோட்டல் அமைக்கும் திட்டமானது அப்பட்டமாக எமது கலாசார வரலாற்று சின்னங்களை அழித்து ஒழிக்கும் முயற்சி என மக்கள் குரல்கொடுத்தார்கள். இது போன்றே யாழ்ப்பாண குடாநாட்டின் பல பகுதிகளிலும் புத்தமத சின்னங்கள், சிங்களவர்களுக்கான வரலாற்று சின்னங்களாக திரிவுபடுத்தப்படுகின்றன.

உதாரணமாக கந்தரோடை, திருவடிநிலை சங்கமித்ததுறை என்பவற்றின் வரலாறுகள் திரிக்கப்பட்டு அச்சடித்த ஆவணங்களாக சுற்றுலாக்கு வரும் சிங்கள மக்களுக்கு வழங்கப்படுகின்றன. சூழல் நட்பார்ந்த சுற்றுலாத்துறை வளர்க்கப்படுவதை எமது மக்கள் எதிர்க்கமாட்டார்கள். கடற்கரைகளை அழகுபடுத்தி, சுற்றுலா பகுதியாக மாற்றுதல், பறவைகள் சரணாலயம் அமைத்து வெளிநாட்டிலிருந்து வரும் பறவைகளின் அழகைக்கண்டு மகிழல், பசுமைக் கிராமங்களையும் பூங்காக்களையும் உருவாக்கி அதனுள் சுற்றுலா மையங்களை அமைத்தல் போன்ற சுற்றுலா அம்சங்கள் மக்களால் வரவேற்கப்படும்.

எனவே ஒரு பிரதேச அபிவிருத்தி அப்பிரதேச மக்களின் விருப்பம், தேவை என்பவற்றை மனங்கொண்டே செய்யப்பட வேண்டும். கொழும்பில் குளிரூட்டப்பட்ட அறைகளில் இருந்து உருவாக்கப்படும் திட்டங்கள் எமது பிரதேசத்தில் உள்ள இன்னோர் குளிரூட்டப்பட்ட அறைகளில் அமைந்துள்ள அரசாங்க திணைக்களங்களுக்கு ஈமெயில் மூலம் அனுப்பி நடைமுறைப்படுத்த முடியாதென்பது சர்வதேசம் நான்கு தசாப்தங்களுக்கு முன்னரே கற்றுக் கொண்ட பாடம் ஆகும். அபிவிருத்தி திட்டங்கள் மேலிருந்து கீழாக அன்றி, கீழிருந்து மேலே செல்ல வேண்டும். நாம் எப்போ இதனைக் கற்றுக்கொள்ளப் போகின்றோம்?

Please Click here to login / register to post your comments.