கேள்விக்குறியாகவுள்ள சிறுபான்மையினர் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம்!

ஆக்கம்: எம்.ஏ.எம்.நிலாம்
நாட்டிலுள்ள பேரினவாதக் கட்சிகள் தேசியவாதம் பேசுவதிலேயே கூடுதல் முனைப்புக் காட்டிக் கொண்டிருக்கின்றன. கட்சிகளாக இருந்தாலென்ன அவற்றின் தலைவர்கள் உள்ளிட்ட "கொம்ரெட்"டுகள் கூட தேசியவாதம் பேசத் தொடங்கியுள்ளன. இத்தகைய தேசியவாதத்தில் உள்ளார்ந்த நோக்கம் என்னவென்பதை நாம் ஆழமாகச் சிந்திக்க வேண்டியுள்ளது. தேசியவாதம் தேசத்தை ஒன்றுபடுத்துவதாக யாராவது அர்த்தம் கொள்ள முற்பட்டால் அதைவிட முட்டாள்தனம் வேறெதுவும் இருக்க முடியாது என்பதை உறுதிபடச் சொல்ல முடியும்.

ஏனெனில், இந்த நாட்டில் சுதந்திரத்துக்கு முன்னரும் அதன் பின்னரும் கிட்டத்தட்ட நூறு வருடங்களாக காலத்துக்குக் காலம் தேசியவாதம் என்ற வார்த்தை தலைதூக்கி அதன் பின்னால் ஏற்பட்ட விபரீத விளைவுகளை நாட்டின் வரலாற்றை புரட்டிப்பார்க்கும்போது கண்டறியலாம். தேசியவாதம் என்ற வார்த்தையின் மறுபெயரைக் கேட்டால்தான் அதன் யதார்த்தபூரவமான உண்மையை உணர்ந்து கொள்ள முடியும். ஆம், தேசியவாதம் என்பது இனவாதத்தின் மறுபெயராகும்.

தேசியவாதத்தினூடாகவே இனவாதம் தலைதூக்குகின்றது. எமது நாடு சுதந்திரமடைந்த நாள் முதல் இன்று வரை சகல சமூகங்களும் ஒன்றுபட்டதற்கான வரலாறே கிடையாது. காலத்துக்குக் காலம் இனரீதியாக பிளவுபட்டுக் கொண்டே போகிறது. இன்றும் கூட நாடு இனவாதத் தீயில்தான் வெந்து கொண்டிருக்கின்றது. ஜனநாயக அரசியல் நீரோட்டம் என்பது கூட இன்று கேள்விக்குரியதொன்றாகவே நோக்கப்பட வேண்டியுள்ளது. இந்த நாட்டில் உண்மையான ஜனநாயகம் இருக்கின்றதா என்பதை ஒவ்வொருவரும் மனச்சாட்சியை தொட்டுப்பார்த்துக் கேட்க முற்பட்டால் நிச்சயம் மனச்சாட்சி சரியான பதிலைச் சொல்லும். ஜனநாயகம் என்பது வெறும் பெயரளவிலேயே காணப்படுகிறது. தேர்தல் காலம் உட்பட சகல மேடைப் பேச்சுகளுக்கும் குறிப்பாக, அரசியல்வாதிகளுக்கு "ஜனநாயகம்" என்ற சொல் சிம்ம சொப்பனமாகவே தெரியும். ஜனநாயகத்தின் பேரால் இந்த நாட்டின் மக்கள் கூட்டம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

பௌத்த சிங்கள இனம், தம்மோடு வாழும் சிறுபான்மை தமிழ், முஸ்லிம் சமூகங்கள் மீது காலாதிகாலமாக இனவாதக் கண்ணோட்டத்துடனேயே நோக்கி வந்துள்ளது. பௌத்த சிங்கள மக்கள் பெரும்பான்மை இனம் என்றும் ஏனைய இனங்கள் சிறுபான்மை இனத்தவர் என்றும் முத்திரை குத்தப்பட்டிருப்பதை வெளிப்படையாகவே காணலாம். பெரும்பான்மை இனம், சிறுபான்மை இனங்களை சகோதர பாசத்துடன் நோக்குவதைவிட, தங்களின் அடிமைகளாக பார்க்கும் உணர்வே வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அரசியல் கட்சிகளும் தலைமைகளும் 50 வருடங்களாக தேசிய ஐக்கியம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றனவே தவிர, தேசிய ஐக்கியத்தை உருவாக்குவதில் அக்கறை காட்டியதாகவே தெரியவில்லை. 1946 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி அன்று இந்த நாட்டில் மக்கள் இன ரீதியாக நோக்கப்படக்கூடாது என்றும் "நாம் இலங்கையர்" என்ற அடிப்படையிலேயே ஒன்றுபட வேண்டுமெனவும் பிரகடனப்படுத்தியது. ஆனால், காலப்போக்கில் அந்த ஜனநாயக அரசியல் அணியான ஐக்கிய தேசிய கட்சிக்குள்ளும் ஒருசில இனவாதிகள் புகுந்து தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகத்தை ஓரக்கண்களால் பார்க்கத் தொடங்கினர். இந்த நிலை இன்றும் கூட நீடித்த வண்ணமே காணப்படுகின்றது.

எல்லா பேரினவாதக் கட்சிகளுக்குள்ளும் தமிழ், முஸ்லிம் சமூகங்களுக்கு பின்னுரிமைதான் கிடைக்கின்றது. எவருமே தமிழ், முஸ்லிம் இனக்குழுக்களுக்கு முன்னுரிமை கொடுக்காது விட்டாலும், சமாந்தரமான உரிமையையாவது தருவது குறித்து சிந்திக்க மறுத்துவருகின்றன.

நாட்டின் தேர்தல் முறை கூட தமிழ், முஸ்லிம் சிறுபான்மை சமூகங்களை பாதிக்கும் விதத்திலேயே மீளக் கொண்டுவரப்போவதானதொரு அச்சம் மீண்டும் ஏற்பட்டுள்ளது. விகிதாசாரத் தேர்தல் முறை கூட வடக்கு, கிழக்குக்கு வெளியே வாழும் சிறுபான்மை முஸ்லிம்களை பாதிப்பதாகவே அமைகின்றது. ஒரு மாவட்டத்தில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் ஒன்றுபட்டு ஒரு வேட்பாளருக்கு மட்டும் வாக்களித்தாலும் கூட தமக்கென ஒரு முஸ்லிம் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ள முடியாத அவலம் தான் காணப்படுகின்றது.

இந்த நாட்டில், வாழும் முஸ்லிம்களில் 1/3 பங்கினரே வடக்கு கிழக்கில் வாழ்கின்றனர். மீதமுள்ள 2/3 பங்கினர் வடக்கு, கிழக்குக்கு வெளியே முழு நாட்டிலும் சிதறுண்ட நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இந்த சமூகக் கூட்டத்தால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமக்கென ஒரு பிரதிநிதியை தேர்ந்தெடுத்துக் கொள்வது பகற்கனவானதாகவே அமைகின்றது. அப்படியும் ஒரு முஸ்லிம் பிரதிநிதி தேர்ந்தெடுக்கப்படுமானால் அது பெரும்பான்மைச் சமூகத்தின் மனங்களை வென்றெடுப்பதன் மூலமே சாத்தியப்படக்கூடியதாக இருக்கும்.

எனவே, வட,கிழக்குக்கு வெளியே வாழும் தமிழ், முஸ்லிம் சமூகங்களின் அரசியல் உரிமை, பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்பட்டே ஆக வேண்டும். தேர்தல் சீர்திருத்தம் தொடர்பான பாராளுமன்றத் தெரிவுக்குழு அதன் சிபாரிசு அறிக்கையை கூடிய விரைவில் பூர்த்தி செய்யவிருக்கின்றது. இந்த நேரத்தில் காலம் கடத்திக் கொண்டு போகாமல் தமிழ், முஸ்லிம் புத்திஜீவிகளும், அரசியல் தலைமைகளும், சிறுபான்மைக் கட்சிகளும் கண்களை அகலத் திறந்து செயற்பட முன்வர வேண்டும்.

அண்மைக் காலத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸுடன் மூன்று சந்திப்புக்களை நடத்தி இருப்பதாகவும் ஏனைய சிறுபான்மைக் கட்சிகளுடன் அடுத்தடுத்து பேசவிருப்பதாகவும் அதன் செயலாளர் எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன், தமிழ்த்தரப்புகளுடன் இது குறித்து விரிவாகவும் ஆழமாகவும் கலந்துரையாடத் தீர்மானித்திருப்பதாகவும் அதேசமயம், ஐக்கிய தேசியக்கட்சியின் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மிலிந்த மொரகொட உள்ளிட்ட உயர்மட்டத்தினருடன் இது குறித்து விரிவாக ஆராயப்பட்டு வருவதாகவும் ஹஸன் அலி குறிப்பிட்டுக் காட்டினார்.

எதிர்வரும் 10 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தேர்தல் சீர்திருத்த பாராளுமன்றத் தேர்வுக்குழு முன்னால் ஆஜராகி பல்வேறுபட்ட யோசனைகளடங்கிய ஆவணத்தை சமர்ப்பித்து பேசவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இவற்றையெல்லாம் நோக்கும் போது முஸ்லிம் சமூகம் சிறுகணமேனும் கண்மூடிவிடக்கூடாது. புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் மெத்தனப் போக்குடன் நடந்துகொள்ள முற்பட்டால், அதன் பின்விளைவானது முஸ்லிம் சமுதாயத்தை இந்நாட்டில் அரசியல் அநாதைகளாக்கிவிடும் அபாயம் கண்முன்னே தெரிவதை எச்சரித்து வைக்க விரும்புகின்றோம்.

இதேவேளை, முஸ்லிம் புத்திஜீவியும் வடகிழக்கு முஸ்லிம் சமாதானப் பேரவையின் தலைவருமான எம்.ஐ.எம். முஹைதீன் இலங்கை முஸ்லிம்களும் தேர்தல் முறைசார் சீர்திருத்தங்களும் என்ற ஆவணத்தை முஸ்லிம் சமூகத்தின் முன் சமர்ப்பித்துள்ளார்.

இந்த ஆக்கபூர்வமான ஆய்வில் அவர் பல்வேறுபட்ட விடயங்களை அறிக்கையிட்டுக் காட்டியிருக்கின்றார். முஸ்லிம் புத்திஜீவிகள் தற்போதைய தருணத்தில் அதனைப் பயன்படுத்திக் கொள்ள முயற்சிப்பது அவசியம் என்பதை கோடிட்டுக் காட்ட விரும்புகின்றோம்.

இந்த ஆய்வறிக்கையில் ஜனாப் முகைதீன் தேர்தல் மறுசீரமைப்புக் குழுவுக்கு சில பிரேரணைகளை முன்மொழிந்துள்ளார். அவசியம் கருதி அந்தப் பிரேரணைகளை அப்படியே தர விளைகின்றேன். புத்திஜீவிகளின் கவனத்துக்கு இந்தக் காத்திரமான பிரேரணைகள் உதவும் என்று நம்புகின்றேன்.

பிரேரணைகள்:

A. பொதுஜன ஐக்கிய முன்னணித் தேர்தல் விஞ்ஞாபனத்துக்கு மக்கள் அளித்த பணிப்பாணைக்கு உறுதியான சமர்ப்பணத்தோடு செயலாற்ற வேண்டுமென்று முஸ்லிம்கள் வலியுறுத்துகின்றனர்.

B.புதிய அரசியலமைப்பின் கீழான தேர்தல் சீர்திருத்தங்கள் சகல ஜன சமூகத்தினருக்கும் சமமான வாய்ப்புகளை வழங்குதல் வேண்டும். பாராளுமன்றம் உண்மையான தேசிய இனத்துவ விகிதாசாரத்தைப் பிரதிபலிக்க வேண்டும்.

C.ஆகக்கூடுதலான அதிகாரப் பகிர்வை நோக்கும்போது பாராளுமன்றம் அங்கத்தவர் தொகை பெரிதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. தற்போது உள்ள அங்கத்தவர்கள் தொகையான 225 உம் குறைக்கப்படுதல் வேண்டும்.

D. 220 மக்கள் பிரதிநிதிகள் சபை அங்கத்தினர்கள் அரைப்பங்கினர். ஆட்புலத் தேர்தல் தொகுதிகளிலிருந்து எப்.பீ.பீ. முறை மூலமும், எஞ்சிய அரைப் பங்கினர் தேசிய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் கட்சிகள்/ குழுக்களிலிருந்தும் தெரிவு செய்யப்படல் வேண்டும்.

E. இரண்டு வாக்குகள் ஒன்று ஆட்புலத் தேர்தல் தொகுதிகளுக்கு எப்.பீ.பீ. முறை மூலம் அபேட்சகரைத் தெரிவு செய்வதற்கும், மற்றது தேசிய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் கட்சியை/ குழுவைத் தெரிவு செய்தற்கும்.

F.பாராளுமன்றம் மக்களின் உண்மையான வாக்களித்தற் பாங்கைப் பிரதிபலித்தல் வேண்டும். ஒவ்வொரு கட்சியும்/ குழுவும் பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் மொத்த அங்கத்தவர்களைத் தீர்மானிக்கும் காரணி தேசிய விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் பெறப்பட்ட வாக்குகளாயிருத்தல் வேண்டும்.

G.. ஓர் அங்கத்தவர் தேர்தல் தொகுதிகள் 75X1 = 75 அங்கத்தவர்கள். இரு அங்கத்தவர்கள் தேர்தல் தொகுதிகள் 10X2 = 20 அங்கத்தவர்கள். மூன்று அங்கத்தவர் தேர்தல் தொகுதிகள் 5X3 = 15 அங்கத்தவர்கள். மொத்த ஆட்புலத் தேர்தல் தொகுதிகள் 90, 110 அங்கத்தவர்கள்.

H. (II) பாராளுமன்றத்தின் 220 ஆசனங்கள் பின்வருமாறு ஒதுக்கியளிக்கப்படல் வேண்டும்.

I. விருப்பு வாக்குகள். 5% வெட்டுப்புள்ளி. மற்றும் மாவட்ட போனஸ் என்பவை ஒழிக்க வேண்டும்.

J. (Iஉடனடியாக எல்லை மீள்வரைவு தெரிவுக்குழுவொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.

(II) எல்லை மீள்வரைவுக்கான பாராளுமன்றத் தெரிவுக் குழு சிறுபான்மை சமூகத்தினரின் தேசிய விகிதாசார பிரதிநிதித்துவம் சாத்தியமாகும். வழியில் பொருத்தமான பிரதேசங்களில் பல அங்கத்தவர் தேர்தல் தொகுதிகளை உருவாக்கும் அதிகாரம் கொண்டதாயிருத்தல் வேண்டும்.

(III) தேர்தல் தொகுதிகளை மீள்வரைவு செய்யும்போது தேர்தல் பலம் குறைவாயிருப்பது, சிறுபான்மையோருக்கு தேசிய இனத்துவ விகிதாசாரத்தின் பிரகாரம் போதிய பிரதிநிதித்துவம் வழங்குவதற்கு அனுகூலமான வகையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு செயற்பட வேண்டும்.

(IV) கட்சி தாவுதலும் தடை செய்யப்படல் வேண்டும்.

Please Click here to login / register to post your comments.